(3906)
புண்ணியம் செய்துநல்ல புனலொடு மலர்கள்தூவி
எண்ணுமி னெந்தைநாமம் இப்பிறப் பறுக்குமப்பால்
திண்ணம்நாம் அறியச்சொன்னோம் செறிபொழில் அனந்தபுரத்து
அண்ணலார் கமலபாதம் அணுகுவார் அமரராவார்.
பதவுரை
|
புண்ணியம் செய்து நல்ல புனலோடு மலகள் தூவி |
– |
பக்தி கொண்டு நல்ல தீர்த்தத்தையும் புஷ்பங்களையும் பணிமாறி |
|
செறி பொழில் |
– |
செறிந்த சோலைகளையுடைய திருவனந்தபுரத்திலே அனந்தபுரத்து |
|
அண்ணலார் |
– |
ஸ்வாமியினுடைய |
|
எந்தை நாமம் எண்ணுமின் |
– |
எம்பெருமானது திருநாமங்களைச் சிந்தனை செய்யுங்கள். (அப்படிச் செய்யுமளவில்) |
|
கமலம் பாதம் |
– |
திருவடித் தாமரைகளை |
|
அணுகுவார் |
– |
கிட்டுமவர்கள் |
|
இப்பிறப்பு அறுக்கும் அப்பால் |
– |
இக் கொடிய ஸம்ஸாரத்தைத் தொலைத்தருள்வன்மேலும், |
|
அமரர் ஆவார் |
– |
நித்யஸூரிகளோடொப்பர்; |
|
நாம் திண்ணம் அறிய சொன்னோம் |
– |
(இதனை) நாம் திடமாகத் தெரிவித்தோம். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
* * * ….. திருவனந்தபுரத்தெம்பெருமானது திருவடிகளைக் கிட்டுமவர்கள் நித்யஸூரி துல்யராகவர்களென்பது திண்ணம்; ஆகவே அங்கு நீங்களும் ஆச்ரயிக்கப் பாருங்களென்றுரைக்கிறார். புண்ணியம் செய்து….. புண்யமென்கிற ஸாமாந்ய சப்தமானது இங்கு விசேஷத்திலே பரியவஸித்து பக்தியைச் சொல்லுகிறது. அல்லது ’ காரியே காரணோபசாரம்’ என்னும் வழக்கின்படி பக்தி புண்யபலமாகையாலே காரணமான புண்யத்தைச் சொன்னதும் அதன் பலனான பக்தியைச் சொல்லுகிறதென்று இவ்வழியாலும் பொருள் கொள்ளலாம். நல்ல புனலோடு மலர்கள தூவி….. நல்ல புனலென்று கங்கா தீர்த்தத்தையும் காவேரி தீர்த்தத்தையும் கொண்டுவரச் சொல்லுகிறதன்று; நல்ல புனலென்றது சுத்த ஜலம் என்றபடியாய், ’ சுத்த கங்கை’ என்றால் யமுனை ஸரஸ்வதி முதலிய இதர நதிகள் கலசாத வெறுங்கங்கை என்று பொருளாவது போல, ஏலம் லவங்கம் முதலிய இதர வஸ்துக்கள் சேராத வெறும் தீர்த்தம் என்று வாறாம். இதனால் ஆராதனையில் அருமையின்மை தோற்றும். கீதையில் * பத்ரம் புஷ்பம் பலம் தோயம்* என்று வெறும் தீர்த்தத்தையன்றோ அவன்றானும் விரும்பிற்று. புனலோடு என்றவிடத்து, ஓடு….. ளும்மைப் பொருளது; புனலையும் மலர்களையும் பணிமாறி என்ற படி எந்தை நாமம் எண்ணுமின்…. இஙகே ஈட்டு ஸ்ரீஸூக்தி; “ இன்றிவன் அம்மே யென்னுமாபோலே திருநாமம் சொல்லும் போது ஒரு அதிகார ஸம்பத்தி தேட வேண்டா. ஜீயர் பட்டரை ’திருநாமம் சொல்லும் போது ப்ரயதனாய்’ கொண்டு சொல்ல வேணுமோ? என்று கேட்க; க்கங்கையிலே முழுகப் போமவனுக்கு வேறோரு உவர்க்குழியிலே முழுகிப் போக வேணுமோ? மேலுண்டான நன்மையைத் தருகிற விது அதிகாரி ஸம்பத்தியையும் தரமாட்டாதோ?’ என்றருளிச் செய்தாராம். திருநாமம் சொல்லுகைக்கு ருசியேயாயிற்று வேண்டுவது; அவர்களே அதிகாரிகள்.’‘
எந்தை நாமம் எண்ணினால் அதனால் விளையும் பயன் சொல்லுகிறது இப்பிறப்பறுக்கும் என்று. * தீண்டாவழும்புஞ் செந்நீரும் சீயும் நரம்பும் செறிதசையும் வேண்டா நாற்றமிகுமுடல்* என்று பரமஹேயமாகச் சொல்லப்பட்ட தேஹஸம்பந்தத்தை அறுக்கும். அப்பால் என்றதற்கு அமரராவார் என்றதில் அந்வயம்.
English Translation
Those who seek the Lord’s feet in fragrant Tiruvanatapura-Nagar, and worship him with holy water and fresh flowers and contemplate on his name, will end this life and become celestial. We know and say this with certainty
