(2232)

(2232)

மதிக்கண்டாய் நெஞ்சே மணிவண்ணன் பாதம்,

மதிக்கண்டாய் மற்றவன் பேர் தன்னை, – மதிக்கண்டாய்

பேராழி நின்று பெயர்ந்து கடல்கடைந்த

நீராழி வண்ணன் நிறம்.

 

பதவுரை

நெஞ்சே

மனமே!

மணி வண்ணன் பாதம்

நீலமணிவண்ணனான எம்பெருமானது திருவடிகளே

மதி கண்டாய்

அநுஸந்திக்கக்கடவாய்

பேர் ஆழி நின்று பெயர்ந்து

பெரிய திருப்பாற் கடலில் நின்றும் துயில் விட்டெழுந்து

கடல் கடைந்த

தேவர்களுக்கு அமுதங்கொடுக்க அக்கடலைக் கடைந்த

மதிகண்டாய்

சிந்திக்கக்கடவாய்

மற்று

இன்னமும்

அவன் பேர் தன்னை

அப்பெருமானது திருநாமங்களை

நீராழி வண்ணன் நிறம்

கடல் வண்ணனான அப்பெருமானுடைய திருமேனி நிறத்தை

மதி கண்டாய்

நினைக்கக்கடவாய்

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- இப்பாட்டில் ‘நெஞ்சே!‘ என்று நெஞ்சை மாத்திரம் விளிப்பதாயிருந்தாலும். நெஞ்சுக்கு அடுத்ததான வாக்கையும், வாக்குக்கு அடுதத்தான உடலையும் விளிப்பதாகவுங் கொள்ளவேணும் “யத் மநஸா த்யாயதி தத் வரிசா வததி தத் கர்மணா கரோதி“ என்று வேதமுரைத்த கட்டளையிலே மன்மொழி மெய்களுக்கு ஒரு சேர்த்தியுண்டு. அம்மூன்று கரணங்களுக்கும் காரியம் விதிக் கிறாரிப்பாட்டில். ‘மதிக்கண்டாய்‘ என்பதே மூன்றிடத்தும் க்ரியாபதமாயினும் இடத்துக்குத் தக்கபடி பொருள் வாசி கொள்ளவேணும் மனமே! நீராழிவண்ணனது திருமேனி நிறத்தையே நீ சிந்திக்கக்கடவாய் வாக்கே! மணிவண்ணன் திருநாமங்களையே நீ சொல்லிக்கொண்டிருக்கக்கடவாய், தலையே! மணிவண்ணன் திருவடிகளையே நீ அணிந்துகொண்டிருக்கக் கடவாய் என்று இங்ஙனே யோஜிப்பது அழகியதாம்.

பேராழிநின்று பெயர்ந்து கடல்கடைந்த 1. “அறிதுயி லலைகடல் நடுவே ஆயிரஞ்சுடர்வாய் அரவணைத்துயின்றான்“ என்கிறப்படியே திருப்பாற்கடலில் சேஷசயனத்தின் மீது திருக்கண்வளர்ந்தருளுமழகைக்கண்டு 2. “ஏரார்கோலநதிகழக கிடந்தாய் கண்டேனெம்மானே! “என்றும். 3. “அம்மாமலர்க்கண் வளாகின்றானே என்னான செய்கேனே“ என்றும் ஈடுபட்டு மங்களாசாஸ்நம் பண்ணவேண்டியிருக்க அது செய்யாது. 4. “பேணலமில்லாவரக்கர் முந்நீர பெரும்பதிவாய் நீண்கர் நிளொரிவைத்தருளா யென்று, நின்னை விண்ணோர் தாள் நிலைத்தோய்ந்து தொழுவர் நிர்மூர்த்தி பலகூற்றிலொன்று காணுலுமாங்கொலென்றே?“ என்று நம்மாழ்வார் வயிறுபிடித்துப் பேசினபடியே தேவதைகள் சென்று பெருமானே! எழுந்திருந்து உடம்புநோவாக் காரியஞ்செய்து எங்கட்கு ஆகவேண்டியதைத் தலைக்கட்டிக்கொடு என்று பிரார்த்திப்பவர்களேயன்றி ஸ்வப்ரயோஜநத்தோடுகூட எம்பெருமான் திருமேனியிலும் சிறிது கண் வைப்பவர்களேயல்லர், அமுதமளிக்கக் கடல்கடைந் தருளுங்காலத்தில் ‘உப்புச்சாறு எப்போது கிளரப்போகிறது!‘ என்று தேவதைகள் கண்ணைக் கவிந்துகொண்டு அதைக் கண்டுகொண்டிருந்தார்களேயன்றி, தோளுந் தோள்மாலையுமாக எம்பெருமான் கடல் கடைந்தருளுமழகைச் சற்றேனும் உற்று நோக்கினவர்களல்லர் அக்குறைதீர அப்போதைய அழகை நெஞ்சே! இன்று நீ சிந்தியாய் என்கிறார்.

 

English Translation

Always remember the Gem-Hued Lord’s feet, O Heart! Always remember his names as well, Always remember the hue of the Lord who churned the ocean, -the ocean’s dark hue.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top