(2230)
மலையேழும் மாநிலங்க ளேழும் அதிர,
குலைசூழ் குரைகடல்க ளேழும், – முலைசூழ்ந்த
நஞ்சுரத்துப் பெண்ணை நவின்றுண்ட நாவனென்று,
அஞ்சாதென் னெஞ்சே அழை.
பதவுரை
|
என் நெஞ்சே |
– |
எனது மனமே! |
|
மலை ஏழும் |
– |
ஸப்த குலபர்வதங்களும் |
|
மா நிலங்கள் ஏழும் |
– |
ஸப்தத்வீபங்களும் |
|
குலை சூழ் குரை கடல்கள் ஏழும் |
– |
கரையாலே சூழப்பட்டு ஒலிசெய்கிற ஸப்த ஸாகரங்களும் |
|
அதிர |
– |
அதிரும்படியாக |
|
நாவன் என்று |
– |
திருப்பவளத்தை யுடையவளே!“ என்று சொல்லி |
|
முலை சூழ்ந்த நஞ்சு உரத்து பெண்ணை |
– |
“முலையில் வியாபித்த விஷத்தாலுண்டான கொடுமையையுடைய (பூதனையென்னும்) பேய்மகனை |
|
நவின்று |
– |
(முலையுண்ணும்போது) இடையிடையே மழலைச் சொற்கள் சொல்லிக்கொண்டே |
|
உணட |
– |
உண்டுமுடித்த |
|
அஞசாது |
– |
கூசாமல் |
|
அழை |
– |
வாய்விட்டுக்கூப்பிடு |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- நெஞ்சே! எம்பெருமான் செய்தருளின மஹோபகாரங்களை எடுத்துரைக்கக் கேட்டாயன்றோ, இப்படிப்பட்ட மஹோபகாரங்களை அநுஸந்தித்தால் நாம் வாயடைத்துக் கிடக்கக் கூடுமோ? உலகங்களெல்லாம் அதிரும்படி அப்பெருமான் திருநாமங்களைச் சொல்லிக் கதறவேண்டாவோ, மிகபெரியோனான் அவனை மிக நீசரான நாம் எப்படி வாய்கொண்டு பேசலாம் என்று நீ அஞ்சியிருக்கிறாய் போலும், அச்சத்தை ஒழித்திட்டு உரக்கக் கூப்பிட்டழை என்கிறார்.
‘மலையேழும் மாநிலங்களேழும் குலைசூழ்குலைகடல்களேழும் அதிர‘ என்ற விது ‘அழை‘ என்ற வினைமுற்றிலே அந்வயிக்கும். “விண்ணெல்லாங் கேட்க அழுதிட்டாய்“ என்றாற்போலே ஸப்தலோகமுங்கேட்கக் கூப்பிடவேணுமென்கிறார். நாடுநகரமும் நன்கறிய பகவத்கீர்த்தநம் பண்ணவேணுமென்கை.
மலையேழும் – ஸப்தகுல பர்வதங்களாவன – “இமயம், மந்தரம், கைலை, வடவிந்தம், நிடதம், ஏமகூடம், நீலகிரியெனக், குலவரையேழுங் கூறுமென்ப“ என்று திவாகரத்திற் சொல்லப்பட்டவை.
மாநிலங்களேழும் – ஸப்தத்வீபங்களைச் சொல்லுகிறது அவையாவன – “நாவலந்தீவே இறலித்தீவே, குசையின்தீவே கிரவுஞ்சத்தீவே, சான்மலித்தீவே தெங்கின்தீவே, புட்கரத்தீவே யெனத்தீவேழே.“ எனப்பட்டவை.
குரைகடல்களேழும் – “உவரோடு கரும்பு மது நெய் தயிர் பால் புனல் மா கடலேழென வகுத்தனர் புலவர்.“
நவின்றுண்ட நாவன் – சிறுபிள்ளைகள் தாயினிடத்து முலையுண்ணும்போது ஸந்தோஷமிகுதியினால் இடையிடையே குதலைச்சொற்களைச் சொல்லிக்கொண்டு முலையுண்பதுபோல், கண்ணபிரானும் பூதனையை மெய்த்தாயாகவே பாவித்து மகிழ்ச்சியுடன் மலையுண்பதாகக் காட்டிக்கொள்ள மழலைச் சொற்களைச் சொன்னமையை ‘நவின்று‘ என்றதனால் வெளியிடுகிறார். நாவன் – அண்மைவிளி, நாவனே என்கை.
English Translation
Let the seven hills, the seven continents and the seven oceans resound with his name, O Hearth! Call out loud and clear, “O Lord who sucked the poison breast of the ogress with joy!” Do not be afraid.
