(2217)

(2217)

சிறியார் பெருமை சிறிதின்க ணெய்தும்,

அறியாரும் தாமறியா ராவர், – அறியாமை

மண்கொண்டு மண்ணுண்டு மண்ணுமிழ்ந்த மாயனென்று,

எண்கொண்டேன் னெஞ்சே. இரு.

 

பதவுரை

சிறியார்

(இயற்கையான மேன்மை சிறிதுமில்லாமல்) அற்பரான ஸம்ஸாரிகளுடைய

பெருமை

(நானே ஈச்வரன் என்று அஹங்கரிப்பதால் வருகிற) மேன்மையானது

சிறிதின் கண் எய்தும்

(தமக்குப்பழமையாயுள்ள) தாழ்விலேயே கொண்டு சேர்ப்பிக்கும்;

அறியாரும்

அவிவேகிகளும்

(தங்களை ஸர்வஜ்ஞராக நினைத்திருந்தார்களாகிலும்)

தாம் அறியார் ஆவர்

(நன்மை தீமைகளைத்) தாங்கள் அறியாதவர்களாகவே ஒழிந்திடுவர்;

என் நெஞ்சே

என் மனமே!.

அறியாமை

பிறர் அறியாதபடி

மண்கொண்டு

(மாவலியிடத்தில்) பூமியைப் பெற்றவனாயும்

மண் உண்டு

இந்தப் பூமியை (ப்ரளயத்திலே)திருவயிற்றில் வைத்தவனாயும்

மண் உமிழ்ந்த

(பிறகு) அந்தப்பூமியை வெளிப்படுத்தினவனாயுமிருக்கிற

மாயன் என்று

ஆச்சர்யகரனான எம் பெருமான் என்று

எண்கொண்டு

இடைவிடாது கருதி

இரு

(அவனைப்பற்றின நமக்கு ஒரு குறை இல்லையென்று) நிர்ப்பரனாக இருப்பாயாக.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- கீழ்ப்பாட்டில் நாட்டாருடைய செயலை நினைந்து வெறுத்த ஆழ்வார் இதில் தம் திருவுள்ளத்தை நோக்கி ‘நெஞ்சே! உலகத்தார் ஒழிகிறபடி ஒழிக; நீ எம்பெருமானுடைய சேஷ்டிதங்களையே எப்போதும் சிந்தித்துக் கொண்டிரு’ என்று உபதேசிக்கிறார்.

சிறியார் பெருமை சிறிதின்கண் எய்தும் = உலகத்தில், இயற்கையாகச் சிறிதேனும் மேன்மையுடையவர்களாயிருந்தால் அவர்கள அதிகப்படியாக மேன்மையை ஏறிட்டுக்கொண்டாலும் ஒருவாறு ஏற்கும்; சிறிதும் மேன்மையற்றவர்கள் ‘நாமே பெரியோம்; நம்மிற் பெரியாரில்லை’ என்று மார்பு நெறித்தால் அந்த அஹங்காரமானது அவர்களுடைய சிறுமையை நன்கு ஸ்தாபித்துவிடும்.  ஆகையாலே அற்ப தேவைகளான பிரமன் முதலியோரைப் பெருந்தலைமை யுடையவராக மதிப்பது நம்மைத் தாழ்ந்த நிலைமையிற் சேர்ப்பிக்கு மென்றவாறுமாம்.  எய்தும் – எய்துவிக்கும்; பிறவினையில் வந்த தன்வினை.  இவ்வாறு வருவதனை வடநூலார் ‘அந்தர்ப்பாவிதணிச்’ என்பர்.

அறியாரும் தாமறியாராவார் =  ஒன்றுந் தெரியாத மூடர்கள் எல்லாமறிந்தவர்கள் போலப் பாவித்திருந்தார்களாகிலும், அப்படிப்பட்டவர்கள் நன்மைகளைத் தாங்களுமறியார்கள்; பிறர் போதித்தாலும் கேட்டு உணரமாட்டார்கள்; ஆகவிப்படி சிறியாரும் அறியாரும் மலிந்து கிடக்கிற இந்நிலத்திலே,  நெஞ்சே! நீ அவர்களின் வகுப்பில் சேராமல் பகவத் விஷயத்தையே சிந்தித்திரு – என்கிறார் பின்னடிகளால்.

அறியாமை = எதிர்மறை வினையெச்சம்.  ‘திருமால்தான் இப்படி வாமந வேஷங்கொண்டு யாசகனாய் வந்தா’ னென்று பிறர் அறியாதவண்ணம் என்றபடி.

 

English Translation

Praising small gods can only give small ends.  The ignorant ones will remain forever ignorant. O Heart of mine1 Always recall the wonder Lord who mysteriously measured the earth, swallowed it and brought it out again.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top