(2112)
புரியொருகை பற்றியோர் பொன்னாழி யேந்தி,
அரியுருவும் ஆளுருவுமாகி, – எரியுருவ
வண்ணத்தான் மார்ப்பிடந்த மாலடியை அல்லால்,மற்
றெண்ணத்தா னாமோ இமை?
பதவுரை
|
ஒரு கை புரி பற்றி |
– |
ஒரு திருக்கையிலே வலம்புரிச் சங்கத்தை ஏந்தி |
|
(மற்றொரு திருக்கையிலே) |
||
|
ஓர் பொன் ஆழி ஏந்தி |
– |
ஒப்பற்ற அழகிய திருவாழியை ஏந்தி |
|
ஆள் உருவம் அரி உருவம் |
– |
நரமும் சிங்கமும் கலந்த வடிவை யுடையனாய்க் கொண்டு |
|
எரி உருவம் வண்ணத்தான் |
– |
அக்நியின் வடிவம்போலே [கண்ணெடுத்துக்காண முடியாத] வடிவத்தையுடையனான இரணியனுடைய |
|
மார்பு |
– |
மார்பை |
|
இடந்த |
– |
நகத்தால் குத்திப்பிளந்து போட்ட |
|
மால் |
– |
திருமாலினுடைய |
|
அடியை அல்லால் |
– |
திருவடிகளைத்தவிர |
|
மற்று |
– |
வேறொரு விஷயத்தை |
|
இமை |
– |
க்ஷணகாலமேனும் |
|
எண்ணத்தான் ஆமோ |
– |
நினைப்பதற்கேனும் முடியுமோ? [முடியாது.] |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- அடியவர்கள் திறத்தில் எம்பெருமானுக்குண்டான பாரதந்திரியத்தையும் வாத்ஸல்யத்தையும் அநுஸந்தித்தால் அப்பெருமானைத் தவிர்த்து வேறொருவிஷயத்தை ஒரு நொடிப்பொழுதாகிலும் நினைக்க வழியுண்டோ? என்னவேண்டி, அப்பெருமான் பரமபக்தனாகிய ப்ரஹ்லாதனிடத்துள்ள வாத்ஸல்யத்தாலே செய்தருளின செயலையெடுத்துப் பேசுகிறார்.
புரியொருகைபற்றி = ‘வலம்புரி ‘ என்னும் பதத்தில் ‘வலம்’ என்பதை நீக்கி, புரியென்பதை மாத்திரம் இங்குப் பிரயோகித்திருப்பது நாமைகதேசத்தைகொண்டு நாமத்தை க்ரஹிக்கும் முறையாலென்க: ஸத்யபாமையைப் பாமையென்பதுபோல. எம்பெருமானுடைய அவதாரங்களெல்லாவற்றிலும் திவ்யாயுதங்களின் சேர்த்திக்குக் குறையில்லாமையாலே “புரியொருகைபற்றியோர் பொன்னாழியேந்தி” எனப்பட்டது. இத்திவ்யாயுதங்கள் சில அவதாரங்களில் மறைந்திருப்பதும் சில அவதாரங்களில் வெளித்தோன்றியேயிருப்பதும் காரணார்த்தமாகவாம் .
அசுரர்களுடைய உடல் நெருப்புநிறமா யிருக்குமாதலால் எரியுருவ வண்ணத்தான் என்ற சொல்லால் இரணியனைக் கூறினர். பாசுரத்தினிறுதியுலுள்ள இமை என்பதை வினைமுற்றாகக்கொண்டு உரைக்கவுமாம்; இதை ஆராய்ந்துபார் என்கை: நெஞ்சே!’ என்று வருவித்துக்கொள்க.
English Translation
The lovable Lord who bears a conch in one hand and a discus in the other, came as half-man-half-lion and destroyed the fierce Asura Hiranya’s mighty chest. Other than his feet, Is there anything to contemplate, worth the while?
