(2027)

(2027)

படைநின்ற பைந்தா மரையோடு அணிநீலம்

மடைநின் றலரும் வயலாலி மணாளா,

இடையன் எறிந்த மரமேயொத் திராமே,

அடைய அருளா யெனக்குன்ற னருளே.

 

பதவுரை

படை நின்ற

உழுபடையாகிய கலப்பையைக்கொண்டு உழும்போது அதில் அகப்பட்டு அழியாமல் தப்பியொதுங்கி நின்ற

பைந்தாமரையோடு

பசுமையான தாமரைக் கொடிகளும்

அணி நீலம்

அழகிய நீலோற்பலக்கொடிகளும்

மடை நின்று

(பின்பு களையாகப்பறித் தெறியப்பட்டு அங்ஙனம் எறியப்பட்ட இடமான) நீர்பாயும் மடையிலேகிடந்து

அலரும்

மலரப்பெற்ற

வயல்

கழனிகளை யுடைய

ஆவி

திருவாலியென்னுந் திருநகரியிலெழுந்தருளியிருக்கிற

மணாளா

மணவாளானென்னுந் திருநாம்முடைய எம்பெருமானெ!

இடையன் எறிந்த மரமே ஒத்து இராமே

(ஆடுமாடுகள் எட்டித் தழைமேயலாம்படி) இடையர்கள் (விரைந்து கையிற்கத்தி கொண்டு கிளைகளை வெட்டிச் சாய்க்கப்பெற்ற மரங்கள் போல யான் ஒருபுறம் உலராதபடி.

அடைய

நான் உன்னையடையும்படி

எனக்கு

எளியவனான அடியேனுக்கு

உன்தன் அருள்

உனது கருணையை

அருளாய்

அருளாய்

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- இவ்வாழ்வார்க்கு அதிஸமீபஸ்தனான வயலாலி யெம்பெருமான் “அடியேன் பிறந்தேன் பிறந்தபின்னை, வற்றாநீர்வயல்சூழ் வயலாலியம்மானைப். பெற்றேன் பெற்றதுவும் பிறவாமைப் பெற்றேனே” என்றும் “அணியாலி கைதொழுது, முன்னஞ்சேர்வல்வினைகள் போக முகில் வண்ணன், பொன்னஞசேர்சேவடிமேற் போதணியப்பெற்றோமே” என்றும் மிக ஈடுபட்டுக் கூறும்படி மிகப் பாங்கான வழிபடுகடவுளாதலால் இங்கு அப்பெருமானை விளித்த ‘எனக்கு உன்றன் அருள் அருளாய்’ என்கிறார்.

விளைநிலங்களில் கலப்பைகொண்டு சால்சாலாக உழும்போது இருபுறத்தும் உழுபடை செல்ல அதற்கு அறாமல் இடையிடையே கிடக்குமிடம் படை யெனப்படும். கலப்பைச் சாலில் அகப்படாமல் தப்பிப் படையென்னும் அந்நடு விடத்திலே நின்ற பசுமையான தாமரைக் கொடிகளும் அழகிய நிலோற்பலக் கொடிகளும் பின்பு பயிர்செய்பவர்களால் களையாகப் பறித்துப் புறத்திலே யெறியப்பட்ட இடமான நீர்பாய்மடையிற் கிடந்து மலருமென அந்நாட்டின் நிலவள நீர்வளச் செழுமை கூறியவாறாம்.  வற்றாநீர்வயல்சூழ் வயலாலியாதலால் இங்ஙனமாதல் கூடும். “மணி கெழுநீர் மருங்கலரும் வயலாலி” “மையிலங்கு கருங்குவளை மருங்கலரும் யைலாலி” “வம்பரா; பூவயலாலி” எனப் பிறவிடங்களிலும் இவ்வாழ்வார் அருளிச்செய்தல் காண்க.

மணாளன்-மணவாள னென்பதன் மரூஉ; கலியாணப்பிள்ளையென்று பொருள்படும். முணம் ஆளன் எனப்பிரியும். திருவாலியி லெம்பெருமான் அமிருதகடவல்லி நாச்சியாரை மணம்புரிந்த மணவாளத் திருக்கோலத்ததுடனே வந்து இவ்வாழ்வார்க்குக் காட்சிதந்து வலிய ஆட்கொண்டு மந்திரோபதேசஞ் செய்து அருள்புரிந்ததனாலும் மணவாளளெனத் திருநாமுமுடையன். இவ்வாழ்வார்தம்மைத் தலைமகளாகப் பாவித்து இப்பெருமானைத் தமக்கு மணவாளனாகக் கொண்டு சில திருமொழிகள் விண்ணப்பஞ் செய்திருந்தலும் உணர்க.

பின்னடிகளின் கருத்தாவது-ஆடுமாடுகள் எட்டித் தழைமேயலாப்படி இடையர்கள் சில மரங்களின் கிளைகளைக் கைக்கத்திகொண்டு பாதியளவு வெட்டிச்சாயவிட்டிருத்தல் இயல்பு. அம்மரம் ஒருசார்பசுமையாய் ஒருசார்உலர்ந்து கிடக்கும், அதுபோல நான் ஞானலாபத்தாலுண்டான மகிழ்ச்சியைப் பெற்றதனோடு பேறுகிடைக்கப் பெறாமையாலுண்டான வாட்டத்தையும் அடைந்திராதபடி எனக்கு அருள்செய்யவேண்டுமென்கிறார். “நீடுபன் மலர்மாலையிட்டு நின்னிணையடி தொழுதேத்து மென் மனம்வாட நீ நினையேல்………………………………… அணியாலியம்மானே!” என்றார் முன்னும். முழுவதும் ஆநந்தமே பெறும்படி அருள வேண்டுமென்றவாறு. வேர்ப்பறிந்த கொடியின் மலர்களும் போட்டவிடத்திலே செவ்வி பெறும்படி செய்யுந் தேசத்திலே வாழ்பவனாய் முதல் பறிந்ததற்குஞ் செவ்வி பெறுத்தவல்ல பரமசக்தியுக்தனான உனக்கு வேர்ப்பறியாது ஒருசாருலர்ந்தது மாத்திரமாயுள்ள மரத்துக்கு முழுவதும் பசுமையுண்டாம்படி செய்தல் எளிதே; ஆகவே, அம்மரம் போல ஒருபுறம் தளிர்த்து ஒருபுறம்வாடும் எனக்கு நீ பூர்ணாநத்தத்தை விளைக்கத்தட்டில்லையென இப்பரசரத்தின் நயமுணர்க. பல பொல்லாங்குகட்கு இடமான உடம்புடனே இவ்வுலகத்திலே யிருந்து தொண்டுசெய்தலினால் பூர்ணத்ருப்தியுண்டாகாமைபற்றி நான் பரமபதத்தில் உன்னையடையும்படி அருள்புரிய வேணுமென்ற வேண்டினாராயிற்று.

‘இடையனெறிந்த மரம்’ என்றதொடா; ஒரு பழமொழியாய் வழங்கிவந்த தென்பது “அடையப்பயின்றார்” என்று தொடங்கும் பழமொழிச் செய்யுளின் ஈற்றடியாக அத்தொடர் அமைந்திருத்தலால் வந்த ‘ஆற்றங்கரை மரம்’ ‘காற்றத்திடைப்பட்ட கலவர் மனம்’ ‘வெள்ளத்திடைப்பட்ட நரியினம்’ ‘வேம்பின்புழு வேம்பன்றியுண்ணாது’ என்பனவும் முதமொழியாதலைப் பழைய நூல்களிற் காணலாமென்ப.

 

English Translation

O Bridegroom Lord of fertile Tiruvali surrounded by wetlands where red lotuses and blue lilies blossom in profusion! That I may not be like a free chopped for the grazing animals, I seek your grace alone.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top