(1867)
அங்கவ் வானவர்க் காகுலம் தீர அணியி லங்கை அழித்தவன் றன்னை
பொங்கு மாவல வன்கலி கன்றி புகன்ற பொங்கத்தங் கொண்டு,இவ் வுலகில்
எங்கும் பாடிநின் றாடுமின் தொண்டீர். இம்மை யேயிட ரில்லை, இறந்தால்
தங்கு மூர்அண்ட மேகண்டு கொண்மின் சாற்றி னோம்தடம் பொங்கத்தம் பொங்கோ.
பதவுரை
|
தொண்டீர் |
– |
பகவத் பக்தர்களே!, |
|
அங்கு வானவர்க்கு ஆகுலம் தீர |
– |
தேவலோகத்திலுள்ள தேவதைகளின் மனக்குழப்பம் தீரும்படி |
|
அணி இலங்கை அழித்தவன் தன்னை |
– |
அழகிய லங்காபுரியை அழித்தருளின பெருமான் விஷயமாக, |
|
பொங்குமா வலவன் கலிகன்றி |
– |
கிளர்த்தியையுடைய ‘ஆடல்மா’ என்னுங் குதிரையை நடத்த வல்லவரான ஆழ்வார் |
|
புகன்ற |
– |
அருளிச்செய்த |
|
பொங்கத்தம் கொண்டு |
– |
‘பொங்கத்தம் பொங்கோ’ என்ற இந்த வெற்றியைப் பாசுரங்களைக் கொண்டு |
|
இ உலகினில் |
– |
இவ்விபூதியிலே |
|
எங்கும் |
– |
எல்லாவிடங்களிலும் |
|
பாடி நின்று ஆடுமின் |
– |
பாடிக்கொண்டு கூத்தாடுங்கள், |
|
(இது செய்தால்) |
||
|
இம்மையே இடல் இல்லை |
– |
(உங்கட்கு) இப்பிறவியில் ஒருவகைத்துன்பமு முண்டாகாது, |
|
இறந்தால் |
– |
மரணமானபின்பு |
|
தங்கும் ஊர் |
– |
நீங்கள் போய்ச்சேர்ந்து நிலை நிற்குமிடம் |
|
அண்டமே |
– |
பரமபதமேயாம், |
|
கண்டு கொண்மின் |
– |
(இதனை அநுபவத்தாலே) கண்டு கொள்ளுங்கள் |
|
சாற்றினோம் |
– |
இஃது எல்லாருமறியச்சொன்னோம் |
|
தடம் பொங்கத்தம் பொங்கோ |
– |
வெற்றியோ வெற்றி |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- “அங்கவ்வானவர்க்கு“ எனப்பாடம் வழங்கும். ஆகுலம் -வட சொல் விகாரம். (பொங்குமாவலவன்) இவ்வாழ்வார் தனதாகக் கொண்டு ஏறிச் செலுத்திய சிறந்த குதிரைக்கு ‘ஆடல்மா’ எனப் பெயர் வழங்கும், அதுவே இங்குப் பொங்குமா எனப்பட்டது. வலவன் – வல்லவன், ஸமர்த்தன், பாகன் என்றபடி.
பொங்கத்தம் – ‘தடம் பொங்கத்தம் பொங்கோ’ என்றதன் ஏகதேசாநுகாரம்.
கீழ் ஒன்பது பாசுரங்களின் முடிவிலும் “தடம் பொங்கத்தம் பொங்கோ“ என்றது இராமபிரான் வெற்றியை ராக்ஷஸர்கள் எடுத்துரைத்தபடி. இப்பாட்டின் முடிவில் ‘தடம் பொங்கத்தான் பொங்கோ’ என்றது எம்பெருமான் வெற்றியை ஆழ்வார்தாம் உரைக்கிறபடி. இத்திருமொழியானது இவ்விருள் தருமா ஞாலத்தைத் தோற்பித்து வெற்றி பெறும்படியைச் சொல்லுகிற தென்பாருமுளர்.
English Translation
Devotees! In the yore the Lord destroyed the city of Lanka and rid the gods of their misery. Go about singing and dancing these Pongattam sons, by deft-horse-rider-Kalikanri. Miseries of this birth will Vanish; after the body is shed, you will reside in Vaikunta. We say this with certainty, Pongattam Pongo!
