(1779)

(1779)

முன்னம் குறளுருவாய் மூவடிமண் கொண்டளந்த,

மன்னன் சரிதைக்கே மாலாகிப் பொன்பயந்தேன்

பொன்னம் கழிக்கானல் புள்ளினங்காள் புல்லாணி

அன்னமாய் நூல்பயந்தாற் காங்கிதனைச் செப்புமினே.

 

பதவுரை

பொன்னங் கழி கானல்

பொன்னங்கழி யென்கிற கடற் கரைநிலங்களிலுள்ள

புள் இனங்கள்

பறவையினங்களே!,

முன்னம்

முன்பொருகால்

குறள் உரு ஆய்

வாமநரூபியாகி (மாவலிபக்கல்)

மூ அடி மண்கொண்டு

மூவடிநிலத்தை இரந்து பெற்று

அளந்த

(மூவுலகையும்) அளந்து கொண்ட

மன்னன்

தேவாதிதேவனுடைய செயலுக்கே

மால் ஆகி

நான் வியாமோஹ மடைந்த வளாகி

பொன் பயந்தேன்

நிறவேறுபாடு அடைந்தவளானேன்;

இதனை

எனது இந்த நிலைமையை

புல்லாணி ஆங்கு

திருப்புல்லாணியென்கிற அவ்விடத்திலே சென்று,

அன்னம் ஆய் நூல் பயந்தாற்கு

ஹம்ஸரூபியாய் வேதசாஸ்த்ரங்களை உபகரித்தபெருமானுக்கு

செப்புமின்

சொல்லுங்கள்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- சில பறவைகளை விளித்துத் தூதுவிடுகிறாள், அடியார்கட்குக் காரியம் செய்ய மாட்டாதவனையோ நான் ஆசைப்பட்டுத் துடிக்கிறேன்; ப்ரயோஜநாந்தாபரனான இந்திரனுடைய கண்ணீரைக் கண்டு பொறுத்திருக்கமாட்டாமல் தன்னை அழியமாறியும் காரியம் செய்தவனன்றோ அவன்; “மாசூணாச் சுடருடம்பாய் மலராது குவியாது” என்னும்படி எப்போதும் ஒருபடிப்பட்ட தன்மையையுடைத்தான திருமேனியை வாமன வடிவாக்கி, *அலம்புரிந்த நெடுந்தடக்கையைக் கொண்டு தானம்பெற்று மூவுலகளந்தான்; ஒருபோது தன்னை அநுவர்த்தித்தும் மற்றொருபோது படையெடுத்து எதிரம்புகோத்தும் திரிகிற இந்திரனுக்காக இத்தனை காரியஞ் செய்தானென்று கேட்டு ;அப்படிப்பட்டவன் அந்தோ! அநந்ய ப்ரயோஜனரான நமக்கு அப்படிப்பட்ட அருந்தொழிலொன்றுஞ் செய்யாவிடினும் முகத்தையும் காட்டமாட்டே னென்கிறானே; என்று கிலேசப்படுகிறேனென்கிறாள் முன்னடிகளால். மேனிநிறம் வேறுபடுவதைப் பொன்பயத்தலாகச் சொல்லுவது கவிமரபு; மேனிநிறம் வேறுபடும் படியான மனத்துயர மடைந்திட்டேன் என்றவாறு.

இப்படிப்பட்ட என்னுடைய நிலைமையைப் புல்லாணியம்மானுக்குப் புகலுங்கோளென்கிறாள் பின்னடிகளால். (பொன்னங்கழிகானல்) ஸ்ரீவானமாமலையில் ;சேற்றுத்தாமரை; என்ற (ஆழ்வார்திருவாக்கில் வந்த) திருநாமத்துடனே தடாகமும் ;தேனமாம்பொழில்; என்றதிருநாமத்துடனே தோப்பும், திருமோகூரில் ;தாளதாமரை; என்ற திருநாமத்துடனே தடாகமும் வழங்கி வருதல் போலத் திருப்புல்லாணியில் ;பொன்னங்கழி; என்றொரு நீரோடுகால் வழங்கிவரும் போலும்.

(அன்னமாய் நூல்பயந்தாற்கு) இப்போது இந்த விசேஷணத்தையிட்டு எம்பெருமானைக் குறிப்பிடுதற்கு இரண்டுவகையான கருத்து உண்டு; பிரமன் இழந்த வேதங்களை ஹம்ஸாவதாரத்தில் மீட்டுக் கொடுத்ததனால் அதுபோலே நானிழந்திருக்கும் மேனிநிறத்தையும் மீட்டுக்கொடுக்க வல்லவர் காண்மின் அவர், என்று குறிப்பிடுதல் ஒரு கருத்து. தூதுபோகிற நீங்கள் ;இவன் நம்மைப் பரமபுருஷன்பக்கல் போகச் சொல்லுகிறாளே; இது நம்மாலாகுமோ? அவர் எங்கே நாம் எங்கே; என்று நீங்கள் அஞ்ச வேண்டுவதில்லை; அவன்றான் அன்னமானவனாகையாலே உங்களோடே ஸஜாதீயனாயிருப்பின் காண்மின்; இனத்தார்பக்கல் போவதற்கு அஞ்சவேண்டாவே என்று குறிப்பிடுதல் மற்றொரு கருத்து.

(ஆங்கு இதனைச் செப்புமினே) இங்கே பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம்;- “ஒருத்தியின் நிறம் மீட்கைக்காக வந்திருக்கிறவிடத்திதே அறிவியுங்கள்; ஒருத்திக்கே காரியம் செய்யக்கடவோ மென்னும் நியதியுண்டோ?” என்று (இதன் கருத்தாவது-) மூலத்தில் ஆங்கு என்றது புல்லாணியைச் சொன்னபடி ;புல்லாணை; என்பது புல்லாணியென மருவிற்று. பிராட்டியைக் கவர்ந்துசென்ற இராவணனைக் கொல்லுதற்பொருட்டு இராமபிரான் வாநர சேனையுடனே புறப்பட்டுச் சென்று தென் கடற்கரையையடைந்து கடல்கடக்க உபயஞ் சொல்ல வேண்டுமென்று அக்கடலரசனான வருணைப் பிரார்த்தித்து தர்பத்திற்படுத்து எழுநாளளவும் பிராயோபவேசமாகக் கிடந்த தலமாதலால் இதுவடமொழியில் தர்ப்பசயனம் எனப்படும்; புல்லணையென்பது அதற்கு ஏற்ற தென்மொழி. ஆகவே தன்னைப்பிரிந்து நிறவேறுபாடடைந்து வருந்திக்கிடக்கிற ஸீதாபிராட்டியின் நிறத்தை மீட்கைக்காக (அதாவது அவளோடு புணர்தற்காக) வந்து நிற்கிற தலமாதலால் இவ்விஷயத்தை உட்கொண்டு ;ஆங்கு; என்று சொன்னபடி; ஸீதையாகிற ஒருத்திக்கே காரியம் செய்யக் கடவோமென்று ஏதேனும் நியதியுண்டோ? பரகாலநாயகிக்கும் சிறிது உதவக்கூடாதோ என்று சொல்லுங்கோ ளென்றவாறு.

;செப்புமின்; என்றதனால், அப்பெருமானை இங்குக் கொண்டுவர முயலவேண்டா; என்னிலையை அவருக்கு அறிவிக்குமளவே போதுமானது; காரியம் தன்னழடயே ஆகும் என்றதாம்.

 

English Translation

O Birds of the brackish waters! infatuated by the bachelor king who came in to yore and measured the Earth in three strides, I lost my rouge to him. Go tell this to the Lord in Pullani who appeared as a swan and delivered the Vedas

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top