(1696)

(1696)

கனஞ்செய் மாமதிள் கணபுரத் தவனொடும் கனவினி லவன்தந்த,

மனஞ்செ யின்பம்வந் துள்புக வெள்கியென் வளைநெக இருந்தேனை,

சினஞ்செய் மால்விடைச் சிறுமணி ஓசையென் சிந்தையைச் சிந்துவிக்கும்,

அனந்த லன்றிலின் அரிகுரல் பாவியே னாவியை யடுகின்றதே.

 

பதவுரை

கனம் செய்

திண்ணிதாகச் செய்யப்பட்டுள்ள

மா மதிள்

பெரிய திருமதில்களையுடைத்தான

கணபுரத்து

திருக்கண்ணபுரத்திலெழுந்தருளியிருக்கிற

அவனொடும்

அப்பெருமானோடு கூடியிருப்பதாக

கனவினில்

ஸ்வப்நத்திலே

அவன் தந்த

அப்பெருமான் கொடுத்த

மனம் செய் இன்பம்

மாநஸிகமாத்ரமான இன்பமானது

வந்து உள்புக

நினைவுக்குவர (அத்தாலே)

எள்கி

ஈடுபட்டு

என் வளை நெக இருந்தேனை

என் கைவளை கழலும்படி யிருக்கிறவென்னை

சினம் செய்

கோவங்கொண்ட

மால் விடை

பெரிய விருஷபத்தினுடைய

செறு மணி

க்ரூரமான மணியினுடைய

ஓசை

த்வநியானது

என் சிந்தையை

எனது நெஞ்சை

சிந்துவிக்கும்

சிதிலமாக்குகின்றது;

அனந்தல்

உறக்கங்கொண்டிருக்கின்ற

அன்றிலின்

அன்றிற்பறவையினுடைய

அரி குரல்

தழுதழுத்த பேச்சானது

பாவியேன்

பாவியான என்னுடைய

ஆவியை

உயிரை

அடுகின்றது

ஹிம்ஸிக்கின்றது.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- இங்ஙனே துடிக்கின்ற பரகால நாயகிக்கு ஒருவகையான தேறுதலுண்டாகும்படி எம்பெருமான் மாநஸிகமான அநுபவத்தைத் தந்து இன்பமு் விளைவிக்க, தரித்ரனாயிருப்பானொருவன் பெருஞ்செல்வம் பெற்றதாகக் கனாக்கண்டு கண்விழித்தவாறே ஒன்ற மில்லாமை கண்டு முன்னிலும் விஞ்சிய வருத்தத்தை யடையுமாபோலே இப்பரகாலநாயகியும் ஸ்வப்நகல்பமான அவ்வநுபவத்தினால் பின்னையுந் தளர்ந்திருக்குமளவில் விடைமணியோசையும் அன்றிற் பறவையின் கூக்குரலும் செவிப்பட்டு இன்னமும் நலிகிறபடி பேசிற்றாயிற்று.

 

English Translation

The heart’s delight that the Lord of strong-high-walled Tirukkannapuram gave me in my dream haunts me; making my bangles slip.  The sound of the angry big bull’s neck-bell scatters my thoughts.  The lazy Anril bird’s harsh coo kills my sinful self’s soul, O, alas!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top