(1500)

(1500)

பவ்வநீ ருடையாடை யாகச் சுற்றிப் பாரகலம் திருவடியாப் பவனம்மெய்யா

செவ்விமா திரமெட்டும் தோளா அண்டம் திருமுடியா நின்றான்பால் செல்லகிற்பீர்

கவ்வைமா களிறுந்தி வெண்ணி யேற்றக் கழல்மன்னர் மணிமுடிமேல் காகமேற

தெய்வவாள் வலங்கொண்ட சோழன் சேர்ந்த திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே.

 

பதவுரை

பவ்வம் நீர்

கடல் நீரை

உடை ஆடை ஆகச் சுற்றி

அரையிலுடுத்துக் கொள்ளும் பீதாம்பரமாகச் சுற்றி

பார் அகலம் திரு அடி ஆ

பூமிப் பரப்பையெல்லாம் திருவடியாகக் கொண்டு,

பவளம் மெய் ஆ

வாயுவைத் திருமேனியாகக் கொண்டு

செவ்வி மாதிரம் எட்டும் தோள் ஆ

அழகிய திசைகளெட்டையும் புஜங்களாகக் கொண்டு

அண்டம் திருமுடி ஆ

அண்டப்பித்தியைத் திருவபிஷேகமாகவுங் கொண்டு

நின்றான் பால்

நின்ற ஸர்வேச்வரனிடத்திலே

செல்ல நிற்பீர்

சென்று சேர விரும்பியிருக்குமவர்களே!,

கவ்வை

ஆரவாரத்தையுடையனவாய்

மா

பெரியவையான

களிறு

யானைகளை

உந்தி

தள்ளிக்கொண்டு

வெண்ணி

வெண்ணியென்னுமிடத்தில்

ஏற்ற

எதிர்த்து வந்த

கழல் மன்னர்

வீரக்கழலணிந்த அரசர்களினுடைய

மணிமுடிமேல்

சிறந்த தலைகளின் மீது

காகம் ஏற

காக்கைகள் ஏறி ஜீவிக்கும்படி

தெய்வம் வாள் வலம் கொண்ட

திவ்யமான வாட்பட்டையின் வலிவைக் காட்டின

சோழன் –

சோழராஜன்

சேர்ந்த

பணிசெய்யப்பெற்ற

திருநிறையூர் மணிமாடம் சேர்மின்கள்

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- எம்பெருமான் ஜகத்ஸ்வரூபியாயிருக்கும் நிலைமையை உருவகத்தாலே அநுபவிக்கிறார் முன்னடிகளில். விபுவான எம்பெருமானுக்குக் கடல் நீரானது அரையிலுடுக்கும் ஆடையாகின்றது; பூமிப்பரப்பெல்லாம் திருவடியாகின்றது; வாயுராசியெல்லாம் திருமேனியாகின்றது; திசைகளெட்டும் திருத்தோள்களாகின்றன; அண்டகடாகமானது திருவபிஷேகமாகின்றது;

ஆக இவ்வகைகளாலே ஜகத்ரூபியாயிருக்கின்ற ஸர்வேச்வரனுடைய திருவடிகளைக் கிட்டவேணுமென் றிருப்பீராகில் திருநறையூர் மணிமாடம் சேர்மின்கள். அத்திருப்பதி செங்கணான் கோச்சோழன் சேரப்பெற்றதாம்; அவ்வரசன் எப்படிப்பட்டவனென்னில்; மஹாவீரன்; [கவ்வைமாகளிறுந்தி இத்யாதி] ‘விண்ணியேற்ற என்ற பாடம் பெரும்பான்மையாக வழங்கிவரினும் ‘வெண்ணி’ என்றபாடம் மாறுபட்டதென்ப. ‘இது கோயில்வெண்ணி(கோயிலுண்ணி)என வழங்கும் சோணாட்டூர்’ என்பர். படையெடுத்து வந்த மாற்றரசர் போர் செய்த இடம் இது; மேற்பாட்டிலும் இங்ஙனமே. பானைகளைப் படை திரட்டிக் கொண்டு வெண்ணியில் வந்தெதிர்த்த கழல்மன்னர்களைப் பிணமாக்கின சோழன் சேர்ந்த திருநறையூர் என்கை. ‘முடிமேல் காகமேற’ என்றது பிணமாக்கினபடியைச் சொன்னவாறு.பிணங்களைக் காகமேறியுண்ணுமே.

தெய்வவாள் வலங்கொண்ட=இவ்வரசன் திருநறையூர் நம்பி பக்கல் ஒரு வாள் பெற்று வெற்றிபெற்றனனென்பர்.

 

English Translation

O Devotees, if you wish to attain the Lord who has the ocean as his raiment, the Earth as he feet, the wind as his corpus, the eight Quarters as his arms, and the Universe as his crowned head, go now to Naraiyur Manimadakkoyil where the chola king-whose divine sword slays crowned kings on elephant backs and makes them food for scavenger crows, -comes to offer worship.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top