(1505)
முருக்கிலங்கு கனித்துவர்வாய்ப் பின்னை கேள்வன் மன்னெல்லாம் முன்னவியச் சென்று,வென்றிச்
செருக்களத்துத் திறலழியச் செற்ற வேந்தன் சிரந்துணிந்தான் திருவடிநும் சென்னிவைப்பீர்
இருக்கிலங்கு திருமொழிவா யெண்டோ ளீசற்கு எழில்மாட மெழுபதுசெய் துலகமாண்ட
திருக்குலத்து வளச்சோழன் சேர்ந்தகோயில் திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே.
பதவுரை
|
முருக்கு |
– |
முருக்கம்பூப்போலவும் |
|
இலங்கு கனி |
– |
விளங்குகின்ற (கோலைப்) பழம்போலவும் |
|
துவர் |
– |
சிவந்திருக்கிற |
|
வாய் |
– |
அதரத்தையுடையளான |
|
பின்னை |
– |
நப்பின்னைப்பிராட்டிக்கு |
|
கேள்வன் |
– |
நாயகனும், |
|
முன் |
– |
முன்பொருகாலத்தில் |
|
மன் எல்லாம் |
– |
க்ஷத்ரியர்களெல்லாரும் |
|
அவிய |
– |
ஒழியும்படியாக |
|
வென்றி செரு களத்து |
– |
வெற்றி தரவல்ல போர்க்களத்திலே |
|
சென்று |
– |
போய் |
|
செற்றம் வேந்தன் |
– |
மாற்றரசனான கார்த் வீரியார்ஜுனனுடைய |
|
திறல் அழிய |
– |
மிடுக்கு அழியும்படியாக |
|
சிரம் துணித்தான் |
– |
(அவனது) தலையைத் துணித்தவனுமான ஸர்வேச்வரனுடைய |
|
திரு அடி |
– |
திருவடிகளை |
|
நும் சென்னி வைப்பீர் |
– |
உங்கள் தலைகளிலே அணிந்துகொள்ள விருப்பமுடையவர்களே! |
|
இருக்கு |
– |
வேதத்தில் |
|
இலங்கு திருமொழி |
– |
சிறந்தவையான புருஷஸூக்தம் முதலிய பாகங்களை |
|
வாய் |
– |
வாயிலே உடையவனாய் |
|
ஏண் தோள் |
– |
எட்டு புஜங்களையுடையனான |
|
ஈசற்கு |
– |
சிவபிரானுக்கு |
|
எழில் |
– |
அழகிய |
|
எழுபது மாடம் |
– |
எழுபது ஆலயங்களை |
|
செய்து |
– |
நிருமணம் செய்வித்து |
|
உலகம் ஆண்ட |
– |
உலகத்தைப் பரிபாலனம் பண்ணின |
|
திரு குலத்து |
– |
உயர்ந்த குலத்திற் பிறந்தவனாய் |
|
வளம் |
– |
செல்வம் மிக்கவனான |
|
சோழன், சேர்ந்த கோயில் திருநறையூர் |
||
|
மணிமாடம் சேர்மின்கள்-. |
||
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- சிவபிரானுக்கு எழுபது ஆலயங்கள் கட்டிவைத்து முதலில் சிவபக்தனாயிருந்து பிறகு பகவத்பக்தனாகப்பெற்ற சோழன் சேர்ந்த கோயில் இது. (இச்சோழன் முன் பிறவியிற் சிலந்தியாய்ப்பிறந்து திருவானைக்காவிலுள்ள சிவலிங்கத்துக்குத் தன்னூலால் இழைத்துவந்த மேல்விதானத் திருப்பணியை அழித்து வந்த யானை நுழையாவண்ணம் சிவபிரானுக்கு மாடக்கோயில் பலகட்டி வழிபட்டவனென்பது தேவார முதலியவற்றாலும் அறியப்படுமென்ப. சோழமண்டலத்தின் கூறுகளாக அமைந்த ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு சிவாலயம் இச்செங்கணானாற் கட்டப்பட்டதென்பர் சேக்கிழார்; ‘செங்கணான், அந்தமில்சீர்ச் சோணாட்டி லகனாடு தொறுமணியார், சந்திரசேகரனமருந் தானங்கள் பலசமைத்தான்” என்பது பெரியபுராணம். இங்ஙனம் சிவதொண்டினைச் சிறப்பப்புரிந்த இச்சோழன் முடிவில் திருநறையூர்த் திருமாலுக்கு அடியனாய்ச் சிறப்புற்றானென்க. “வேதத்தில் ஸ்ரீபுருஷஸூக்தாதிகளை உச்சரியா நின்றுள்ள வாயையுடையராய் எட்டுத்துாள்களையு முடையராயிருக்கிற தேவர்க்கு, தர்ஸநீயமான மாடங்களெழுபதும் சடைத்துப்பின்னை யும் தன்னுடைய அபிமதம் கிடையாமையாலே அவ்வபிமத ஸித்த்யர்த்தமாக அவன் வந்து ஆச்ரயிக்கிற தேசம்” என்பது பெரியவாச்சான் பிள்ளை வியாக்கியான வாக்யம்.
English Translation
Devotees! If you wish to place on your head the feet of the Lord-who came as the husband of coral-lipped Nappinnai, who came as a warrior and destroyed twenty one kings of yore with his battle-axe, -go to Tirunaraiyur Manimadam, where the high-born chola king, -who built seventy big temples for the Rig-reciting eight-armed Isvara, -Offers worship.
