(1358)

(1358)

தாம்தம் பெருமை யறியார், தூது

வேந்தர்க் காய வேந்த ரூர்போல்,

காந்தள் விரல்மென் கலைநன் மடவார்,

கூந்தல் கமழும் கூட லூரே.

 

பதவுரை

தம் பெருமை தாம் அறியார்

தமது பெருமேன்மையைத் தாமும் அறியாதவரும்

வேந்தர்க்கு தூது ஆய வேந்தர்

(பாண்டவ) மன்னர்கட்கு தூதனாய்ச் சென்றவருமான தேவாதி தேவருடைய

ஊர்

திவ்யதேசம் (எதுவென்றால்)

காந்தன் விரல் மென் கலை நல் மடவார்

செங்காந்தன் மலர்போன்ற விரல்களையுடையவரும் அழகிய ஆடையணிந்தவர்களுமான நல்ல பெண்டுகளினுடைய

கூந்தல் கமழும்

கூந்தல்களானவை பரிமளம் வீசப்பெற்ற

கூடலூர் –

திருக்கூடலூராகும்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- எம்பெருமான் தான் ஸர்வஜ்ஞனென்றும் ஸர்வசக்தனென்றும் வேத வேதாந்தங்களினால் ஓதப்பட்டாலும் அவன் தன் பெருமையைத் தானறியவல்லனல்லன்; ‘உனக்கு இவ்வளவு பெருமையுண்டு’ என்று பிறர் சொல்லக்கேட்பவனேயன்றி, தன்பெருமை தானறியானவன்.

அவனக்குப் பெருமையாவது பரத்வம்பொலிய நிற்குமதன்று; ஏவிக் காரியங் கொள்ளலாம்படி தன்னைத் தாழவிட்டுக் கொண்டிருக்கு மிருப்பு இங்குப் பெருமை யெனப்படுகிறது. இப்பெருமையை மூதலிக்கிறார் “தூது வேந்தர்க்காய வேந்தர்” என்பதனால்.  பாண்டவர்களுக்காகக் கழுத்திலே ஓலைகட்டித் தூது சென்ற பாண்டவதூதனென்று பேர்பெற்றான்; இப்படி இவன் இழிதொழில் செய்தாலும் ‘பராத்பரனா யிருப்பவன் இப்படி இழிதொழில் செய்யப்பெறுவதே!’ என்று அறிவித்திறந்தோர் ஈடுபடும்படி யிருக்குமத்தனையன்றி இழிவகக்கருத இடமில்லையே; ராஜாதிராஜன் என்கிற பெருமையும் மிக்குத்தோன்றுமென்கிறார் – “வேந்தர்க்குத் தூ தாய வேந்தர்” என்பதனால். இப்படி பரத்வஸௌலப்யங்கள் விகல்பிக்கலாம்படியுள்ள எம்பெருமான் திருக்கூடலூரிலுள்ளான்.  அவ்வூர் எத்தகையதென்னில்; செங்காந்தள் மலர்போன்ற விரல்களையுடையரும் மெல்லிய அழகிய ஆடைகளை அணிந்தவர்களுமான நன்மடவார்களின் கூந்தல் மணம் கமழப்பெற்றதாம்.

நூற்றெட்டுத் திருப்பதிகளுள் திருக்கூடலூர் இரண்டு உண்டு; ஒன்று பாண்டிநாட்டிற் சேர்ந்தது; அதுவே தென்மதுரை யெனப்படும்.  மற்றொன்று சோழநாட்டிற் சேர்ந்தது : அது ‘ஆடுதுறைப் பெருமாள்கோயில்’ என வழங்கப்படும்.  இத்தலமே இத்திருமொழிக்கு விஷயம். தேவர்கள் கூட்டமாகக்கூடி எம்பெருமானை வணங்கி வாழ்த்தப்பெற்ற தலமென்பது பற்றி இதற்குக் கூடலூர் என்று திருநாமமாயிற்றென்பர்

 

English Translation

Unassuming of their excellence, -like the Lord who through himself a king, went as a messenger for the kings, -beautiful dames with fingers thin as glory-lily petals, and dressed in soft material, move around wafting the fragrance of their coiffure in the Lord’s own kudalur.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top