(1366)
பெருகு காத லடியேன் உள்ளம்,
உருகப் புகுந்த வொருவ ரூர்போல்,
அருகு கைதை மலர, கெண்டை
குருகென் றஞ்சும் கூட லூரே.
பதவுரை
|
பெருகு காதல் |
– |
வளர்ந்துவரும் ஆசையையுடையேனான |
|
அடியேன் |
– |
அடியேனுடைய |
|
உள்ளம் |
– |
மனமானது |
|
உருக |
– |
கரையும்படியாக |
|
புகுந்த |
– |
உள்ளே பிரவேசித்திருக்கிற |
|
ஒருவர் |
– |
விலக்ஷண புருஷனுடைய |
|
ஊர் |
– |
திவ்யதேசம்; |
|
அருகு |
– |
ஸமீபத்திலே |
|
கைதை |
– |
தாழைகள் |
|
மலர |
– |
மலர்ந்திருக்க (அதனைக் கண்டு) |
|
கெண்டை |
– |
கெண்டை மீன்கள் |
|
குருகு என்று அஞ்சும் |
– |
(தம்மைப் பிடித்துண்ண வந்திருக்கிற) நாரைகளென்றெண்ணி அஞ்சுமிடமான |
|
கூடலூர் |
||
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- நாட் செல்ல நாட் செல்ல ஆற்றுப் பெருக்குப்போலே பெருகா நின்றுள்ள காதலைக் கொண்ட அடியேனுடைய ஹ்ருதயம் உருகும்ப்டியாக உட்புகுந்த பெருமான் வாழுமிடம் திருக்கூடலூர். அங்கே வாய்க்காற் கரைகளில் தாழம்பூக்கள் மலர்ந்திருக்கும்; அவற்றைக் கண்ட கெண்டை மீன்கள் குருகுகள் நம்மை இரை கொள்வதற்காக வந்து ஸ்தப்தமாய் நிற்கின்றன போலும்’ என்றெண்ணி அஞ்சி யொளிக்கின்றனவாம்.
கைதை – ‘கேதகீ’ என்னும் வடசொல்விகாரம். குருகு – கொக்கு.
English Translation
With love for him rising in my heart, the Lord has come to reside in kudalur, where screwpine bursts into blossoms, and kendai-fish live in fear taking them to be storks.
