(1461)

(1461)

பிறிந்தேன் பெற்றமக் கள்பெண்டி ரென்றிவர் பின்னுதவா

தறிந்தேன் நீபணித் தவரு ளென்னுமொள் வாளுருவி

எறிந்தேன் ஐம்புலன் கள்இடர் தீர வெறிந்துவந்து

செறிந்தேன் நின்னடிக் கேதிரு விண்ணகர் மேயவனே.

 

பதவுரை

திரு விண்ணகர் மேயவனே!- ;

பெற்ற மக்கள்

வயிற்றில் பிறந்த பிள்ளைகள்

பெண்டிர்

மனைவியர்

என்ற இவர்

இத்யாதிகளான பந்துக்கள்

பின் உதவாது அறிந்தேன்

முடிவு காலத்துக்குத் துணையாக மாட்டார்க ளென்பதைத் தெரிந்து கொண்டவனாய்

பிறிந்தேன்

(அவர்களை) விட்டொழிந்தேன்;

நீ பணித்த அருள் என்னும்

(முன்பு திருத்தேர்த் தட்டிலே) நீ அருளிச் செய்த சரமச்லோகமாகிற

ஒள் வாள் உருவி

ஒளி பொருந்திய கத்தியை உறையில்நின்றும் கழற்றி,

ஐம்புலன்கள் இடர் தீர

சப்தாதிவிஷயங்களாலே உண்டாகிற துயர் தொலையும்படி

எறிந்தேன்

வீசினேன்;

வெறிந்து வந்து

அகிஞ்சானாய்க்கொண்டு வந்து

நின் அடிக்கே செறிந்தேன்

உனது திருவடிகளுக்கே பொருந்தினேன்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- அறிவுடையார், மக்களென்றும் மனைவியரென்றும் சில பந்துக்களை ஆதரித்துப் போருவது ஏதுக்காகவென்னில், உடல் இளைத்தவாறே அருகில் இருந்துகொண்டு கர்ணாமிர்தமாக எம்பெருமான் திருநாமங்களைச் செவியிலே ஓதுவார்களென்பதற்காக; அந்தப் பந்துக்கள்தாம் செய்வதென்னென்னில், ஸமயங்களிலே ஸர்வஸ்வத்தையும் கொள்ளை கொண்டும் மரணஸமயத்திலும் விடாதே 1.“சோர்வினாற் பொருள்வைத்ததுண்டாகில் சொல்லு சொல்லென்றுசுற்றுமிருந்து” என்கிறபடியே ‘எந்த சந்து பொந்துகளில் என்ன பொருள் புதைத்து வைத்திருக்கிறாய், சொல்லு’ என்று பிச்சிக் கொண்டிருப்பார்களேயன்றி, பகவந் நாமமாகிற அமுதத்தை லவலேசமும் செவியிலே ஊட்டமாட்டார்கள்; ஆகவே இந்த ஆபாஸ பந்துக்களெல்லாம் “துணையும் சார்வுமாகுவார்போல்…….. அட்டைகள் போல் சுவைப்பரே” யன்றி நல்வழிக்குச் சிறிது முதவார்கள் என்பதை நன்கறிந்து கொண்டு அவர்களிடத்து நசையை விட்டுத்தொலைத்தேன் என்கிறார் முதலடியால்.  ஆபாஸ பந்துக்களை விட்டு, ஆப்த பந்துவான நீ திருவாய்மலர்ந்தருளிய சரமச்லோகத்தைப் பற்றினேனென்கிறார் மேல்.  சரமச்லோகம் அர்ஜுநனை நோக்கி அருளிச்செய்ததாகிலும், அவனொருவன வியாஜமாகக் கொண்டு ஸகல சேதநர்க்குமே உஜ்ஜீவநமாக அருளிச்செய்ததாகையாலும், கண்ணபிரானுடைய நிர்ஹேதுக க்ருபைதானே அந்த ஒரு ச்லோகமாகப் பரிபக்வமாயிற்று! என்னலாம்படி யிருக்கையாலும், ‘நீ பணித்த அருள்’ என்ற சொல்லாலே சரமச்லோகத்தைக் குறிப்பிடுகிறார்.  அருள் என்பதும் சரமச்லோகமென்பதும் பர்யாயம் போலும்.  அதில் சொன்ன அர்த்தத்தைக் கடைப்பிடித்து என்னுடைய துன்பங்களையெல்லாம் தொலைத்துக்கொண்டேன் என்கிறாரென்க சரமச்லோகத்தினுள் “மாம் ஏகம் = என்னொருவனையே” என்றருளிச்செய்த வாக்கியத்தையே சிக்கெனப்பிடித்துக் கொண்டபடி.

ஒள்வாளுருவியெறிந்தேன் = சரமச்லோகத்தைக் கத்தியாக உருவகப்படுத்திக் கூறினதற்கேற்ப மேலே ஐம்புலன்களிடர் என்றதை வினைத்தூறாகக்கொள்க.  கத்தியினால் தூறுகளை அறுத்தொழிக்குமாப் போலே சரமச்லோகார்த்த ஜ்ஞானத்தினால் வினைத்தூறுகளை வேரறுத்தேனென்கை.  ஆசார்யஹ்ருதயம் இரண்டாம் ப்ரகரணத்தில் “ஒள்வாளுருவி வினைத்தூற்றை வேரறுவித்து” என்றதும் காண்க.

“இடர்தீரவெறிந்துவந்து” என்றவிடத்து ‘வெறிந்து வந்து’ என்று மெடுக்கலாம், ‘எறிந்து வந்து’ என்று மெடுக்கலாம்.  வெறிந்துவந்து – வெறுமையை உடையேனாய் வந்து; “நோற்ற நோன்பிலேன் நுண்ணறிவிலேன்” இத்யாதிப்படியே அகிஞ்சானாய் வந்து என்றபடி.  ‘எறிந்து வந்து’ என்னில், ‘ஒள்வாளுருவி யெறிந்தேன்’ என்று கீழ்ச்சொன்ன எறிதலை அநுவதித்ததாகும்.

 

English Translation

O Lord residing in Tiruvinnagar!  Realising that wives and children will be of no help in the world hereafter, I weaned myself away from them,  With the dagger called grace that you gave me, I cut myself free from the tyranny of the senses and tell at your feet.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top