(1214)

(1214)

அன்னையு மத்தனுமென் றடியோமுக் கிரங்கிற்றிலள்,

பின்னைதன் காதலன்றன் பெருந்தோள்நலம் பேணினளால்,

மின்னையும் வஞ்சியையும் வென்றிலங்கு மிடையாள்நடந்து,

புன்னையும் அன்னமும்சூழ் புனலாலி புகுவர்க்கொலோ.

 

பதவுரை

மின்மையும்

மின்னற் கொடியையும்

வஞ்சியையும்

வஞ்சிக் கொடியையும்

வென்று

தோற்கடித்து

இலங்கும்

(மிகவும் ஸூக்ஷ்மமாக)விளங்காநின்ற

இடையாள்

இடையை யுடையளான என் மகள்,

அன்னையும் அத்தனும் என்று

தாய் தகப்பனென்று கூட

அடியோமுக்கு

எங்கள் விஷயத்தில்

இரங்கிற்றிலள்

தயை பண்ணினாளில்லை;

பின்னை தன் காதலன் தன்

திருமாலினது

பெரு தோள் நலம் பேணினள்

பெருமை தங்கிய தோள்களோடே அணைந்துபெறும் ஸுகத்தையே விரும்பின வளாய்

நடந்து

(அவனோடு கூட) நடந்து செல்ல,

(அவ்விருவரும்)

புன்னையும் அன்னமும் சூழ்

புன்னைப் பொழிலும் அன்னப் பறவைகளும் சூழ்ந்த

புனல்

நீர்வளம் பொருந்திய

ஆலி

திருவாலியிலே

புகுவர் கொலோ சென்று சேருவர்களோ?

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- போகிறவள் தாய்தந்தையிடத்து ஒரு  வாய்ச்சொல் சொல்லிவிட்டுப் போகலாமே அதுவுகஞ் செய்திலள்; தனக்குத் தாய் ஒருத்தி, தந்தை யொருவன் இருப்பதாகவே நெஞ்சில் கொண்டலள் எங்களை இவ்வளவு அலக்ஷியஞ் செய்துவிட்டுப் போவதற்குக் காரணமுண்டு; நப்பின்னை பிராட்டியைக் கைப்பிடித்த பெருமான்றானே நேரேவந்து அழைத்தமையால் அவனுடைய தோளழகிலே தோய்ந்து எம்மை மறந்தாள். “சேலேய் கண்ணியரும் பெருஞ் செல்வமும் நன்மக்களும், மேலா தாய் தந்தையுமவரே யினியாவாரே” (3124) என்று உலகங்கட்கெல்லாம் தாய் தந்தையானவனுடைய  தோளோடே அணையப்பெறில் பிராகிருதர்களான தாய் தந்தையர்நமக்கு ஏதுக்கு? என்று அலக்ஷியஞ் செய்தனள் போலும்; செய்திடுக; அவள்தான் நடந்து செல்லக்கூடியவளோ? மின்னல் வஞ்சிக் கொடி என்னுமவற்றிற் காட்டிலும் நுட்பமான இடையையுடைய விவள் நடந்து செல்லத் தகுந்தவளன்றே. (அழைத்துக்கொண்டு போகிறவன் பெரிய திருவடியின் மேலே வைத்துக்கொண்டு போகலாகாதோ? என்பது உள்ளுறை.) நடந்து போனாலும் போகட்டும்; இருவராய்ச் செல்லுகிற விவர்கள் உத்தேசித்த இடத்திற்சென்று சேர்ந்திருப்பர்களா? என்கிறாள்.

“அடியோமுக்கு” என்றது – தேவதேவ திவ்ய மஹிஷியாகப் பெற்ற பெருமேன்மையில் ஈடு பட்டதனாலென்க.

புன்னையு மன்னமுஞ் சூழ் புனலாலி = ஊர்வெளியே சோலை வாய்ப்பையும் நீர்வாய்பையும் கொண்டு உள்ளே போய்ச் சேர வேணுமே யென்கிறாள் போலும்.

 

English Translation

We were like father and mother to her, alas, she had no thought of that. She preferred the embrace of Nappinnai’s lover with Long arms. With her lightning-thin creeper-thin waist, she walked all the way to where Punnai trees and Swan-pairs abound. Would they have entered the water-fed Tiruvali? O, Alas!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top