(1213)
எந்துணை யென்றெடுத்தேற் கிறையேனு மிரங்கிற்றிலள்,
தன்துணை யாயவென்றன் தனிமைக்கு மிரங்கிற்றிலள்,
வன்துணை வானவர்க்காய் வரஞ்செற்றரங் கத்துறையும்,
இந்துணை வன்னொடும்போ யெழிலாலி புகுவர்க்கொலோ.
பதவுரை
|
(என் மகளானவள்) |
||
|
என் துணை என்று எடுத்தேற்கு |
– |
‘இவள் நமக்கு உதவியாயிருப்பள்’ என்று வளர்த்து வந்த என் விஷயத்தில் |
|
இறையேனும் |
– |
கொஞ்சமாகிலும் |
|
இரங்கிற்றிலன் |
– |
இரக்கங்கொண்டாளில்லை; |
|
தன் துணை ஆய என்தன் தனிகைக்கும் |
– |
(இதுவரையில்) தனக்கு உதவியாயிருந்த நான் தனியே யிருப்பதற்காகவும் |
|
இரங்கிற்றிலள் |
– |
இரக்கங் கொண்டாளில்லை; |
|
வானவர்க்கு |
– |
தேவர்களுக்கு |
|
வன் துணை ஆய் |
– |
சிறந்த துணையாய் |
|
(இலங்கைக்குச் சென்று) |
||
|
அரங்கத்து உறையும் |
– |
கோயிலிலே கண் வளர்ந்தருளுகிற |
|
இன் துணைவனொடும் போய் |
– |
நல்ல துணைவனான திருமாலோடே சென்று |
|
(இருவரும்) |
||
|
எழில் ஆலி புகுவர்கொலோ-. |
||
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- உலகத்தில் மக்களைப் பெற்று வளர்ப்பது ஏதுக்காக? நாம் தளர்ந்திருக்குங் காலத்திலே நமக்குத் துணையாவரென்றே. அப்படியிருக்கவும், என் மகள் எனது அர்த்தியைக்கணிசி யாமலும், பெற்றுவளர்த்த தாயைத் தனிப்பிடவிட்டுப் போகிறோமே யென்று விசாரப்படாமலும் விட்டொழிந்தாள். அவளோ பெரிய துணைவனைப் பிடித்துக்கொண்டாள்; ஆச்ரிதர்கட்காகத் தன் உடம்பை அம்புகட்கு இரையாக்கிக் காரியம் செய்யுமவன் என்று அவன் திறத்திலே யீடுபட்டு உடன் சென்றாள்; திருவரங்கம் பெரிய கோயிலில் திருக்கண்வளர்ந்தருளும் பெருமான் வந்து அழைத்தால் போகா திருக்கலாமோ வென்றும், இவனேயன்றோ நமக்கு இனிய துணைவனென்றும் நினைத்துச் சென்றுவிட்டாள்: செல்லிற் செல்லுக: இருவரும் வழியே சென்று வயலாலியிற் சேர்ந்திருக்கவேணுமே; அப்படி சேர்ந்திருப்பர்களோ, சேராதிருப்பர்களோ வென்று கவலைப்படுகின்றாள் .
வரம் செற்று= இராவணன் நெடுநாள் தவம்புரிந்து வலியவரங்கள் பெற்றிருந்ததனால் ‘நமக்கு அழிவில்லை’ என்று செருக்குக்கொண்டு மனம்போன படி செய்து திரிந்தான்; அப்படிப்பட்டவனைத் தண்டிக்கவேண்டி அவன் பெற்றிருந்த வரத்தில் அகப்படாத மானிட வடிவமெடுத்துவந்து கொண்றொழித்ததனால் ‘வரஞ் செற்று’ எனப்பட்டது; பெற்றவரம் பாழாம்படியாக என்கை.
English Translation
I brought her up for company. Alas, she had no thought of that. I lost out on her company. Alas, she had no thought of that either. The Lord who gives the gods his company destroyed the boon-blessed Lanka and resides in Arangam. Would the two have joined company and entered the radiant city of Tiruvali? O, Alas!
