(1211)
ஏதுஅவன் தொல்பிறப்பு இளைய வன்வளை யூதி,
மன்னர் தூதுவ னாயவனூர் சொலுவீர்கள்! சொலீரறியேன்,
மாதவன் தந்துணையா நடந்தாள்தடஞ் சூழ்புறவில்,
போதுவண் டாடுசெம்மல் புனலாலி புகுவர்க்கொலோ.
பதவுரை
|
அவன் |
– |
(என்மகளைக் கொண்டு போன) அவனுடைய |
|
தொல் பிறப்பு |
– |
பழைய ஜன்மம் |
|
ஏது |
– |
க்ஷத்ரிய ஜன்மமோ? இடைச்சன்மமோ? யாது கொல்? |
|
அறியேன் |
– |
நானறிகின்றிலேன்; |
|
இளையவன் |
– |
குமரனாயும் |
|
வளை ஊதி |
– |
சங்கை ஊதுமவனாயும் |
|
மன்னர் தாதுவனாயவன் |
– |
பாண்டவர்களுக்காகத் தாதுசென்றவனாயுள்ள அவனுடைய |
|
ஊர் |
– |
ஊரையும் |
|
அறியேன் |
– |
அறிகின்றிலேன்; |
|
சொல்லுவீர் |
– |
சொல்லத் தெரிந்தவர்களே! |
|
சொல்லீர் |
– |
சொல்லுங்கள்; |
|
(என்மகளோ வென்னில்) |
||
|
மாதவன் தன் துணை ஆ |
– |
திருமால் தனக்குத் துணையாகப் பெற்று |
|
நடந்தாள் |
– |
(அவனோடு கூடச்) சென்றாள்; |
|
(சென்ற இருவரும்) |
||
|
தடம் சூழ் புறவின் |
– |
தடாகங்கள் சூழ்ந்த சோலைகளை யுடையதும் |
|
போது |
– |
பூக்களிலே |
|
வண்டு ஆடு |
– |
வண்டுகள் களித்துக் கூத்தாடப் பெற்ற |
|
செம்மல் |
– |
பெருமைதங்கிய |
|
புனல் |
– |
தீர்த்தங்களையுடையதுமான |
|
ஆலி |
– |
திருவாலியிலே |
|
புகுவர் கொலோ |
– |
சென்று சேருவர்களோ? |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- பரகால திருத்தாயார் இங்ஙனே தெருவிலே நின்று அலற்றுவதைக் கேட்டு ஓடிவந்தமாதர்களிற் சிலர்‘அம்மா! உன் மகளைக் கொண்டுபோனவன் என்ன ஜாதியிற் பிறந்தவன்? எவ்வூரிலிருந்து வந்தவன்? என்று கேட்க; நானொன்றுமறியேன்; “ஒருத்திமகனாய்ப் பிறந்து ஓரிரவிலொருத்தி மகனாயொளித்து வளர” (498) என்கிறபடியே, யதுகுலத்திலே பிறந்து இடைக்குலத்திலே வளர்ந்தவனாமவன்; ஆகையால் அவனை நான் க்ஷத்ரியகுலத்தவனென்பேனோ, இடைக்குலத்தி னென்பேனோ? எனக்குச் சொல்லத்தெரியாது; நீங்களறிவீர்களாகில் சொல்லுங்கள். அவனுடைய ஊர் எதுவென்று கேட்கிறீர்கள்; அதுவும் எனக்குத்தெரியாது; “விண்ணபகரம் வெஃகா விரிதிரை நீர்வேங்கடம், மண்ணகரம் மாமாட வேளுக்கை-மண்ணகத்த, தென்குடந்தை தேனார்திருவரங்கம் தென்கோட்டி” (2343) என்றும் “கண்டியூரரங்கம் மெய்யம் கச்சி பேர்மல்லை” (2050) என்றும் சொல்லப்படுகிற ஊர்கள் ஒன்றா இரண்டா? பல்லாயிரமானால் எந்த வூரென்று நான் சொல்லுவேன்; உங்களால் நிஷ்கரிஷித்துச் சொல்லமுடியுமானல் சொல்லுங்கள். ஆனால் அவனைப் பார்க்கும்போது நான் தெரிந்து கொண்டவை சிலவுண்டு; பாண்டவர்கட்காகத் துரியோ தநாதியிடம் தூது போனவனும் பாரதப்போரில் தனது பாஞ்சஜன்யமென்னும் சங்கை வாயிலே வைத்து ஊதினவனும் இவன்றான் என்று தெரிந்துகொண்டேன். யெளவந புருஷனாயிருப்பதை நேரில் கண்டேன். மற்றைப்படி அவனது குலமும் ஊரும் நானறிகின்றிலேன் என்கிறாள் முன்னடிகளில. “இன்னாரென்றறியேன் அன்னே ஆழியொடும் பொன்னார் சார்ங்கமுடைய வடிகளை இன்னாரென்றறியேன்” (1950) என்று மகள் சொல்லுவதுபோலவே தாயும் சொல்லுகிற அழகு காண்மின். அவனுடைய பிறப்பும் ஊரும் அறியேன்’ என்று சொல்லுகிற விதன் கருத்து யாதெளில்; “ “கஜாயாநொ-ஹூயா வஜாயதெ’ என்றும் “எந்நின்ற யோனியுமாய்ப் பிறந்தாய் இமையோர் தலைவா!” என்றும் சொல்லுகிறபடியே பலவகைப்பட்ட பிறவிகளிலும், “கரங்தொங்பரந்துளன்” (2684) என்கிறபடியே ஸர்வ வ்யாவியாயு முள்ளவன் என் மகளைக் கொண்டுபோனா னென்பதாம்.
அப்பெருமான் வந்து தன்மகளை யழைக்கும்போது ‘திருவாலிக்குப் போவோம், வா’ என்று சொன்னசொல் மாத்திரம் தாயின் செவியிலே விழுந்தமையால் இருவருமாகத் திருவாலிக்குச் செல்லுகின்றனர் என்பதை யறிந்து பின்னடிகள் பேசுகின்றாள். உத்தேசித்த திருவாலிக்கே சென்றிருப்பர்களோ? அன்றி, ஒருவர்க்கொருவர் மயங்கி வேறு எங்கேனும் புக்கிருப்பர்களோ வென்கிறாள்.
மாதவன்தன் துணையா நடந்தாள் = என்மகள் தனியே புறப்பட்டுச் சென்றிருப்பளாகில் கவலைப்படவேமாட்டேன்; வழியே சென்று வயலாலியிற் சேர்ந்தேவிடுவள். மாதவனைத் துணையாகக்கொண்டு நடந்தாளாகையாலே அவனால் இவள் மயங்கி, இவளால் அவன்; மயங்கி ஆக இருவருடைய மயக்கத்தாலும் என்ன அபாயம் விளைந்திருக்கு மோவென்று கவலைகொள்கின்றே னென்றாளாயிற்று. ஆறு நீந்த வேண்டுவார் கருங்கல்லை மடியிலே கட்டிக்கொண்டு இழிவது போலன்றோ வழிநடக்கவேண்டுவார்மாதவனைத் துணைகொண்டு புறப்படுவது-என்பது உள்ளுறையுங் கருத்து. மாதவன்-திருமகள் கொழுநன் என்றபடி. “சுவையான் திருவின்மணாளன்” (2763) என்கிறபடியே பிராட்டி பக்கலிலே ராஸிக்யம் சிக்ஷித்துக் கொண்டவனாகையாலே அவனோடு வழி நடக்க முடியுமோ? அவன் சொல்லும் ஒவ்வொரு இன்ப வார்த்தையிலும் மதி கெட்டு மூர்ச்சிக்கவேண்டியதாகுமன்றோ என்றவாறு. செம்மல்-பெருமை, சிறப்பு.
English Translation
I don’t know his antecedents. The fellow used to blow conch and take messages for nobles. If you know where he lives, pray tell me. My daughter trusted God and went with him. Would they have entered the water-abounding Tiruvali where bees drink and dance in the lotus flowers of the lakes? O, Alas!
