(1143)
உறியார்ந்த நறுவெண்ணெ யொளியால் சென்றங் குண்டானைக் கண்டாய்ச்சி யுரலோ டார்க்க,
தறியார்ந்த கருங்களிறே போல நின்று தடங்கண்கள் பனிமல்கும் தன்மை யானை,
வெறியார்ந்த மலர்மகள்நா மங்கை யோடு, வியன்கலையெண் தோளினாள் விளங்கு, செல்வச்
செறியார்ந்த மணிமாடம் திகழ்ந்து தோன்றும் திருக்கோவ லூரதனுள் கண்டேன் நானே.
பதவுரை
|
ஒளியால் சென்று |
– |
(தன்னுடைய புன்முறுவலின்) காந்தியாலே இருட்டான இடங்களிலே நடந்து சென்று |
|
அங்கு |
– |
அவ்விடங்களிலே |
|
உறி ஆர்ந்த |
– |
உறிகளிலே நிரம்பிய |
|
நறுவெண்ணெய் |
– |
மணம்மிக்க வெண்ணெயை |
|
உண்டானை ஆய்ச்சி கண்டு |
– |
வாரியுண்ணும்போது யசோதையானவள் கண்டு |
|
உரலோடு ஆர்க்க |
– |
உரலோடே பிணைத்துக்கட்ட (அதனாலே) |
|
தறி ஆர்ந்த கரு களிறு போல நின்று |
– |
கட்டுத்தறியிலே சேர்த்துக் கட்டப்பட்ட கரிய யானை போலக்கட்டுண்டிருந்து |
|
தட கண்கள் பனிமல்கும் தன்மை யானை |
– |
பெரிய திருக்கண்கள் நீர்நிரம்பப்பெற்ற தன்மையை யுடைய பெருமானை, |
|
வெறி ஆர்ந்த மலர்மகள் |
– |
பரிமளம் நிறைந்த தாமரைப் பூவில்பிறந்த பிராட்டியோடும் |
|
நாமங்கையோடு |
– |
ஸரஸ்வதியோடும் |
|
வியன் கலை எண்தோளினான் |
– |
அழகிய மானை வாஹனமாக வுடையளாய் எட்டுத் தோள்களை யுடையளான துர்க்கையோடும் |
|
விளங்கு செல்வம் |
– |
விளங்குகையாகிற செல்வத்தையுடையதும் |
|
செறி ஆர்ந்த |
– |
நெருக்கம்பொருந்திய |
|
மணி மாடம் |
– |
ரத்னமயமான மாடங்கள் |
|
திகழ்ந்து தோன்றும் |
– |
மிகவும் விளங்கப்பெற்றதுமான |
|
திருக்கோவலூரதனுள்–; |
||
|
நான் கண்டேன்–. |
||
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- முதலடியில். “ஒளியாச் சென்று” என்றும் “ஒளியால் சென்று” என்றும் பாடபேதமுண்டு. முந்தின பாடத்தில், ஒளியா—-‘செய்யா’ என்னும் வாய்பாட்டிறந்தகால வினையெச்சம்: ஒளிந்துகொண்டு என்றபடி. “ஒளியா வெண்ணெயுண்டானென்று உரலோடாய்ச்சி யொண்கயிற்றால் , விளியாவார்க்க ஆப்புண்டு விம்மியழுதான்” என்று மேலே ஆறாம்பத்திலு மருளிச்செய்வர். “ஒளியால் “என்ற பிந்தின பாடத்தில், 1.நாளிளந் திங்களைக் கோள்விடுத்து, வேயகம் பால் வெண்ணெய் தொடுவுண்ட” என்கிற பாசுரத்தின்படியே பொருள் கொள்ள வேணும்: அதாவது உறிகளிலே சேமித்து வைத்த வெண்ணெயைக் களவுகாணப் போனபோது, தன் திருநிறத்தின் இருட்சியாலும் அவ்விடத்தின் இருட்சியாலும் ஒன்றுந் தெரியாமையாலே தடவாநிற்கச் செய்தே கையிலே வெண்ணெய்த் தாழிகள் அகப்பட்ட மகிழ்ச்சியினால் சிரிப்பு உண்டாகும்: பூர்ண சந்திரனுடைய கிரணம்போலே திருமுத்துக்களின் ஒளி புறப்படவே , அந்த ஒளியையே கைவிளக்காகக் கொண்டு அமுது செய்வனென்க. ஆகவே இப்பாட்டில் ஒளியால் என்றது. திருமுத்துக்களின் ஒளியினாலே என்றவாறு. இப்பாட்டின் பெரியவாச்சான் பிள்ளை வியாக்கியானத்தை அச்சிடுவித்தவர்கள் அநந்விதமாக அச்சிடுவித்துள்ளார்: அதாவது — “(ஒளியால் சென்றங்குண்டானை.) கனவாலேயன்றியே ‘நாளினந்திங்கள்’ இத்தியாதிப்படியே.” என்று அச்சிடுவிக்கப்பட்டுள்ளது. இந்த வாக்கியம் எங்ஙனேயிருக்கவேணுமென்றால் ,”களவாலே:
அன்றியே, நாளிளந்திங்களத்யாதிப்படியே.” என்று இரண்டு வாக்கியமாக இருக்க வேண்டும். ஒளியா என்ற பாடத்தைத் திருவுள்ளம்பற்றி ‘கனவாலே’ என்று பொருளுரைத்தார். ஒளியால் என்ற பாடத்தைத் திருவுள்ளம் பற்றி “அன்றியே” என்று பக்ஷாந்தரமாக வேறொரு பொருளை சுசிப்பித்தார் என்றுணர்க.
தறி — யானை கட்டும்கம்பம். உரலைத் தறியாகவும், கண்ணபிரானைக் கருங்களிறாகவுங்கொள்க. (வெறியார்ந்த மலர்மகளித்யாதி) ஸ்ரீமஹாலக்ஷ்மியும் ஸரஸ்வதியும் துர்க்கையும் திருக்கோவலூரில் விளங்குகின்றனராம். 2. ‘விந்தைமேய கற்புடைய மடக்கன்னி காவல்பூண்டகடிபொழில்சூழ் நெடுமறுகில் கமலவேலி, பொற்புடைய மலையரையன் பணியரையன் பணியநின்ற பூங்கோவலூர்” என்கிறபடியே திருக்கோவலூரில் துர்க்கையானவள் க்ஷேத்ரபாலநம் செய்துகொண்டிருக்கின்றமைபற்றி லியன்கலை யெண்தோளினான் விளங்கு எனப்பட்டது. துர்க்காதேவி மான் வாஹனமுடடயவனென்பது “வெய்ய கலைப்பாகி “ (1-3-9) என்ற பெரியாழ்வார் திருமொழிப் பாசுரத்தாலும் விளங்குமென்க.
இனி, மலர்களாகிய பெரியபிராட்டியாரும் நாமங்கையாகிய ஸரஸ்வதியும் விளங்குகையாவது—-திருக்கோவலூரிலுள்ளாரடங்கலும் லக்ஷ்மீகடாக்ஷம் பெற்ற செல்வர்களாகவும் ஸரஸ்வதிகடாக்ஷம் பெற்ற வித்வான்களகவும் இருக்கை. ஸரஸ்வதி நாக்கில் திகழும் தெய்வப் பெண்ணாதலால் நாமங்கை என்று பெயர்பெறுவள்.
English Translation
Reaching out to the fragrant butter on the rope shelf brightly, he ate it all; seeing this cowherd-lady Yasoda bound him to a mortar. He stood like an elephant chained to a pillar, weeping, the fragrant lotus-lady Lakshmi, the goddess of speech Saraswati and the deer-riding eight-armed Parvati reside in the mansions of exceeding abundance. I have seen Him in the beautiful temple of Tirukkovalur.
