(1108)

(1108)

திவளும்வெண் மதிபோல் திருமுகத் தரிவை செழுங்கட லமுதினிற் பிறந்த

அவளும்,நின்னாகத் திருப்பது மறிந்தும் ஆகிலு மாசைவி டாளால்,

குவளையங் கண்ணி கொல்லியம் பாவை சொல்லுநின் தாள்நயந் திருந்த

இவளை,உன் மனத்தா லென்னினைந் திருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே.

 

பதவுரை

இடவெந்தை எந்தைபிரானே

திருவிடவெந்தையி லெழுந்தருளி  யிருக்கிற எம்பெருமானே!,

திவளும் வெண்மதி போல் திருமுகத்து

ஒளிவிடாநின்ற வெளுத்த சந்திரனைப்போன்று அழகிய முகத்தை யுடையளாய்

அரிவை

நித்ய யௌவனமுடையளாய்

செழு கடல் அமுதினில் பிறந்த

செழுமை தங்கிய கடலில் அமுதத்தோடு கூடப் பிறந்தவளான

அவளும்

அந்த பெரியபிராட்டியாரும்

நின் ஆகத்து

உனது திருமார்பிலே

இருப்பதும்

எழுந்தருளியிருப்பதை

அறிந்தும் ஆகிலும்

(இப்பரகாலநாயகி) அறிந்திருக்கச்செய்தேயும்

ஆசை விடாள்

(உன்னிடத்தில்) ஆசையை விடுகின்றிலள்;

குவளை அம்கண்ணி

கருநெய்தல்போன்று அழகிய கண்ணையுடையவளும்

கொல்லி அம்பாவை

கொல்லி மலையிலுள்ள அழகிய பதுமை போன்றவளும்

நின் தாள் நயந்திருந்த

உனது திருவடிகளையே ஆசைபட்டுக் கொண்டிருப்பவளுமான

இவளை

இப்பெண் விஷயத்திலே

உன் மனத்தால் என் நினைந்திருந்தாய்

என்ன செய்வதாக நீ நினைத்திருக்கிறாய்!

சொல்லு

அதை வெளியிட்டருள்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

*** –  திருமங்கையாழ்வாராகிய பரகாலநாயகியைப் பெற்றெடுத்த திருத்தாயார் திருவிடந்தைப் பெருமானிடத்திலே தன் மகள் காதல்கொண்டு இருக்கிறபடியையும், காதலின்படியே அநுபவம் கைகூடாமையாலே பலவகை விகாரங்களை அடைந்திருக்கிறபடியையும் ஒவ்வொரு பாட்டில் ஒவ்வொரு வகையாகப்பேசி ‘இப்படிப்பட்ட இப்பெண்பிள்ளை விஷயத்தில் நீ செய்ய நினைத்திருப்பது என்னே பிரானே!’ என்று கேட்பதாகச் செல்லுகிறது.  உண்மையில், ஆழ்வாரைக்காட்டிலும் வேறுபட்ட ‘தாய்’ என்பவளொருத்தி இல்லாமையாலே ஆழ்வார் தாமே தம்முடைய காதலின் கிளர்த்தியை அந்யாபதேசத்தாலே பேசி ‘இப்படிப்பட்ட ப்ராவண்யமுடைய என்விஷயத்திலே உபேiக்ஷசெய்திடத் திருவுள்ளமோ! அன்றி அங்கீகரித்துக்கொள்ளவே திருவுள்ளமோ? இரண்டிலொன்றைச் சோதிவாய்திறந்து அருளிச் செய்யவேணும்’ என்று கேட்கிறாராயிருக்கிறது.

திருமகளை நீ ஒரு நொடிப்பொழுதும் விடாது திருமார்பிலேயே அந்தரங்கமாகக் கொண்டிருக்கின்றாய்;  இதனால் திருமகளிடத்து உனக்குள்ள அன்பு அளவற்றதென்பது நன்கு விளங்கும்;  இங்ஙனே அந்யாஸக்தனானவுன்னை என் பெண்பிள்ளை ஆசைப்படுவது தகுதியன்றுதான்;  ஆயினும் கொண்ட ஆசையைக் குறைத்துக் கொள்ளுகின்றாளில்லை;  தன்னுடைய வைலக்ஷணத்தை நோக்கி ‘திருமகளிடத்திற் காட்டிலும்  நம்மிடத்தில்தான்  எம்பெருமான் அதிகமாகக் காதல் கொள்ளுவான்’ என்றெண்ணி இவள் உன்னையே விரும்பாநின்றாள்.  யார் எது விரும்பினாலும் உனது திருவுள்ளம் உவந்தாலன்றிப் பலன் கைபுகமாட்டா தாகையால் இப்பெண்பிள்ளை திறத்திலே நீ செய்ய நினைத்தருப்பது யாதோ? அறிகின்றிலேன்;  அறியச் சொல்லவேணுமென்று பரகால நாயகியின் திருத்தாயார் சொன்னாளாயிற்று.

அரிவை என்னுஞ் சொல் – இருபத்தைந்து வயதுப் பெண்ணையும் தெய்வப் பெண்ணையும் சொல்லும்;  பெண்கட்குப் பொதுப் பெயராக வழங்குதலுமுண்டு.

உன்மனத்தால் என்னினைந்திருந்தாய்? = இக் கேள்வியினால் ஸகல சாஸ்த்ரஸாரப் பொருளை வெளியிடுகிறா ராழ்வார் என்று குறிக்கொண்மின்; சேதநனுடைய க்ரியாகாலாபமொன்றும் பேற்றுக்கு ஸாதநமன்று,  பரமபுருஷனுடய திருவுள்ளத்தி லிரக்கமே பலனைப் பெறுவிக்கவல்லது என்க.

கொல்லியம்பாவை = ‘வல்வில் ஓரி’ என்னும் சிற்றரசனுக்கு உரியதாய்க் கொல்லியெனும் பெயர்கொண்டதான மலையின்கணுள்ள ஒரு பெண்பாற் பிரதிமை.  இது தேவசிற்பியால் அமைக்கப்பட்ட அழகிற் சிறந்த பதுமையாம்.  அம்மலையிலுள்ள தேவரையும் முனிவரையும் துன்புறுத்த வருகின்ற அசுரரும் அரக்கரும் இப்பதுமையின் சிரிப்பைக்கண்டு மயங்கி உயிர் துறப்பர்களாம். அசுரருமரக்கரும் அங்கு அணுகும்போது அவர்களது வாடை பட்டவுடன் இது தானே நகைசெய்யுமாறு பொறியுள் வைக்கப்பட்டதென்பர்.  இது நகைத்துக் கொல்லுமென்பது, “திரிபுரத்தைச், செற்றவனும் கொல்லிச் செழும் பாவையும் நகைக்கக், கற்றதெல்லா மிந்தநகை கண்டேயோ!” என்ற சித்திரமடற் பாடலினால் விளங்குகின்றது.  இப்பாவை, கண்டாருள்ளமும் விழியும் கவர்ந்து பெருங்காம வேட்கை யுறவித்து இறுதியில் கொல்லுமென்றுங் கூறுவர். இது தெய்வ நிர்மாணமென்ப, ஒரு காலத்தில் திருமகள் தன்முன் போர்க்கெழுந்த அவுணர் ;மோஹித்து விழும்படி இக்கொல்லியம்பாவை யுருங்கொண்டு ஆடினன் என்று சிலப்பதிகாரம் கூறும்.  (“செருவெங் கோலமவுணர் நீங்கத், திருவின் செய்யோளாடிய பாவையும்” (கடலாடு காதை 60, 61.) என்றது காண்க.) இக் கொல்லிப்பாவை கொல்லி மலையிலுள்ள தென்பதும்  தெய்வத்தால் செய்து வைக்கப்பட்ட தென்பதும் அழகில் மிக்கதென்பதும், காற்றினாலும் மழையினாலும் மற்றெவ்வகை ஊறுபாடுகளாலும் தன் அழகிய நல்வடிவம் கெடாதென்பதும் நற்றினை முதலிய நூல்களிற் காணத்தகும்.  185,  192, 201- ஆம் பாடல்கள் காண்க.  இப்பாவையின் அழகைத் தலைவியின் நலத்திற்கு உவமை கூறுதல் அகநானூறு, புறநானூறு முதலிய நூல்களிலும் விசேஷமாகவுண்டு,  (அகநானூறில் 62, 209- ஆம் பாடல்களும், புறநானூறில் 251-ஆம் பாடலும் காண்க.)  சீவக சிந்தாமணி 197, 667- ஆம் பாடல்களிலும், குறுந்தொகை 89, 100- ஆம் பாடல்களிலும் இக் கொல்லிப்பாவையின் ப்ரஸ்தாவம் காணத்தக்கது.  ஆகவே, தமிழ்க்கவிகள் கொல்லிப்பாவையை ஒப்புயர்வற்ற அழகிற் சிறந்த மாதர்க்கு உவமை கூறுதல் மரபு என்றுணர்க. இப்பாசுரத்தில் “கொல்லியம்பாவை போன்றவள்” என்று சொல்லாமல் “கொல்லியம்பாவை” என்றே, சொல்லி வைத்தது முற்றுமை.  “தாவிவையங்கொண்ட தடந்தாமரைகட்கே” (திருவாய்மொழி 6, 9. 9.) என்றதுபோல.

 

English Translation

Shining brightly like the Moon, beaming-face’d Lakshmi Dame born out of the ocean during churning Resides on your dainty chest; knowing this in full measure, O, my daughter doesn’t give up pining. Cool-as-the-lotus eyes, setting on a chiseled face, –she has sought your feet as her refuge. Now tell me what do you intend to do with her, Idavendai Endai, my Lord, O!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top