(1107)
கடிகமழு நெடுமறுகில் கடல்மல்லைத் தலசயனத்து,
அடிகளடி யேநினையு மடியவர்கள் தம்மடியான்,
வடிகொள்நெடு வேல்வலவன் கலிகன்றி யொலிவல்லார்,
முடிகொள்நெடு மன்னவர்தம் முதல்வர்முத லாவாரே.
பதவுரை
|
கடி கமழும் நெடுமறுகின் |
– |
பரிமளம் வீசுகின்ற நீண்ட வீதிகளையுடைய |
|
கடல்மல்லை தலசயனத்து |
– |
திருக்கடல்மல்லையி லெழுந்தருளியிருக்கிற |
|
அடிகள் |
– |
எம்பெருமானுடைய |
|
அடியேநினையும் |
– |
திருவடிகளையே தியானிக்கின்ற |
|
அடியவர்கள் தம் |
– |
பாகவதர்கட்கு |
|
அடியான் |
– |
தாஸபூதரும். |
|
வடிகொள் நெடு வேல் வலவன் |
– |
கூர்மை பொருந்திய பெரிய வேலைக்கொண்டு பொருவதில் வல்லவருமான |
|
கலிகன்றி |
– |
திருமங்கையாழ்வாருடைய |
|
ஒலி |
– |
இவ்வருளிச்செயலை |
|
வல்லார் |
– |
ஓதவல்லவர்கள், |
|
முடி கொள் நெடு மன்னவர் தம் முதல்வர் முதல் ஆவார் |
– |
கிரீடமணிந்த ராஜாதி ராஜர்களுக்கும் தலைவராகப் பெறுபவர்கள். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- பாகவத சேஷத்வமே பரம புருஷார்த்தமென்று பரமயோக்யமாக அருளிச்செய்து வந்த ஆழ்வார் பலன் சொல்லுமிடத்து அஹங்காரத்திற்கு மூலகாரணமும் பாகவதசேஷத்திற்குப் பிரதி நந்தகமுமான இஹலோக ஐச்வரியத்தைப் பலனாகச்சொல்வதேன்; என்று நஞ்சீயர்பட்டரைக் கேட்டார்; அதற்கு அவர் ரஸோத்தியாக ஒரு உத்தரம அருளிச் செய்தாராம்; அதாவது -“திருமங்கையாழ்வார் உருவவதரித்த பின்பு த்யாஜ்யமான ஐச்வர்யமும் பரம புருஷார்த்தமாய் விட்டதுகாணும்; பணமுள்ள இடங்களிற்சென்று கொள்ளையடித்து பகவத் பாகவத கைங்கரியங்கள் பண்ணுகிறவராகையாலே ஹயமான ஐச்வரியமும் இவ்வாழ்வார் திருவுள்ளத்தால் உத்தேச்யமாய் விட்டதிறே” என்றாராம்; அவர் எந்த எந்த பலனை விரும்பினாலும் அந்த அந்த பலன் இவ்வருளிச்செயல் மூலமாகக் கிடைக்குமென்பது உண்மைப்பொருள்.
அன்றியே, ஈற்றடிக்கு வேறொருவகையாகவும் நிர்வாஹமுண்டு;- முடிகொள் நெடுமன்னவர்-இவ்வுலகத்தில் அரசர்களாக இருக்கும் க்ஷத்ரியர்கள் அவர்களுக்கும் முதல்வர்-அவர்களிற் காட்டிலும் எத்தனையோ மடங்கு மேம்பாடுடைய ப்ரஹ்மா முதலிய தேவர்கள்; அவர்களுக்கும் முதல்வர்-அவர்கட்தம் நிர்வாஹகரான நித்யஸூரிகள். ஆக, இத்திருமொழி கற்றவர்கள் நித்ய ஸூரிகளோடு ஒத்து நிதய் கைங்கரியம் பண்ணப் பெறுவர்களென்று பரம புருஷார்த்தத்தையே இதற்குப் பலனாகச் சொல்லிற்றாக வுரையிடலாம்; பெரியவாச்சான்பிள்ளை திருவுள்ளமு மிங்ஙனேயாம்.
English Translation
Big fragrant streets line Kadal Mallai Talasayanam where our Lord resides. The beautiful spear-wielding Kalikanri devotee of those who worship him there, has sung this garland of pure Tamil songs. Those who master it will rule as kings over crowned kings.
