(1036)

(1036)

பற்றே லொன்றுமிலேன் பாவமே செய்து பாவியானேன்* 

மற்றே லொன்றறியேன் மாயனே! எங்கள் மாதவனே!*

கல்தேன் பாய்ந்தொழுகும் கமலச்சுனை வேங்கடவா!*

அற்றேன் வந்தடைந்தே னடியேனையாட்கொண்டருளே.

பதவுரை

மாயனே

ஆச்சரியமான குணங்களை யுடையவனே!

எங்கள் மாதவனே

எங்களுக்குப் புருஷகாரமான பிராட்டிக்கு வல்லபனே!

கல் தேன் பாய்ந்து ஒழுகும் கமலம் சுனை வேங்கடவா

மலை முழைஞ்சுகளின்றும் தேன் பெருகி வெள்ளமிடா நிற்பதும் தாமரைச் சுனைகளை யுடையதுமான திரு மலையிலே வாழ்பவனே!

பற்று ஒன்றும் இலேன்

ஒருவிதமான ஆகாரமும் அற்றவனாய்

பாவமே செய்து பாவி ஆனேன்

பாவங்களையே செய்து பாபிஷ்டனாய்

மற்று ஒன்று அறியேன்

ஒரு உபாயமுமறியாதவனான அடியேன்

அற்றேன்

உனக்கே அற்றுத் தீர்ந்தவனாய்க் கொண்டு

வந்து அடைந்தேன்-;

அடியேனை ஆள் கொண்டருள்-.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய விளக்க உரை

#1036

பற்றேல் ஒன்றும் இலேன்; பாவமே செய்து, பாவி ஆனேன்;
மற்றேல் ஒன்று அறியேன்மாயனே! எங்கள் மாதவனே!;
கல் தேன் பாய்ந்து ஒழுகும் கமலச் சுனை வேங்கடவா!;
அற்றேன், வந்து அடைந்தேன் : அடியேனை ஆட்கொண்டருளே. [1-9-9]

 

        ***[பற்றேலொன்றுமிலேன்.] உன்னுடைய ஸம்பந்தத்தை               அறுத்துக்கொண்டு வெகுதூரம் ஓடிப்போன வெனக்கு ஓரிடத்திலும் ஒருவகையான ஆதாரமுமில்லை. ஆத்மாவுக்கு ஞானமும் ஆநந்தமும் நிரூபகமாயினும் என் வரையில் பாபமே நிரூபகமாம்படி பாவங்களையே செய்து பாபிஷ்டனானேன்; உன்னைப் பெறுதற்குறுப்பான உபாய விஷயத்தில் எள்ளளவும் ஞானமில்லை; நீயோ இப்படிப்பட்ட குறைவாளரையும் ரக்ஷிக்கவல்ல ஆச்சர்ய சக்தியுக்தனாக இரா நின்றாய்; உனது குளிர்ந்த திருவுள்ளத்திலே என்னைப்போன்றவர்களுடைய அபராதங்களினாலே ஒருகால் சீற்றம்பிறந்தாலும் பொறுப்பித்து ரக்ஷிப்பிக்கவல்ல பெரிய பிராட்டியாரும் * அகலகில்லேனிறையுமென்று திருமார்விலே உறையா நின்றாள். இப்படியிருக்குமிருப்பிலே நான் வந்து சரணம் புகுந்தேனான பின்பு இனி நான் இழப்பதுண்டோ? “பற்றிலார் பற்ற நின்றானே!” என்றபடி ஆதாரமற்றவர்களுக்கு ஆதாரமாய் நிற்கக்கூடிய நீயே அடியேனை ஆட்கொண்டருளவேணுமென்று பிரார்த்தித்தாராயிற்று.

        பாவமே செய்து பாவியானேன் = “‘பாவமே செய்தேன்” என்றாவது, “பாவி யானேன்” என்றாவது இரண்டத்தொன்று சொன்னால் போராதோ?” பாவமே செய்து பாவியானேன்” என்ன வேண்டுவதென்? என்னில்; கேளீர்; -பாவஞ் செய்து புண்யாத்மாவாக ஆவதுமுண்டு; புண்யஞ்செய்து பாபிஷ்டனாக ஆவது முண்டு; தசரதசக்ரவர்த்தி அஸத்யவசநமாகிற பாவத்துக்கு அஞ்சி, சொன்ன வண்ணம் செய்கையாகிற புண்யத்தைப் பண்ணிவைத்தும், ஸாக்ஷாத்வடிவெடுத்து வந்த புண்யமான இராமபிரானை இழந்து ஆபாஸதர்மத்தில் நிலைநின்றானென்ற காரணத்தினால் அவனுடைய புண்யம் பாவமாகவே ஆயிற்று; பரமபதப்ராப்திக்கு அநர்ஹனாய்விட்டானிறே. “சேட்பால் பழம்பகைவன் சிசுபாலன்” என்று பாபிகளில் முதல்வனான சிசுபாலன் உள்ள தனையும் பாவமே செய்து போந்தாலும் முடிவில் நல்ல பேறுபெற்றனனாதலால் அவனுடைய பாவமெல்லாம் புண்யமாகவே ஆயிற்று. ஆகவிப்படி பாவஞ்செய்து புண்யசாலியாவதும், புண்யஞ் செய்துபாபிஷ்டனாவதும் உண்டாயினும், நான் பாவமே செய்து பாவியானேன் -(அதாவது) தசரதனைப் போலே புண்யத்தைச் செய்து பாவியானவனல்லேன், சிசுபாலனைப்போலே பாவத்தைச் செய்து புண்யாத்மாவாக ஆனவனுமல்லேன்; செய்ததும் பாவம்; ஆனதும் பாபிஷ்டனாக – என்கை.

        முதலடியிலும் இரண்டாமடியிலும், ஏல்- அசைச்சொற்கள். இப்பாட்டில் மாதவனே! என்கையாலே பிராட்டியை முன்னிட்டு சரணம் புகுந்தமை விளங்கும். (மா – பிராட்டிக்கு, தவன் – நாயகன்)…..(9)

English Translation

I have no support, all the while doing wrong I became a sinner and knew nothing else. O’ Wonder Lord, my Madava, O Lord of Tiruvenkatam with lotus ponds where beehives on rocks overflow with honey! Freeing myself. I have come, to you. Pray take me into your service!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top