(1035)
நோற்றேன் பல்பிறவி யுன்னைக்காண்பதோ ராசையினால்*
ஏற்றே னிப்பிறப்பே யிடருற்றன னெம்பெருமான்!*
கோல்தேன் பாய்ந்தொழுகும் குளிர்சோலைசூழ் வேங்கடவா!*
ஆற்றேன் வந்தடைந்தே னடியேனையாட்கொண்டருளே.
பதவுரை
கோல் தேன் பாய்ந்து ஒழுகும் | – | கோல்களின்றும் தேன் இழிந்து வெள்ளமிடா நின்ற |
குளிர் சோலை சூழ் வேங்கடவா | – | குளிர்ந்த சோலைகள் சூழ்ந்த திருமலையில் வாழ்பவனே! |
எம்பெருமான் | – | அஸ்மத் ஸ்வாமியே!, |
பல் பிறவி நோற்றேன் | – | எனக்குப் பல பிறவிகள் உண்டாகும்படி காரியம் செய்து வைத்தேன். |
உன்னை காண்பது ஓர் ஆசையினால் | – | உன்னை ஸேவிக்கவேணுமென்று ஒரு காதல் கிளர்ந்த படியினாலே |
இப்பிறப்பே ஏற்றேன் | – | இந்த ஜந்மத்திலே உனக்கு அன்பனாக ஏற்பட்டேன். |
இடர்உற்றனன் | – | (இன்னமும் நேரக்கூடிய பிறவிகளை நினைத்து) துக்கப்படா நின்றேன்; |
(இனி பிறவிகள் நேராமைக்காக) வந்து அடைந்தேன்-. அடியேனை ஆள் கொண்டருள்-. | ||
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய விளக்க உரை
#1035
நோற்றேன் பல் பிறவி ; நுன்னைக் காண்பது ஓர் ஆசையினால்;
ஏற்றேன் இப் பிறப்பே இடர் உற்றனன்–எம் பெருமான்!;
கோல் தேன் பாய்ந்து ஒழுகும் குளிர் சோலை சூழ் வேங்கடவா!;
ஆற்றேன் வந்து அடைந்தேன் அடியேனை ஆட்கொண்டருளே. [1-9-8]
*** [நோற்றேன்பல்பிறவி.] நோற்கையாவது – ஸங்கல்பிக்கை; பல பிறவிகளை ஸங்கல்பிக்கையாவது – பலபிறவிகள் உண்டாகும்படி கருமங்களைச் செய்தலாம். இப்படி பல பிறவிகளும் பிறந்து கொண்டேவரச் செய்தே யாத்ருச்சிக ஸுக்ருத விசேஷத்தாலே உன்னைக் காணவேணுமென்று ஆசைபிறந்தது இப்பிறவியில்; அதனால், இதற்குக்கீழ் நாம் நின்ற நிலை மிகவும் பொல்லாதென்று நெஞ்சில் பட்டது. இதுவரையில் நடந்தவற்றையும் இனி நடக்கப் போகிறவற்றையும் நினைத்து ஸஹிக்கமாட்டாமல் உன் திருவடிகளை வந்து பணிந்தேன், அடியேனை ஆட்கொண்டருளவேணும்-என்றாராயிற்று.
“உன்னைக் காண்பதோராசையினால் பல்பிறவி நோற்றேன், இப்பிறப்பே ஏற்றேன்” என்று அந்வயித்து, “உன்னை ஸேவிக்கவேணுமென்று பலபல பிறவிகளில் நோன்பு நோற்றேன்; இதுவரையில் உன்னுடைய ஸேவை கிடைக்கப் பெற்றிலேன்; இப்பிறவியில் பாக்கியம் வாய்த்தது; கீழ்க்கழிந்த காலமெல்லாம் வீணாய்ப்போயிற்றேயென்று இடருற்றேன்” – என்றும் உரைப்பர். இதனிலும் முன்ன முரைத்த பொருளே சிறக்கும்….(8)
English Translation
I have gone through many lives. In this life I became ready to atone for my unbearable. Karmic past; because of my desire to see you. O Lord of Tiruvenkatam hills, with cool groves where beehives on branches overflow with honey! I have come to you. Pray take me into your service!
