(1034)
தெரியேன் பாலகனாய்ப் பலதீமைகள் செய்துமிட்டேன்*
பெரியே னாயினபின் பிறர்க்கேயுழைத் தேழையானேன்*
கரிசேர் பூம்பொழில் சூழ் கனமாமலை வேங்கடவா!*
அரியே! வந்தடைந்தே னடியேனையாட்கொண்டருளே.
பதவுரை
கரி சேர் | – | யானைகள் மிகுந்திருக்கப் பெற்றதும் |
பூ பொழில் சூழ் | – | அழகிய சோலைகளாலே சூழப்பட்டும் |
கனம் மா மலை வேங்கடவா | – | திண்ணியதாயு மிருக்கிற திருமலையிலே வாழ்பவனே! |
அரியே | – | ஹரியே! |
பாலகன் ஆய் | – | சிறியேனாயிருந்தபோது |
தெரியேன் | – | அறிவில்லாதவனாய் |
பல தீமைகள் | – | பல பாவங்களை |
செய்தும் இட்டேன் | – | செய்து தீர்த்தேன்; |
பெரியேன் ஆயின பின் | – | யௌவன பருவ மடைந்த பின்பு |
பிறர்க்கே உழைத்து | – | விஷயாந்தர பரனாய் ச்ரமப் பட்டு |
ஏழை ஆனேன் | – | சதிர்கெட்டுப்போனேன்; |
(இப்படிப்பட்ட அடியேன்) வந்து அடைந்தேன்-; அடியேனை ஆள் கொண்டருள்-. | ||
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய விளக்க உரை
#1034
தெரியேன் பாலகனாய், பல தீமைகள் செய்துமிட்டேன்;
பெரியேன் ஆயினபின், பிறர்க்கே உழைத்து ஏழை ஆனேன்;
கரி சேர் பூம் பொழில் சூழ் கன மாமலை வேங்கடவா!;
அரியே! வந்து அடைந்தேன் அடியேனை ஆட்கொண்டருளே. [1-9-7]
***[தெரியேன் பாலகனாய்.] “கிளரொளியிளமை கெடுவதன் முன்னம்” என்றும் “தஸ்மாத் பால்யே விவேகாத்மா யதேத ச்ரேயஸே ஸதா” என்றும் இளம்பிராயத்திலே நல்லதுகளைக் கற்கும்படி சொல்லியிருப்பதற்கு எதிர்த்தட்டாக நான் இளம்பிராயத்திலே அவிவேகியாய்ப் பல தப்புக்காரியங்களைச் செய்துவிட்டேன்; பிறகு யௌவனம் வந்து முகங்காட்டினவாறே, எந்த வஸ்துவைக்கண்டாலும் ‘இது அவளுக்காகும், இது அவளுக்காகும்’ என்றே கொண்டு பலவற்றையும் மாதர்க்காகத்தேடித்திரிந்து அலைந்து சதிர்கேடனானேன்; போன காலமெல்லாம்பழுதேபோனாலும், இனியாகிலும் ப்ராப்தவிஷயத்திலே தொண்டு பூண்டமுதமுண்ணப்பெறலாமென்று திருவடிகளின் கீழே வந்து சேர்ந்தேன், ஆட்கொண்டருள வேணும் என்றாராயிற்று. முதலடியை இரண்டு வாக்கியமாகவும் உரைக்கலாம்; பாலகனாய் தெரியேன் – சில நாள் மிக்க இளம்பருவமாய் யுக்தாயுக்தங்களறியாதே கிடந்தேன். பல தீமைகள் செய்துமிட்டேன் – (சிறிது அறிவு உண்டான பின்பு) தோன்றினபடிபலதீமைகள் செய்து திரிந்தேன் என்கை. அரியே! – ஹரி என்ற வடசொல் அரியெனத்திரிந்தது. என்னுடைய பாவங்களை யெல்லாம் ஹரிப்பவனே! என்றும், சிங்கம் போல் ஒருவராலும் அடர்க்கவொண்ணாதவனே! என்றும் உரைக்கலாம். (ஹரி – சிங்கம்)…(7)
English Translation
Even as a lad, unknowingly, I did many wicked things, when I grew up, I can after others and lost myself. O Lord of elephant-roaming-groves Tiruvenkatam hills, my Master! I have come to you. Pray take me into your service!
