(1000)

(1000)

சூதினைப்பெருக்கிக் களவினைத் துணிந்து சுரிகுழல் மடந்தையர் திறத்து

காதலேமிகுத்துக் கண்டவா திரிந்த தொண்டனேன், நமன்தமர்செய்யும்

வேதனைக் கொடுங்கி நடுங்கினேன் வேலைவெண்டிரை யலமரக்கடைந்த,

நாதனே! *வந்துன் திருவடியடைந்தேன் நைமிசாரணியத்து ளெந்தாய்!

பதவுரை

வேலை வெண்திரை அலமர

கடலிலேயுள்ள வெளுத்த அலைகள் கலங்கும்படி
கடைந்த

(தேவர்களுக்காகக்) கடைந்தருளின

நாதனே! நைமிசாரணியத்துள் எந்தாய்!-.

சூதினை பெருக்கி

அதிகமாகச் சூதாடியும்
களவினை துணிந்து

களவு செய்வதில் துணிந்தும்
சுரி குழல் மடந்தையர் திறத்து காதலேமிகுத்து

சுருண்ட கூந்தலையுடைய ஸ்த்ரீகள் விஷயத்திலே மிக்க ஆசைகொண்டு
கண்ட ஆ திரிந்த

கண்டபடியெல்லாம் தட்டித்தரிந்த
தொண்டனேன்

அடியேன்
நமன் தமர்செய்யும் வேதனைக்கு

யமபடர்கள் செய்யப்போகிற ஹிம்ஸைகளை நினைத்து
ஒடுங்கி நடுங்கினேன்

உடல் குன்றி நடுங்கினவனாய்
வந்து உன் திருஅடி அடைந்தேன்

இன்று வந்து உன் திருவடிகளைச் சேர்ந்துவிட்டேன்.

சூதினைப் பெருக்கி, களவினைத் துணிந்து, சுரி குழல் மடந்தையர் திறத்துக்

காதலே மிகுத்து, கண்டவா திரிந்த தொண்டனேன் நமன் – தமர்

செய்யும் வேதனைக்கு ஒடுங்கி நடுங்கினேன் ; வேலை வெண் திரை அலமரக் கடைந்த

நாதனே! வந்து, உன் திருவடி அடைந்தேன் – நைமிசாரணியத்துள் எந்தாய்! [1-6-3]

சூதினைப் பெருக்கி. போக்கினேன் பொழுதினை வாளா ” என்று வீண்போது போக்கினதாகக் கீழ்ப்பாட்டிலருளிச் செய்தார் ; எவனும் ஏதாவ தொரு காரியத்தைச் செய்து கொண்டே போது போக்குவனே யொழிய வெறும னிருந்து போது போக்கான் ; கைகால் முதலிய உறுப்புகள் எப்போதும் ஏதாவ தொரு வேலையைச் செய்துகொண்டே யிருக்கும்; ஆகையாலே வீணாகப் பொழுது கழியமாட்டாதே என்று சிலர் கேட்க; வீணான காரியங்களைச் செய்து பொழுதைப் போக்கினேனாகையால் வீண் போது போக்கினதாகச் சொன்னே னத்தனை; வெறுமனிருந்து போதைப் போக்கியிருந்தால் பாதகமில்லையே; செய்யத்தகாத காரியங்களைச் செய்தே காலத்தைக் கழித்தேனென்கிறார் முன்னடிகளில்.

முதலிலே சூதாட்டம் ஆடத் தொடங்கினேன்; பகல் முழுதும் சூதாடுவேன்; அதில் என்னோடு ஆடித் தோற்றவன் குறைவின்றிப் பொருள்கள் கொடுக்கக்கண்டேன்; ‘இவன் பெரிய பணக்காரனாகையாலன்றோ இப்படி சூதாடி ஏராளமான பொருளை இழக்கிறான், இன்றிரவு இவன் வீட்டிற் புகுந்து பெருங் கொள்ளையடிக்க வேண்டியது’ என்று நிச்சயித்து அப்படியே அன்றிரவு அவன் வீட்டிற் புகுந்து கொள்ளையடித்தேன்; இப்படியே பலபலநாள் செய்து சூதனாய்க் கள்வனாகி அளவற்ற பொருளைத் திரட்டியபின்னர் அப்பொருளைச் செலவிடவேண்டிச் சுரிகுழல் மடந்தையர் திறத்துக் காதலே மிகுத்தவனானேன்; பல வருஷங்களில் சூதாடிக் களவாடித் திரட்டின பொருள்களடங்கலும் சுரி குழல் மடந்தையர் திறத்தில் வந்தவாறே ஒரு நொடிப் பொழுதில் செலவழிந்து விடுமே; மறுநாள் வெறுங்கையனாய் அங்குச் சென்றால் முகம் நோக்குவாரில்லையே; அதற்காக மீண்டும் பொருளீட்டத் தொடங்கி இன்னவழியில் தான் பொருள் சேர்ப்பது’ என்று ஒரு வ்யவஸ்தை யில்லாமல் மனம் போனபடி யெல்லாம் செய்து தீர்த்தேன்; அப்போது பரலோக சிந்தனை யென்பது எள்ள ளவுமின்றிக் கண்டபடி திரிந்தேனாகிலும், இப்போது அந்த சிந்தனை தோன்றி”. ஐயோ! யமபடர்கள் கையிலே சிக்கி வருந்த வேணுமே!” என்று இன்று நடு நடுங்கி, உன் திருவடிகளை அண்டைகொண்டால் யமபடர்களின் தலையிலே காலைவைத்துக் கூத்தாடலாம் என்று பெரியோர் சொல்லக் கேட்டு வந்து உன் திருவடிகளைப் பணிந்தேன் காண் என்கிறார்.

இவ்விடத்தில் சூது என்றதற்கும் களவு என்றதற்கும் வேறொருவகையாகவும் பொருள் கூறுவர்; விவேகியாயிருப்பானொருவன்” எம்பெருமானுக்கு சேஷபூதனான ஆத்மா உண்டு; ஸர்வசேஷியான ஈச்வரனுண்டு; புண்யபாப வகுப்பு உண்டு; பரலோகமுண்டு; சாஸ்த்ரங்களெல்லாம் ஸத்யம்” என்று சொன்னால் மாயச் சொற்களாலே அவனை மயக்கி நாஸ்திகனாக்கித் தன் வகுப்பில் அவனையும் சேர்த்துக் கொள்ளுகை சூது; எம்பெருமானுக்கு சேஷமாய் கௌஸ்துப ஸ்தாநீயனான ஆத்மாவைத் தன்ன தென்றிருக்கை களவு; இவ்விரண்டாலும், எம்பெருமானுடைய அலம்புரிந்த நெடுந்தடக்கைக்கும் எட்டாமல் நெடுந்தூரம் அகன்றுவிட்டேன் என்கிறார் போலும்.” சூதனாய்க் கள்வனாகித் தூர்த்தரோடிசைந்தகாலம், மாதரார் கயற்கணென்னும் வலையுட்பட்டழுந்துவேனை’ என்ற திருமாலைப் பாசுரத்தை இங்கே நினைப்பது.

“கண்டவாதிரிந்த தொண்டனேன் “ என்றவிடத்து, தொண்டனேன் என்றது – அந்த ஸ்த்ரீகளுக்கே தொண்டு பட்டுக்கிடந்தேன் என்றபடியாகலாம்; அன்றி, எம்பெருமானான உனக்குத் தொண்டனாகிய நான் கண்டபடி திரிந்து கிடந்தேன் என்றபடியுமாகலாம்.

English Translation

Gambling in excess, getting into robbery for the sake of curly coiffured damsels, increasing lewdity, without any moral code, I did fail in my worship. Fearing the torture of Yama-agents, Lord who churned the ocean! Seeking your lotus feet, I have come to see you now Naimisaraniyam-living Lord, O!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top