(892)
பணிவினால் மனம தொன்றிப் பவளவா யரங்க னார்க்கு
துணிவினால் வாழ மாட்டாத் தொல்லைநெஞ் சேநீ சொல்லாய்
அணியனார் செம்பொ னாய அருவரை யனைய கோயில்
மணியனார் கிடந்த வாற்றை மனத்தினால் நினைக்க லாமே
பதவுரை
| பவளம் வாய் |
– |
பவளம் போன்ற அதரத்தை யுடைய |
| அரங்கனார்க்கு |
– |
அழகிய மணவாளன் விஷயத்திலே |
| பணிவினால் |
– |
கைங்கர்யருசியால் |
| மனம் அது ஒன்றி |
– |
கருத்தைப் பொருந்தவைத்து |
| துணிவினால் |
– |
துணிவுடன் |
| வாழமாட்டா |
– |
வாழமாட்டாத |
| தொல்லை நெஞ்சே |
– |
கிழத்தனமுள்ள மநஸ்ஸே! |
| அணியின் ஆர். |
– |
அழகினாலே பூர்ணமாய் |
| செம் பொன் ஆய அருவரை அணைய |
– |
செவ்விய பொன்னாலே செய்யப்பட்ட சிறந்த மேரு பர்வதத்தை யொத்த |
| கோயில் |
– |
கோயிலிலே |
| மணி அனார் |
– |
நீலமணி போன்ற எம்பெருமான் |
| கிடந்த ஆற்றை |
– |
கண்வளர்ந்தருளுகிற படியை |
| மனத்தினால் |
– |
நெஞ்சினால் |
| நினைத்தல் ஆமே |
– |
(அளவிட்டு அறியக்கூடுமோ? |
| நீ சொல்லாய் |
– |
நீயே சொல்லிக்காண். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- “கரும்பினைக் கண்டுகொண்டு” என்றும், “அரவணைத் துயிலுமா கண்டு” என்றும் அழகிய மணவாளனை நீர் கண்ணால் கண்டாமையாலன்றோ “என்செய்கேன்! என் செய்கேன்!!” என்று தவிக்கிறீர்; அப்பெருமான் பள்ளி கொண்டருளும்படியைக் கண்ணால் காணவேண்டா; ஒரு மூளையிலே உட்கார்ந்து நெஞ்சினால் தியாநஞ் செய்துகொண்டிரும் என்று சிலர்சொல்ல அதற்கு உத்தரமாக தமது திருவுள்ளத்தை நோக்கிக் கூறுகின்றார் – அப்பெருமான் பள்ளி கொண்டருளுமாற்றை நெஞ்சினால் தான் நினைத்துத் தரிக்க முடியுமோ? என்கிறார்.
நெஞ்சால் நினைக்க முடியா தென்பதை உபபாதிப்பன-முன் இரண்டடிகள். நெஞ்சே! நீ வெகுகாலத்தைப் பாழே கழித்தவனல்லையோ? நீ அநுகூலப்பட்டிருந்தா யாகில் முன்னமே உஜ்ஜீவித்திருக்கலாமன்றோ அதற்காக நீ செய்திருக்கவேண்டிய காரியமும் அதிகமொன்றுமில்லை; உன்னுடைய சிந்தனையை எம்பெருமான் விஷயத்திலே செலுத்தி அவனை பணிவாக நிலைநிறுத்தி, ‘இனி நாம் பணியவேண்டிய வ்யக்தி வேறில்லை’ என்று திண்ணி தாக அத்யவஸாயங் கொண்டிருந்தால் இவ்வளவே போதும் உஜ்ஜீவநத்திற்கு; வெகுகாலமாக இப்படிப்பட்ட பணிவும் அத்யவஸாயமும் இல்லாமல் நெடுநாளாகப் பாழாய்போனவனன்றோ நீ; இப்படி சிறிது காலம் ஒரு விஷயத்திலே நிலைநிற்கமாட்டாத நீ எம்பெருமான் அரவணைமேல் சாய்ந்தருளும்படியை நினைப்பதென்றால் இது கூடுமான காரியமா என்பதை நீயே ஆராய்ந்து பார் என்கிறார் என்னவுமாம்.
(பணிவினால் மனமது ஒன்றி) இங்கு மனம் என்று மநோவ்ருத்தியாகிய சிந்தனையைச் சொல்லுகிறது. ஒன்றி-பிறவினைப் பொருளில் வந்த தன்வினை; ஒன்றுவித்தது என்றபடி.
சிந்தனையைப் பணிவினால் ஒன்றுவித்தலாவது எம்பெருமானைப் பணிவதாக முயற்சி செய்தல், “இதர விஷயங்களிலேயே போகிற நெஞ்சை அவற்றில் நின்றும் மீட்டு ப்ராப்த விஷயத்திலே ப்ரவணமாக்குவோ மென்னும் உத்யோகமாத்ரமேயாய்த்து இவ்விஷயத்திற்கு வேண்டுவது” என்பர் பெரியவாச்சான்பிள்ளையும்.
துணிவினால் – த்ருடாத்யவஸாயத்தினால் என்றபடி. வாழமாட்டா என்று- இத்தனை காலமாக வாழா தொழிந்தமையைக் கூறியவாறு (தொல்லை நெஞ்சே) இழவிலே உள்ள தொன்மையை (அநாதித்வத்தை) நெஞ்சினிலே ஏறிட்டுக் கூறுகிறபடி; அநாதிகாலம் வாழ்ச்சியை இழந்தொழிந்த நெஞ்சே! என்றவாறு.
(அணியினார் இத்யாதி) மஹாமேருவைப் புடைப்படத் துளைத்து அது விம்மும்படி அதிலே ஒரு நீலரத்நத்தை அழுத்தினாற்போலாய்த்துக் கோயிலாழ்வார்க்குள்ளே பெரியபெருமாள் கண் வளர்ந்தருளுகிறபடி.
மணி அனார்- ‘அன்னார்’ என்பது அனார் எனத் தொக்கிக் கிடக்கிறது.
English Translation
Pray tell O Faithful heart of mine! Without a life of service, without a heart of devotion, is it possible to contemplate the coral-lipped Lord of Arangam? The beautiful gold-plated temple rises like a mountain, with a gem-hued form reclining in it.
