(889)

(889)

இனிதிரைத் திவலை மோத எறியும்தண் பரவை மீதே

தனிகிடந் தரசு செய்யும் தாமரைக் கண்ண னெம்மான்

கனியிருந் தனைய செவ்வாய்க் கண்ணணைக் கண்ட கண்கள்

பனியரும் புதிரு மாலோ எஞ்செய்கேன் பாவி யேனே.

பதவுரை

திரை திவலை

–

அலைகளிலுண்டான திவலைகளானவை
இனிதுமோத

–

இனிதாக அடிக்க (வீச)
எறியும்

–

கொந்தளிக்கிற
தண்

–

குளிர்ந்த
பரவை மீது

–

கடல் போன்ற திருக்காவேரியிலே
தனி கிடந்து

–

தனியே வந்து கண்வளர்ந்தருளி
அரசு செய்யும்

–

செங்கோல் செலுத்துகிற
தாமரை கண்ணன்

–

புண்டரீகாக்ஷனாய்
எம்மான்

–

எமக்கு தலைவனாய்
கனி இருந்தனைய செம் வாய் கண்ணனை

–

கொவ்வைக்கனி போன்ற சிவந்த வாயையுடையனான கண்ணபிரானை
கண்ட கண்கள்

–

ஸேவிக்கப்பெற்ற (எனது) கண்களில் நின்றும்
பனி அரும்பு

–

குளிர்ந்த கண்ணநீர்த் துளிகள்
உதிரும்

–

பெருகாநின்றன,
பாவியேன்

–

(கண்ணாரக்கண்டு களிக்கைக்குப்) பாக்கியமில்லாத நான்
என் செய்தேன்

–

ஏது செய்வேன்?

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- எம்பெருமானை ஸேவிக்கப்பெற்றமைக்கு உகந்து உரைத்த ஆழ்வார் , கண்களினுடைய களிப்புக்குப் போக்குவீடான ஆநந்தக் கண்ணீர் பெருகப்பெற்று ஐயோ! இக்கண்ணீர் அரும்பரும்பாகத் துளித்துக் கண்களை மறைத்து எம்பெருமானை இடைவிடாது ஸேவிக்கவொட்டாமல் துடைச்சுவராய்த் தடை செய்கின்றவே ! கைக்கு எட்டினது வாய்க்கு எட்டாதொழியும்படி மஹாபாபத்தைப் பண்ணின நான் இந்த துக்கத்திற்கு எங்குபோய் முறையிட்டுக் கொள்வேன் என்று வெறுக்கிறார்.

பரவை என்று கடலுக்குப் பெயர் ; திருப்பாற்கடலிலே கண்வளர்ந்தருளுகிறவன் திருக்காவிரியிடையிலே வந்து கண்வளர்ந்தருள்வதாக அதுஸந்திக்கிறர் என்னலாம்: அன்றியே, காவேரி தான் ஒரு பெருங்கடல் பெருகுமாபோலே பெருங்வெள்ளங் கோத்துப் புரளுகையாலே காவேரியையே கடலாகச் சொல்லிற்றாகவுமாம் முற்றுவமை.

தனி கிடந்து -பிராட்டிமாருமில்லாமல் பரதேஸியாய்க் கிடக்கிறானென்றபடி யன்று; நினைவறிந்து பரிமாறும் நித்யமுக்தாதிகளை ஒருநாடாகவுடையவன் அவர்களையெல்லாம் விட்டுவிட்டு, ஸம்ஸாரிகள் பக்கல் நசையாலே “ஒருவனாகிலும் கிடைக்கக்கூடுமோ?” என்று வந்து கிடக்கும்படியைச் சொல்லுகிறது. தனி-ஒப்பில்லாதபடி என்றுமாம்.

அரசு செய்கையாவது –விரோதி நிரஸநம் செய்கை அதாவது –  ‘அஹம்-யம’ என்றிருக்கும் ஸம்ஸாரிகளின் பாழான நிலைமையைக் குலைத்து ‘நம:’ என்னும்படி செய்து கொள்ளுகை. “அரசு செய்யுந் தாமரைக் கண்ணன் “என்ற சொற்போக்கால் எம்பெருமான் தனது திருக்கண்ணழகால் அனைவரையும் அகப்படுத்திக் கொள்ளுகிறான் என் விளங்கும்.

பெரியபெருமாளை ஸேவித்தால், அவதாரத்திற் பிற்பட்டவர்கட்கும் உதவுகைக்காகக் கண்ணபிரான்தான் வந்து கண்வளர்ந்தருளுகிறானென்று ஸ்மரிக்கலாம்படி யிருக்குமாதலால் கண்ணனை என்கிறார்: “ கோவலனாய் ப் வெண்ணெயுண்டவாயன்……….. அண்டர்கோ னணிய ரங்கன் திருப்பாணாழ்வாரும். இவ்விடத்திலே பட்டர் அருளிச்செய்யும்படி; “யசோதைப்பிராட்டி பிள்ளை மனம் கன்றாமல் தீம்பிலே கைவளரும்படி வளர்த்த மொசுமொசுப் பெல்லாம் பெரியபெருமாள் பக்கலில் தோற்றியிருக்கும்: வஸிஷ்டாதிகளாலே ஸுஸிகத ராய் வார்ந்து வடிந்த விநயமெல்லாம் தோற்றும்படியான சக்ரவர்த்தி திருமகளை ஸ்மரிக்கலாம் படியிருக்கும் – நம்பெருமானைக் கண்டால்” என்று.

இனிது + திரை-இனிதிரை; கடைக்குறை. இருந்தனைய –இருந்தாலனைய; இருந்தாற் போன்ற என்றபடி. ஆல் ஓ – வியப்பிடைச் சொற்கள்;; இரக்கமும் கூப்பீடும் தோற்றுகிற குறிப்பிட்டைச் சொற்களுமாம்.

English Translation

On the waves of the cool Kaveri which lashes sprays of sweet nectar, my Krishna reclines without  a peer in Arangam, with lotus eyes and coral lips like a berry. O, what can I do? On seeing him thus, my eyes rain tears, alas!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top