(880)

(880)

மற்றுமோர் தெய்வ முண்டே மதியிலா மானி டங்காள்

உற்றபோ தன்றி நீங்கள் ஒருவனென் றுணர மாட்டீர்

அற்றமே லொன்ற றீயீர் அவனல்லால் தெய்வ மில்லை

கற்றினம் மேய்த்த வெந்தை கழலிணை பணிமி னீரே.

பதவுரை

மதி இலா

தத்துவஞானமில்லாத
மானிடங்காள்

மனிதர்களே
மற்றும்

(நான் சொல்லுகிறவனைத்) தவிரவும்
ஓர் தெய்வம்

(சரணமாக அடையக் கூடிய வேறு) ஒரு தெய்வம்
உண்டே

உண்டோ? (இல்லை)
நீங்கள்

நீங்கள்
உற்ற போது அன்றி

(சரணமடைந்த அந்த க்ஷுத்ரதேவர்கட்கு) ஒரு ஆபத்து நேர்ந்த காலத்திலல்லாமல் (மற்றைக் காலத்தில்)
ஒருவன் என்று

(நான் சொல்லுகிற இவன்) ஒருவனே கடவுள் என்பதை
உணரமாட்டீர்

அறியமாட்டீர்கள்

(நீங்கள் இப்படி அறியாமைக்குக் காரணமென்னவெனில்; வேதத்திலே)

மேல்

(பதப்பொருளுக்கு) மேற்பட்ட
அற்றம்

மறைபொருளை (தாத்பரியத்தை)
ஒன்று அறியீர்

சிறிதும் அறியமாட்டீர்கள்;

(இனி முடிவுப்பொருளை நீங்கள் உணருமாறு கூறுவேன்;)

அவன் அல்லால்

அந்த எம்பெருமான் தவிர
தெய்வம் இல்லை

(சரணமடையக்கூடிய) தெய்வம் (வேறொன்று) இல்லை; (ஆகையால்)
கன்று இனம் மேய்த்த எந்தை

கன்றுகளின் கூட்டங்களை (மிக்க உகப்போடு), மேய்த்து வந்த எமது ஸ்வாமியான ஸ்ரீ கிருஷ்ணனுடைய
கழல் இணை

இரண்டு திருவடிகளையும்
நீர் பணிமின்

நீங்கள் சரணமாகப் பற்றுங்கள்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- பல தேவரையும் பற்றிக் கூறுகிற வேதத்தின் உட்பொருளை நுட்பமாக ஆராய்ந்து அறியுந் திறமையில்லாமையால் நீங்கள் தேவதாந்தரங்களைப் பற்றுகின்றீர்கள்;  ‘ஒரு குறையும் வாராமல் உன்னைப் பாதுகாக்கிறேன்’ என்று ப்ரதிஜ்ஞை பண்ணி பாணாஸுரனது வாசலிலே பரிவாரத்தோடு பாதுகாவாலாயிருந்த சிவன் அந்த வாணாசுரனை எதிர்த்துவந்த ஸ்ரீ கிருஷ்ணனோடு போர் செய்யமாட்டாமல் தோற்று ஓடினபோது அந்தச் சிவனுடைய வலியின்மையை அந்த வாணன் கண்டறிந்ததுபோல, நீங்களும் ஸரணமாகப் பற்றியிருக்கிற தேவதாந்தரங்களுக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்தால்தான் அத்தெய்வங்களின் பலஹீநத்வத்தைக் கண்டறிவீர்கள்; நீங்கள் இப்படி பரமாத்மாவைத் தவிர்த்து இதர தேவதைகளைப்  பற்றுவதற்குக் காரணம் நுமக்குப் பகுத்தறிவு இல்லாமையே. உண்மையில் ஸ்ரீகிருஷ்ண பரமாத்வையே சரணமாகப் பற்றுங்களென்று உபதேசிக்கின்றனரென்க.

பெறுதற்கரிய மநுஷ்ய ஜன்மத்தைப் பெற்றிருந்தும் ஈடேறுதற்கு உரியதான பரமாத்மாவைப்பற்றிய தத்துவஞானம் இல்லாமையால் எடுத்த ஜந்மமே வீணாய்விட்டதென்று குறிப்பிக்கும்படி “மதியிலாமானிடங்காள்” என்றார்.

“ஒண்டாமைரையாள் கேள்வனொருவனையே நோக்குமுணர்வு” என்றபடி பரமாத்மாவைப்பற்றிய அறிவே அறிவெனப்படுமாதலால் மற்றை உலகறிவு இருந்தும் பரமாத்மாவைப் பற்றிய அறிவைப்பெறாத இவர்கள் மதியிலா மானிடங்களாயினர்;  இது பற்றியே “மானிடர்காள்!” என உயர்திணைவாய் பாட்டாற் கூறாது “மானிடங்காள்” என அஃறிணைவாய்பாட்டாற் கூறியதும். இது – இழிப்பினால் உயர்திணையில் அஃறிணைவந்த திணைவழுவமைதி.

உற்றபோதன்றி உணரமாட்டீர்-உற்றபோதே நீங்கள் அவனொருவனே தெய்வமென்று உணர்வீர் என இரண்டு எதிர்மறைகள் ஒருடன்பாட்டுப் பொருளை வற்புறுத்தின; “அவனல்லால் தெய்வ மில்லை” என்றவிடத்தும் இப்படியே.

அற்றமேலொன்றறியீர்-வேதத்திற் பலவிடங்களிலும் தேவதாந்தரங்களைப்பற்றி (எம்பெருமானைப்போலவே) சிறப்பித்துக் கூறியிருப்பதுகண்டு அவற்றிற்கு ஆபாதப்ரதீதியில் (மேல்நோக்கில்) தோன்றுகிற பொருளையே கருத்தாக எண்ணி “நாராயணபரா வேதா:” என்றபடி வேதங்கள் முழுவதும் ஸ்ரீமந்நாராயணையே பரம்பொருளாகக் கருத்துப்பொருளால் கூறுவன என்பதை உய்த்துணராமலிருக்கின்றீ ரென்றவாறு.

அற்றம்-மறைபொருள்; உட்கருத்து; அறு-பகுதி. “அவனல்லால் தெய்வமில்லை” என்று- தேவதாந்தரங்கள் இல்லை என மறுக்கின்றாரல்லர்; எம்பெருமானுக்கு ஸரீரமாகக் பல தேவதைகள் உள என்பதில் ஆக்ஷேபமில்லை; சரணமாகப் பற்றத்தக்க தெய்வம் வேறில்லை என்றாய்த்துச் சொல்லுவது.

“கற்றினம்மேய்த்த” என்ற அடைமொழியினால் எம்பெருமானது ஸௌலப்யத்தை வெளியிட்டவாறு. எந்தை – பரமஸ்வாமி. கழல்-வீரர்காலில் அணியும் வடம்; தானியாகுபெயராய்ப் பாதத்தை உணர்த்திற்று.

English Translation

Can there be another god? O Foolish men on Earth! Unless there is a calamity, you will never realize the truth. Nor do you know the Sastras, other than him, there is no god. Worship the feet of my Lord who walked on earth grazing cows!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top