(770)
புள்ளாதாகி வேதநான்கு மோதினாய்அ தன்றியும்
புள்ளின்வாய்பி ளந்துபுட்கொ டிப்பிடித்த பின்னரும்
புள்ளையூர்தி யாதலால தென்கொல்மின்கொள் நேமியாய்
புள்ளின்மெய்ப்ப கைக்கடல்கி டத்தல்காத லித்ததே
பதவுரை
| மின்கொள் நேதமியாய் |
– |
தேஜஸ்வியாய் விளங்காநின்றுள்ள திருவாழியையுடைய பெருமானே! |
| புள் அது ஆகி |
– |
ஹம்ஸரூபியாய் அவதரித்து |
| வேதம் நான்கும் |
– |
நான்கு வேதங்களையும் |
| ஓதினாய் |
– |
உபதேசித்தருளினாய், |
| அது அன்றியும் |
– |
அதுவுமல்லாமல், |
| புள்ளின் வாய் பிளந்து |
– |
(உன்னை விழுங்குவதாக வாயைத் திறந்துகொண்டு வந்த) பகாஸுரனுடைய வாயைக் கிழித்து (அவனை முடித்து விட்டு) |
| புள்கொடி பிடித்த பின்னரும் |
– |
பெரிய திருவடியை த்வஜமாகப் பிடித்ததுமல்லாமல் |
| புள்ளை |
– |
அப்பெரிய திருவடியை |
| ஊர்தி |
– |
வரஹநமாகக்கொண்டு செல்லா நின்றாய் |
| ஆதலால் |
– |
இப்படி பலவகையான ரக்ஷணோபாயங்களைச் செய்தருளா நிற்கச் செய்தேயும் |
| கடல் |
– |
திருப்பாற்கடலிலே |
| புள்ளின் பகை மெய் |
– |
கருடஜாதிக்குப் பகையென்று தோற்றும்படியான திருவளர் தாழ்வானுடைய திருமேனியிலே |
| கிடத்தல் |
– |
பள்ளிகொள்வதை |
| காதலித்தது |
– |
விரும்பிப்போவதாகிய |
| என்கொல் |
– |
என்ன திருவுள்ளத்தாலே? |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- கீழ்ப் பாட்டில் “பௌவநீரராவணைப் படுத்தபாயல் பள்ளிகொள்வதென்கொல்?” என்று- ஏதுக்காகத் திருப்பாற்கடலில் கண்வர்ளந் தருளாநின்றாய்? என்று எம்பெருமானை நோக்கி வினவிய ஆழ்வாரைக்குறித்து அப்பெருமான் “ஆழ்வீர்! ஸம்ஸாரிகளை ரக்ஷிப்பதற்காகத்தான் நாம் இக்கிடை கிடைக்கிறோம்” என்றருளிச்செய்ய; அதுகேட்ட ஆழ்வார், ‘பஹுமுகமாக ஸம்ஸாரிசேதநர்களை ரக்ஷித்தருளின நீ ரக்ஷணக்ருத்யத்திலே இன்னும் சேஷம் வைத்திருக்கிறாயோ? பண்டை எல்லாம் செய்தருளிற்றே! ஆயிருக்க, ஒன்றும் செய்யாதவன் போலவும் இன்னும் பல செய்யக் கூடியவன்போலவும் திருப்பாற் கடலிலே வந்து கண்வளர்ந்தருள்வது என்னோ? என்கிறார்.
“புள்ளதாகி வேதான்கு மோதினாய்” என்று- ப்ரமாணத்தைக் கொடுத்தபடியையும், “புள்ளின்வாய் பிளந்து” என்று – ப்ரமேயபூதனான தன்னைக் கொடுத்தபடியையும் சொல்லிற்றாயிற்று. இப்படிப்படட் ரக்ஷணம் என்றைக்கோ செய்யப்பட்டதாகில் இன்றைக்கும் மேலுள்ள காலத்துக்கும் என்னாயிற்று? என்று சங்கிப்பார்க்கு இடமறும்படியருளிச் செய்கிறார் புட்கொடியித்யாதி, தான் ரக்ஷணத்தொழிலொன்றிலேயே தீக்ஷிதன் என்பது தோன்றக் கொடிகட்டிக் கிடக்கிறபடி ஆபத்து அடைந்தவர்கள் அனைவரும் தன்பக்கலிலே வந்து காரியங் கொள்ளும்படி ரக்ஷணதர்மத்தைத் தெரிவிக்கைக்காகவிறே பெரிய திருவடியை தவ்ஜமாகக் கொண்டிருக்கிறது. கருடனை த்வஜமாகக் கொண்ட மாத்திரத்தால் என்னாகும்? என்று சங்கிப்பார் தெளியுமாறு அருளிச் செய்கிறார். புள்ளையூர்தி என்று. ஆச்ரிதர்கட்கு ஆபத்து நேர்ந்தால் பறவையேறிக் கடிதோடிக் காப்பிடுமவன் யல்லாமல்; புன்னை ஊர்தி- ஆச்ரிதர் ஆபந்நராய் இருந்தவிடங்களிலே வந்து உதவுகைக்கு அவனை வாஹநமாகக்கொண்டு நடந்தா நின்றாய், என்கை. ஊர்தி- ஊர்கின்றாய் என்றபடி.
முதலாயிரம்- திருச்சந்தவிருத்தம்.
“புட்கொடிப் பிடித்த பின்னரும்” என்று இப்போதைய பாடமிருந்தாலும் “புட்கோடிப் பிடித்தி பின்னரும்” என்றே ப்ராசீகமும் சுத்தமுமான பாடமென்று அழகிய மணவாளச் சீயர் அருளிச் செய்யக்கேட்டிருக்கை. ஊர்தி என்றது போலவே பிடித்தி என்றதும் ‘பிடிக்கின்றாய்’ என்ற பொருளுடைய முன்னிலையொருமை நிகழ்கால வினைமுற்று. ஆகவே, “புள்ளதாகி வேத நான்குமோதினாய்,அதன்றியும் புள்ளின்வாய் பிளந்து புட்கொடிபிடித்தி, பின்னரும் புள்ளையூர்தி” என்றிங்ஙனே மூன்று வாந்யார்த்தமாகக் கொள்ளுதல் சிறக்குமென்க. பின்னரும் என்னது- அன்றியும் (***) என்றபடி
ஆதலால் என்றது- இப்படியெல்லாம் செய்திருக்கச் செய்தேயும் என்றபடி- அர்த்தஸ்வாரஸ்யத்துக்கான சப்தத்தை செருக்குவது உசிதமேயாமென்க. இப்படி பஹுமுகமாக ரக்ஷகத்வத்தை வெளிப்படுத்திக்கொண்டு ரக்ஷணைக தீக்ஷிதனாய் எழுந்தருளியிருக்கச் செய்தேயும் திருப்பாற்கடலிலேவந்து குளிரிலே கிடப்பதேன்? என்று *** பெரியவாச்சான் பிள்ளை வியாக்கியானத்தில் இப்பாட்டின் அந்வயக்ரமம் சிறிது மாறுபட்டிருப்பினும் ஸுகு மாரமதிகளின் ஸௌகரியத்துக்காக இங்ஙனே யாம் உரைத்தோமென்றுணர்க. கீழும் மேலும் இங்ஙனே யாமெழுது மிடங்களில் இதுவே ஸமாதாகமென்று கொள்க.
கடல் புள்ளிள் பகை மெய் கிடத்தல் காதலித்தது என்கொல்?- என்று மாற்றி அந்வயித்துக்கொள்க. நித்யஸுரிகளில் தலைவராயும் எம்பெருமானுக்கு அந்தரங்க கிங்கரர்களாயுமுள்ள பெரிய திருவடி திருவநந்தாழ்வான்களுக்கு உண்மையில் பகைமையென்ன ப்ரஸக்திதானுமில்லையேயாகிலும் கருடஜாதிக்கும் ஸர்ப்பஜாதிக்கும் உலகவியற்கையிலே பகைமை காணப்படுவதுபற்றி “புள்ளின்பகை” என்று அருளிச் செய்தார். வியாக்கியானத்திலும்- “ஸாயாமர்ய த்ருஷ்டியால் பார்த்தால் திருவடிக்கு ஸஹஜத்ருவென்னலாயிருக்கிற திருவனந்தாழ்வான்மேலே” என்று அருளிச்செய்துள்ளமை காண்க.
English Translation
You become the Hamsa bird and gave the world the Vedas-four, you did kill the demon bird, then you did hold a banner bird. You did drive a Garuda bird and you do lie on foe-to-bird, but why the love to lie alone in ocean-deep, O Discus-Lord?
