(744)

(744)

தொத்தலர்பூஞ் சுரிகுழல்கை கேசி சொல்லால் தொன்னகரந் துரந்துதுறைக் கங்கை தன்னை

பத்தியுடைக் குகன்கடத்த வனம்போய்ப் புக்குப் பரதனுக்கு பாதுகமு மரசு மீந்து

சித்திரகூ டத்திருந்தான் றன்னை யின்று தில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள்

எத்தனையும் கண்குளிரக் காணப் பெற்ற இருநிலத்தார்க் கிமையவர்நே ரொவ்வார் தாமே.

பதவுரை

தொத்து அலர் பூ சுரி குழல்

கொத்துக் கொத்தாக மலர்ந்த புஷ்பங்களைச் சூடிய நுனி சுருண்ட கூந்தலையுடைய
கைகேசி

கைகேயியினது
சொல்லால்

சொல்லின்படி
தொல் நகரம் துறந்து

தொன்றுதொட்டுப் பரம்பரையாய் வருகிற ராஜ்யத்தைக் கைவிட்டு
துறை கங்கை தன்னை

கங்கையின் துறையை
பத்தி உடை குகன் கடத்த

மஹாபக்தனான குஹப்பெருமான்புணை செலுத்தியுதவ; (கடந்து)
வனம் போய் புக்கு

காட்டிற்போய்ச் சேர்ந்து
பரதனுக்கு

(அங்கு வந்த) பரதாழ்வானுக்கு
பாதுகமும் அரசும் ஈந்து

(தனது) மரவடியையும் ராஜ்யத்தையுங் கொடுத்து
சித்திர கூடத்து இருந்தான் தன்னை

சித்ரகூட பர்வதத்தி லெழுந்தருளியிருந்த ஸ்ரீராமபிராணை
இன்று

இப்பொழுது (பிற்காலத்தில்)
தில்லைநகர் திருச்சித்ரகூடம் தன்னுள்
கண் குளிர் காண பெற்ற

கண் குளிரும்படி ஸேவிக்கப் பெற்ற
இரு நிலத்தார்க்கு

பெரிய (சிறந்த) பூலோகத்திலுள்ளவர்களுக்கு
இமையவர்

நித்யஸூரிகளும்
எத்தனையும் நேர் ஒவ்வார்

சிறிதும் ஸமமாக மாட்டார்கள்.
(தாம் ஏ

ஈற்றசைகள், தோற்றமுமாம்)

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- ஸ்ரீராமாவதாரத்திலே சித்ரகூட பர்வதத்தில் எழுந்தருளியிருந்த இருப்பைப் பிற்பட்டார் கேட்டு அநுபவிக்கப் பெறுவதேயன்றித் தாம்கண்டு அநுபவிக்க பெறாமல் கண்விடாய்த்து நிற்கிற குறைதீர எக்காலத்திலு முள்ளார் அநுபிவக்கைக்காக அங்ஙனமே தில்லைத் திருச்சித்திரக்கூடத்தில் வீற்றிருக்கின்றனன் என்பது பின்னடிகளின் உட்கோள்.

English Translation

He renounced kingship by the words of the flower-coiffured Kaikeyi, he crossed the Ganga with the help of the devoted boatman Guha. In the deep forest, he gave his sandals and the kingdom to Bharata, and lived in Chitrakuta; today he resides in Tillainagar Tiruchitrakutam. Devotees throng to see and enjoy him there. Even the gods are no match to them.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top