(679)

(679)

பின்னிட்ட சடையானும் பிரமனு மிந்திரனும்

துன்னிட்டு புகலரிய வைகுந்த நீள்வாசல்

மின்வட்டச் சுடராழி வேங்கடக்கோன் தானுமிழும்

பொன்வட்டில் பிடித்துடனே புகப்பெறுவே னாவேனே

பதவுரை

பின்னிட்ட சடையானும்

திரித்து விட்ட சடையையுடையவனான சிவனும்
பிரமனும்

சதுர்முகனும்
இந்திரனும்

தேவேந்திரனும்
துன்னிட்டு

நெருக்கி
புகல் அரிய

உள்ளே புகுவதற்கு ஸாத்யமில்லாமலிருக்கின்ற
வைகுந்தம் நீள் வாசல்

பூலோக வைகுண்டமாகிய திருமலையிலுள்ள திருக்கோயிலின் நீண்ட திருவாசலிலே
மின் வட்டம் சுடர்  ஆழி

மின்னலை வளைத்தாற்போல சோதிமயமாய் விளங்குகின்ற வட்ட வடிவமான சக்ராயுதத்தையுடைய
வேங்கடம்  கோன் தான்

திருவேங்கடமுடையான்
உமிழும்

வாய்நீருமிழ்கின்ற
பொன் வட்டில்

தங்க வட்டிலை
பிடித்து

கையிலேந்திக் கொண்டு
உடனே புக பெறுவேன் ஆவேனே

அந்தரங்க பரிஜநங்களுடனே நானும் உள்ளே புகும் பாக்கியத்தைப் பெறக்கடவேன்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- எம்பெருமானுக்கு அந்தரங்க கைங்கரியம் செய்யப் பெறுவதுண்டானால் மனுஷ்ய ஜன்மமேயாகிலும் அமையும் என வேண்டுகின்றார்.  பிரமன் சிவன் இந்திரன் முதலிய தலைமைத் தேவர்கள் திருவேங்கடமுடையானைச் சேவித்தலில் விருப்பத்தால் அங்கு வந்து அக்கருத்தினாலேயே மிகுதியாகக் கூடியுள்ள அடியார்களின் பெருங்கூட்டத்தின் நடுவில் சிக்கி நெருக்குண்டு உள்ளே புக முடியாமல் தடுமாறப் பெற்ற அத்திருமலையின் ” கோயில்வாயிலில் யான் அப்பெருமானுக்கு அந்தரங்க கிங்கரனாய் அவன் வாய்நீருமிழும் பொற்காளாஞ்சியை ஏந்திக் கொண்டு செல்லுமளவில்,  இவர் அந்தரங்க கைங்கரியபரர் என்று அனைவரும் விலகி, வழிவிட, அர்ச்சக பரிசாரங்களுடனே யானும் தடையின்றி எளிதில் இனிது உள்ளே புக்கு கர்ப்பக்ருஹத்திற் சேர்ந்து அருகில் நின்று கைங்கரியம் பண்ணப் பெறுவேனாகவென்று பிரார்த்திக்கின்றார்.

பின்னிட்ட – பின்னிய; இடு – துணைவினை. பின் இட்ட என்று பிரித்து, பின்னே தொங்கவிட்ட சடையையுடையவன் என்றலுமாம்.  இங்ஙனம் ‘ பின்னிட்ட’ என்றதைச் சடைக்கு விசேஷணமாக்காமல் சடையானுக்கு விசேஷணமாக்கி. தந்தையான நான்முகன் முன்னே போகப் பின்னே செல்கின்றவன் புத்திரனான ருத்ரன் என்று உரைத்தலு முண்டு.  கீழ், ” மீனாய்ப் பிறக்கும் விதியுடையேனாவேன் என்றவர், மீனானது நீர் நிலையைப் பற்றியே உயிர்தரிக்க வேண்டிவருமேயென்று ஒரு கைங்கரியபரனாகப் பிறக்க வேணுமென்று அபேக்ஷித்தார்.  வட்டில் – இங்கே, படிக்கம்.  உடனே – சீக்கிரமாக எனினுமாம். ‘வாசல் புகப்பெறுவேன்’ என்று அந்வயம்.

English Translation

In the temple where the Lord with his golden-orbed discus reigns, the mat-haired-Siva, Brahma and Indra vie to enter the portals-of-liberation, Svarga Vasal. Ah, but I shall carry the Lord’s golden spittoon and slip in quickly.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top