(578)
மாமுத்த நிதிசொரியும் மாமுகில்காள் வேங்கடத்துச்
சாமத்தின் நிறங்கொண்ட தாடாளன் வார்த்தையென்னே
காமத்தீ யுள்புகுந்து கதுவப்பட்டு இடைக்கங்குல்
ஏமத்தோர் தென்றலுக்கிங் கிலக்காய்நா னிருப்பேனே
பதவுரை
| மா முத்தம் நிதி சொரியும் |
– |
சிறந்த முத்துக்களையும் பொன்களையும் கொண்டு பொழிகிற |
| மா முகில்காள் |
– |
காள மேகங்களே! |
| வேங்கடத்து |
– |
திருமலையிலெழுந்தருளியிரா நின்ற |
| உள் புகுந்து |
– |
உள்ளே புகுந்து |
| கதுவப்பட்டு |
– |
கவ்வ, அதனால் பாதைப்பட்டு |
| கங்குல் |
– |
இரவில் |
| இடை எமத்து |
– |
நடுயாமத்திலே |
| சாமத்தின் நிறம் கொண்ட |
– |
நீலநிற முடையனான |
| தாளாளன் |
– |
எம்பெருமானுடைய |
| வார்த்தை என்னே |
– |
ஸமாசாரம் ஏதாகிலுமுண்டோ? |
| காமம் தீ |
– |
காமாக்நியானது |
| ஓர் தென்றலுக்கு |
– |
ஒரு தென்றற் காற்றுக்கு |
| நான் இலக்கு ஆய் |
– |
நான் இலக்காகி |
| இங்கு இருப்பேன் |
– |
இங்கு இருப்பனோ? (இது தகுதியோ?) |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- ஓ காளமேகங்களே! நீங்கள் எனக்காக ஔதாரியத்தில் இன்று புதிதாகப் பரிசயம் பண்ணவேணுமோ? வள்ளல்தனமே இயல்பாக இருப்பவர்களன்றோ நீங்கள், விலையுயர்ந்த முத்துக்களையும் பொன்களையும் ஒருவரும் வேண்டாமலிருக்கத்தானே நீங்களே பொழிகின்றீர்களன்றோ. இப்படிப்பட்ட நீங்கள், அடிவீழ்ந்து வேண்டுகிற எனக்காக ஒருவாய்ச்சொல் நல்கலாகாதோ? திருவேங்கடமுடையானுடைய ஸமாசாரம் உங்களுக்குத் தெரியாமலிராதே ஏதாவது சொல்லலாகாதா? பிறர்க்குப் பொன்னையும் முத்தையும் பொழிகின்ற நீங்கள் எனக்கு ஒருவாய்ச்சொல் பொழிய அருமையோ? என்கிறாள் முன்னடிகளில்.
இவள் அப்படிக் கேட்டவளவிலும் அம்முகில்கள் இன்னஸமாசாரமுண்டென்று மறுமாற்றம் சொல்லப்பெறாமையாலே தனது ஆற்றமையின் கனத்தைச் சொல்லி வருந்துகின்றாள் பின்னடிகளில் – அவ்வெம்பெருமானிடத்து வைத்த காம்மாகிற தீயானது வெளியிலுள்ள அவயவங்களை நிஸ்ஸேஷமாக தஹித்துவிட்டு இரை காணாமல் உள்ளே புகுந்து தஹிக்க, தென்றற் காற்றானது அதற்குத் துணையாயிருந்துகொண்டு நோயை அதிகப்படுத்த இப்படி இரண்டின்கையிலும் அகப்பட்டுக்கொண்டு எத்தனைநாள் நான் தடுமாறிக்கிடப்பேனென்கிறாள்.
சாமம் – ‘ஸ்பாமம்‘ என்ற வடசொல்விகாரம். தாளாளன் – பெருமை பாராட்டி நிற்பவன். இங்கே வியாக்யான ஸ்ரீஸூக்தி. – “பிறர்க் கண்டவுடம்பைத் தனக்கென்றிருக்கு மவனாய்த்து, “***“ (பக்தாநாம்) என்றிருக்கிற வுடம்பைத் தனக்கென்றிருக்கிறவன், ‘இவ்வடிவு படைத்த நாமோ சென்றணைவோம்? இதில் அபேக்ஷையுடையார் வேணுமாகில் தாங்களோ வருகிறார்கள்‘ என்று எழ வாங்கியிருக்குமவன்‘ – என்று. இதனால் பரத்வம் கொண்டாடி நிற்பவன் என்ற தாயிற்று. தாள் என்று திருவடிக்குப்போய் அதனால் திருமேனியை உபலக்ஷித்ததாக்கி, திருமேனியை அடியார்க்கு போக்யமாக்காதே தனக்கே போக்யமாக ஆளுமவன் என்று ஒருவர் பொருள் விவரித்தார். இதனை ஆராய்வது.
வார்த்தை என்னே? – அவர்தாம் இங்குவந்திலராகிலும் ஒரு வார்த்தையாகிலும் சொல்லியனுப்ப வமையுமே, அதுவுமில்லையோ என்கை. கங்குலிடை – இரவிலே, ஏமத்து – கட்டுங்காவலுமாயுள்ள விடத்தில் என்றும் பொருள்கொள்ளலாம்.
English Translation
O Great clouds raining precious pearls over Venkatam hills! What news from the Lord of dark Cloud-hue? Alas, scorched by the raging fire of mid-night passion, I stand and wait for the soothe cool breeze.
