(577)

(577)

விண்ணீல மேலாப்பு விரித்தாற்போல் மேகங்காள்

தெண்ணீர்பாய் வேங்கடத்தென் திருமாலும் போந்தானே

கண்ணீர்கள் முலைக்குவட்டில் துளிசோரச் சோர்வேனை

பெண்ணீர்மை யீடழிக்கும் இதுதமக்கோர் பெருமையே?

பதவுரை

விண்

ஆகாசம் முழுவதிலும்
நீலம் மேலாப்பு விரித்தால் போல்

நீல நிறமான மேற்கட்டியை விரித்துக்கட்டினாற் போலிரா நின்ற
மேகங்காள்!

மேகங்களே!
தெள் நீர் பாய்

தெளிந்த தீர்த்தங்கள் பாயுமிடமான
வேங்கடத்து

திருவேங்கடமலையிலெழுந்தருளி யிராநின்ற
என் திருமாலும்

திருமாலாகிய எம்பெருமானும்
போந்தானே

(உங்களோடுகூட) எழுந்தருளினானோ?
முலை குவட்டில்

முலை நுனியிலே
கண் நீர்கள் துளி சோர

கண்ணீர் அரும்ப
சோர்வேனை

வருந்துகிற என்னுடைய
பெண் நீர்மை ஈடு அழிக்கு மிது

பெண்மையை உருவழிக்கிறவிது
தமக்கு

அவர் தமக்கு
ஓர் பெருமையே

ஒரு பெருமையர யிரா நின்றதோ?

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- ஆசாசப்பரப்பு முழுவதும் இடமடையம்படி நீலநிறமாயிருப்பதொரு மேற்கட்டி கட்டினாற்போன்ற மேகங்களே! என் திருவேங்கடமுடையானும் உங்களோடு இவ்விட்ட மெழுந்தருளிளானோ? என்று ஆண்டாள் மேகங்களை நோக்கிக்கேட்க, அதற்கு அவைமறுமொழி யொன்றுஞ் சொல்லாதொழியவே, ‘அவன் வராமையாலன்றோ இவை பேசாதிருக்கின்றன‘ என்று கண்ணீர் வெள்ளமிடத்தொடங்க, ‘மேகங்களே! இப்படி நான் கண்ணீர்விட்டு அழும்படி அவன் என்னைப் பரிதாபப்படுத்துவது அவனுடைய பெருமைக்கு ஏற்குமோ? நீங்களே சொல்லுங்கள் என்கிறாள்.

திருவேங்கடமுடையானும் தானுமாக ஒரு படுக்கையிற் கிடந்து லீலா ரஸம் அநுபவிக்கும் போதைக்கு ஆகாசத்தில் காளமேகங்களின் பரப்பானது மேற்கட்டி கட்டினாற்போலத் தோற்ற விண்ணீலமேலாப்பு விரிந்தாற்போல் மேகங்காள்! என்கிறாள். திருவேங்கடவன் முன்பு இவளோடு புணரவந்தபோது பிராட்டியுந் தானமாக வந்தமை தோன்றுமாம் என்திருமாலும் என்றதனால்.

பெண்ணீர்மையீடழிக்குமிது – ஈடழித்தலாவது – சீர்கெடும்படி செய்தல். பெண்ணீர்மையாவது பெண்களுக்கு உரிய தன்மை, அதனைச் சீர்கெடுத்தலாவது எதுவும் நாயகனுடைய மனக்கருத்தின்படி நடக்கக்கடவது, அவன் வந்தபோது வருக, ‘அவனது வரவைப்பற்றி நாம் சிறிதும் விசாரப்படத்தகாது, நாம் ஒருவகை முயற்சியும் செய்யலாகாது‘ என்று ஸ்வரூபாநுரூபமாக இராமல் ‘என் திருமாலும் பேர்ந்தானே? என்று கேட்கும்படியாகவும் கண்ணீர்கள் முலைக்குவட்டில் துளிசோரச் சோரும்படியாகவும் பதற்றமான தசையிலே கொண்டு நிறுத்துகை.

தமக்கு ஓர் பெருமையே? – “***“ என்று நாடெங்கும் புகழப்பெற்றவர், அந்த ஸ்ரீ மஹாலக்ஷ்மிக்குக் கரசரணாதி அவயவஸ்தாநீயாயையாயிருக்கிற என்னையும் அவளைப்போலே மகிழ்வித்தல் பெருமையாகுமேயன்றி, இப்படி முகங்கொடாதே நோவுபடுத்துவது பெருமையாகமாட்டாது, பழியாகவே தலைக்கட்டுமென்கை. திருவேங்கடமுடையானைப் பெரியாழ்வார் திருமகள் ஆசைப்பட்டுப் பெறாதொழிந்தாளென்றால் அவனுடைய பெருமை என்னாகும்? என்றபடியுமாம்.

English Translation

O Dark clouds spreading like a blue canopy over the sky! Does my Tirumal, –Lord of streaming Venkatam, –come with you? I swoon with tears flowing down my swollen breasts. Alas does he pride himself in destroying a maiden’s charm?

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top