(560)
கதிரொளி தீபம்க லசமு டனேந்தி
சதிரிள மங்கையர் தாம்வந்தெ திர்கொள்ள
மதுரையார் மன்ன னடிநிலை தொட்டுஎங்கும்
அதிரப் புகுதக் கனாக்கண்டேன் தோழீநான்
பதவுரை
| சதிர் இளமங்கையர் தாம் |
– |
அழகிய இளம் பெண்கள் |
| கதிர் ஒளி தீபம் |
– |
ஸூர்யனுடைய ஒளி போன்ற ஒளியையுடைய மங்கள தீபத்தையும் |
| கலசம் |
– |
பொற்கலசங்களையும் |
| உடன் ஏந்தி |
– |
கையில் ஏந்திக் கொண்டு |
| வந்து எதிர்கொள்ள |
– |
எதிர்கொண்டுவர, |
| மதுரையார் மன்னன் |
– |
மதுரையிலுள்ளார்க்கு அரசனான கண்ணபிரான் |
| அடிநிலை தொட்டு, |
– |
பாதுகைகளைச் சாத்திக்கொண்டு |
| எங்கும் அதிர |
– |
பூமியெங்கும் அதிரும்படியாக. |
| புகுத |
– |
எழுந்தருள் |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- பருவத்தாலும் வடிவழகாலும் தங்களையே எல்லாரும் நோக்கிக்கொண்டிருக்கும்படி மிக்க அழகுவாய்ந்தமாதர்கள் மங்களஸம்ருத்திக்காகத்தீபங்களையுமு பூர்ண கும்பங்களையும் ஏந்திக்கொண்டு எதிர்கொண்டுவர, கண்ணபிரான் பாதுகைசாத்திக்கொண்டு பூமி அதிரும்படி ஸந்தோஷமாக நடநதுவரும்படியைக் கனவில் கண்டேனென்கிறாள்.
கதிர் என்று கிரணத்திற்குப் பேராயினும் இங்கு இலக்கணையால் ஸூர்யனுக்குப்பேராகிறது. இடையில் விளக்கு அணைந்தால்மங்களத்துக்கு குறையாமென்று ஸூர்யப்ரபைபோலே மிக்கவொளியையுடைய விளக்குக்களைக் கொண்டுவருவர்களென்க. தீபம், கலசம் – வசொற்கள்.
மதுரையார் மன்னர் – மற்றதிருநாமங்களிற்காட்டில் இத்திருநாமத்தில் கண்ணபிரானுக்கு உகப்பு விஞ்சியிருக்குமென்பதற்கு ஒருஐதிஹ்யமிருளிச் செய்வர் பெரியவாச்சான்பிள்ளை – ஒரு பக்தன் ஒருக்ருஸ்ணவிக்ரஹத்தை ஏறியருளப்பண்ணி ‘இவர்க்கு என்ன திருநாமம்சரத்துவோம்‘ என்று சிந்தியாநிற்க, பெருமாள் அவனுடையகனவிலே வந்துதோன்றி ‘அப்பா! எனக்கு கன்னாபின்னாவென்று சிலநாமங்களை இடாமல் மதுரைமன்னன் என்றுபெயரிடு‘ என்று நியமித்தாராம்.
அடிநிலைதொட்டு என்பதற்கு “தன் திருவடிநிலைகளை அருகிருப்பார் கையில் கொடுத்துவிட்டு“ என்பதாகச் சிலர் பொருள்வரைந்து, பெரியவாச்சான்பிள்ளை வியாக்கியானந்தையும் “(அடிநிலையித்யாதி) திருவடிநிலைகளைக் கொடுத்து“ என்று அச்சிடுவித்தார்கள். தொடுத்து என்றதைக் கொடுத்து என மயங்கி கொண்டு என்கை. பாதுகையணிந்து நடந்தாலன்றோ பூமியதிரும். கோத்து என்றிருந்தது கொடுத்து என்றாயிற்று என்பாருமுளர்.
“எ“குமதிரப்புகுத“ என்றவிடத்திற்கு ஸம்வாதமாக ஒருஐதிஹ்ய மருளிச்செய்வர் – முன்பு மஹாபலியஜ்ஞபூமியிலே ஸ்ரீவரமநன் நடந்த போது பூமி நெளிந்த்தென்று ஒருக்ரந்தத்திலே, கிடக்கக்கண்டு ‘இதற்கு என்னபொருள்?‘ என்று சிலமுதலிகள் சர்ச்சைப்பண்ணுகையில் “ஸர்வேச்வரனன்றோ அவன்நடந்தால் பூமிநெளியச் சொல்லவேணுமா?“ என்று ஒருஸ்வாமிசொல்ல, பட்டரருள்சிசெய்யுமது கேட்கவேணுமென்று நஞ்சியர் பட்டரைக் கேட்க, “யாசகவ்ருத்தியில் பதற்றத்தாலே அடியிட்டபடியால் பூமி நெளிந்ததுகாணும்“ என்று பட்டர் அருளிச்செய்தாராம். ஒருபூமிக்காக அப்படி பதறிவந்தவன், பெயரியாழ்வார் திருமகளைப்பெறுகைக்கு எங்ஙனே பதறமாட்டான்.
English Translation
I had a dream O sister! Bright young ladies with lamps and sacred urns came to greet our king of Mathura. The Earth trembled as he strode with sandaled feet.
