(556)

(556)

வாரண மாயிரம் சூழவ லம்செய்து

நாரண நம்பி நடக்கின்றா னென்றெதிர்

பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்

தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழீநான்

பதவுரை

தோழீ

என் உயிர்த்தோழியே!
நம்பி

ஸகலகுணபரிபூர்ணனான
நாரணன்

ஸ்ரீமந் நாராயணன்
ஆயிரம் வாரணம் சூழ

ஆயிரம் யானைகள் சூழ்ந்து வர
வலம் செய்து நடக்கின்றான் என்று

பிரதக்ஷிணமாக எழுந்தருளாகிறனென்று (வாத்யகோஷதிகளால் நிச்சயித்து)
பொன் பூரண குடம் வைத்து

பொன்மயமான பூர்ணகும்பங்களை வைத்து
புரம் எங்கும்

பட்டணம் முழுதும்
தோரணம் நாட்ட

தோரண ஸ்தம்பங்கள் நாட்ட (இந்த நிலையையை)
நான் கனாகண்டேன்

நான் ஸ்வப்நத்தில் அநுபவித்தேன்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- ஸ்ரீமந்நாராயணன் என்னை மணம்புணருவதாக நிச்சயித்து ஆயிரக்கணக்கான யானைகளைப்புறப்பட விட்டுக்கொண்டு மிக்கஸம்ப்ரமங்களுடன் திருவீதிப் பிரதக்ஷிணமாக எழுந்தருளுகிற செய்தியை அறிந்த நகரத்திலுள்ளார் யாவரும் “பெரியவர்கள் எழுந்தருளும்போது பூர்ணகும்பம் வைக்கவேணும்“ என்ற சாஸ்த்ரவிதிப்படியும் சிஷ்டாசார முறைப்படியும் தங்கள் தங்கள் திருமாளிகைக்கெதிரில் பூர்ணகும் பங்களை வைத்தும் தோரணங்கள் நாட்டியும் இப்படிப்பலவகையாக மங்களாலங்காரங்கள் செய்வதாகக் கனாக்கண்டேன் தோழீ! என்று தோழியுடுன் வருத்தகீர்த்தநம் பண்ணித் தரிக்கிறாள்.

வாரணம் – தற்சமவடசொல். ‘அயிரம்யானை‘ என்று அருளிச்செய்தமைக்குக் கருத்து – “தன்னோராயிரம் பிள்ளைகளோடு தளர்நடையிட்டு வருவான்“ (பெரியாழ்வார் திருமொழி 3-1-1.) என்று கண்ணபிரானுக்கு ஆயிரம் பேர்த் தோழன்மார்கள் உண்டானையாலும் அவர்களெல்லாரும் விட்டுப்பிரியாமல் கூடவேவருவார்களாகையாலும், கண்ணபிரான் வேறுபடுத்தமாட்டானாகையாலும், * தம்மையேநாளும் அத்தோழன்மார்களையும் யானைமீதேற்றி உகப்பனாகையாலும் “வாரணமாயிரஞ சூழ“ எனப்பட்டதென்க.

ஆநிரைமேய்க்கப்பிறந்த கண்ணபிரானுக்கு * வாரணமாயிரஞ் சூழவருதல் எங்ஙனே? என்னில், “உந்துமதகளிற்றன் ஓடாத்தோள்வலியன, நந்தகோபாலன்“ (திருப்பாவை) என்றபாட்டின் ஆறாயிரப்படி வியாக்கியானத்தில் “உந்து மதகளிற்றன் – மத்தகஜங்களையுடையவர் என்றுமாம், ஆனையுண்டோ இவர்க்கென்னில், ஸ்ரீவஸுதேவரும் தாமும் ஒருமிடறாயிருக்கையாலே அங்குள்ளது இங்கேயாய் இங்குள்ளது அங்கேயாய் ஒன்றாய்ப் போருகையாலும் தத்த (***) புத்ரனுக்கு இரண்டிடத்திலும் ப்ராப்தியுண்டாகையாலும் ஆனையுண்டாகத் தட்டில்லை, ‘வாரணமாயிரஞ் சூழ‘ என்றதிறே, திருவாய்ப்பாடியில் ஆனைகளும் பசுக்களுங் கலந்துதிரியுமத்தனையிறே“ என்றருளிச்செய்துள்ளமை காண்க.

புரமெங்கும் – புரம் – வடசொல், பட்டணம் என்று பொருள், அதாவது – ஸ்ரீவில்லிபுத்தூர். “புறமெங்கும்“ என வல்லின றகரப்பாடங் கொவ்வாரு முளர், எல்லாவிடங்களிலுமென்றபடி. தோரணம் – வடசொல்.

English Translation

I had a dream O sister! The town was decked with festoons and golden urns. Surrounded by a thousand caparisoned elephants our Lord Narayana came working towards me.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top