(535)
காட்டில் வேங்கடம் கண்ண புரநகர்
வாட்ட மின்றி மகிழ்ந்துறை வாமனன்
ஓட்ட ராவந்தென் கைப்பற்றி தன்னோடும்
கூட்டு மாகில்நீ கூடிடு கூடலே
பதவுரை
|
கூடலே!-’- |
||
| காட்டில் வேங்கடம் |
– |
காட்டிலுள்ள திருவேங்கடமலையில |
| நகர் கண்ணபுரம் |
– |
நகரமாகிய திருக்கண்ண புரத்திலும் |
| வாட்டம் இன்றி |
– |
மனக்குறையில்லாமல் |
| மகிழ்ந்து |
– |
திருவுள்ளமுகந்து |
| உறை |
– |
நித்யவாஸம் செய்தருளுகிற |
| வாமனன் |
– |
வாமநாவதாரம் செய்தருளிய எம்பெருமான் |
| ஒட்டரா வந்து |
– |
ஓடிவந்து |
| என்கை பற்றி |
– |
என்னுடைய கையைப் பிடித்து |
| தன்னொடும் |
– |
தன்னொடு |
| கூட்டும் ஆகில் |
– |
அணைத்துக் கொள்வனாகில் |
| நீ கூடிடு |
– |
நீ கூடவேணும் |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- எம்பெருமான் என்னோட ஸம்ச்லேஷிக்கவேணுமென்று திருவேங்கடமலை, திருக்கண்ணபுரம் முதலிய திருப்பதிகளிலே வந்துநிற்கிறான்’ எனக்கு இசைவு உண்டோ இல்லையாவென்று சங்கித்துத் தாமஸித்து நிற்கின்றான்போலும்’ அப்பெருமான் என்னுடைய ஆதுரதையை நன்கறிந்து சடக்கென ஓடிவந்து என்னைத்தன்னோட அணைத்துக் கொள்ளுமாறு விதி வாய்க்கவேணுமென்று மநோரதிக்கிறாள்.
காட்டில் வேங்கடம் :- ஸ்ரீதண்டகாரண்யத்தில் ரிஷிகளோடே கூடியிருந்து வநவாஸரஸம் அநுபவித்தபடிக்கு ஒப்பாகும்-திருமலையில் வாழ்ச்சி. கண்ணப்புரநகர்-பிரகு திருவயோத்தியிலே அனைவருடனுங் கூடியிருந்து நகாவாஸ்ரஸம் அநுபவித்தபடிக்கு ஒப்பாகும்- திருக்கண்ணபுரத்தில் வாழ்ச்சி. திருமலையை விருந்தாவனத்தோ டொத்தாகவும் திருக்கண்ண புரத்தைத் திருவாய்ப் பாடியோடொத்ததாகவும் நிர்வஹிக்கவுமாம். நகாவாஸத்தோடு வநவாஸ்த்தோடு வாசியற இரண்டையும் இனிதாகக் கொள்ளும் மனமாண்பு விபவாவதாரத்தில் இருந்தது போலவே அர்ச்சாவதாரத்திலும் உள்ளபடியை இத்தால காட்டிற்றாகிறது.
வாட்டமின்றி மகிழ்ந்துஉறை:- ‘குழுமித்தேவர் குழாங்கள் கைதொழச்சோதி வெள்ளத்தினுள்ளே எழுவதோருரு” என்னும்படி நித்தியஸூரிகளுடைய பாரிஷத்தின் நடுவே அத்யுஜ்வலனாய் எழுந்தருளியிருக்குப்புதவிர்ந்து மநுஷ்யநாற்றம்நாறுகிற இந்த ஸம்ஸாரநிலத்திலே வந்து கானமும் வானரமும் வேடுமானவற்றுக்கு முகங்கொடுத்துக் கொண்டு நிற்கவேண்டிற்றே! என்று திருவுள்ளத்தில் வெறுப்பு இல்லாமல், இருட்டறையில் விளக்குப் போலே நம்முடைய கல்யாண குணங்களெல்லாம் நன்கு விளங்குமாறு இங்கு வரப்பெற்றோமே! என்ற அளவற்ற மகிழ்ச்சியோடே எழுந்தருளியிருக்கிறபடி,
உறை- ராமக்ருஷ்ணாத்யவதாரங்கள் ஒருகாலத்தளவிலேயாய்ப் பின்னானார் வணங்குஞ்சோதியாகாமல், தீர்த்தம்ப்ரஸாதித்துவிட்டுத் தன்னுடையச் சோதிக்கெழுந்தருளினாப் போலன்றிக்கே நித்தியவாஸம் செய்தருளுகிறவிடமாய்த்து அர்ச்சாவதாரத் திருப்பதிகள்.
எம்பெருமாளை அடிபணிந்து வேறுபெறவேண்டியதன்மை சேதார்களுடையதாகையாலே அவ்வெம்பெருமான் எழுந்தருளியிருக்குமிடத்தைத் தேடிக்கொண்டு செல்லவேண்டியவர்கள் சேதநர்களாயிருக்க’ இவர்களிடத்தை நோக்கி அவவெம்பெருமான் புறப்பட்டு வரும்படியான ஸந்தர்ப்பமென்? என்று சங்கை பிறக்கக்கூடுமாதலால் அந்த சங்கைக்குப்பாரிஹரமாக வாமனன் என்கிறாள்’ தன் உடைமையைப் பெறுகைக்குத் தான் இரப்பாளனாய் அவதரித்தபடியிறே வாமநாவதாரம். இதனால் சேதநலாபம் ஈச்வரனுக்குப் புருஷார்த்தமேயன்றி ஈச்வரலாபம் சேதனனுக்குப் புருஷார்த்தமன்று என்னும் ஸத்ஸம்ப்ர தாயார்த்ம் விளங்கும்.
ஓட்டராவந்து:- ஓடிவந்து என்றபடி. ‘ஓட்டம் தரா’ என்ற விரண்டு பதங்கள் ‘ஒட்டரா’ எனச் சிதைந்து புணர்ந்தன.
“வாமனன் ஒட்டராவந்து” என்று வாக்யஸந்தர்ப்ப ஸ்வாரஸ்யத்தால் பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்கிறார் காண்மின் – “ஓரடி மண்ணுக்குப் பதறுமவன் இவளைப் பெறும்போதைக்கு ஆறியிரானிறே’ ஆஸுரப்ரக்ருதியான மஹாபவிமுன்னே கழஞ்சுமண்ணுக்குப் பதறிநடக்குமவன், இவனொருதலையானால் ஆறியிரானிறே! காற்றில் முன்னங்கடுகி ஓடிவரக்கடவனிறே.”
“ஒட்டராவந்து என்கை பற்றுவானாகில்” என்றாவது, “ஒட்டராவந்து என்னைத் தன்னொடுங் கூட்டுமாகில்” என்றதற்குக் கருத்து:-“அங்கண்ணனுண்ட வென்னாருயிர்க் கோதிது” என்னுமாபோலே பிடித்தபிடியிலே (அநந்யார்ஹை யாம்படி பிடிக்கவேணும்’ அந்த ஹஸ்தஸ்பர்சத்தாலே) நான் துவண்டுபோய் ஸ்தப்தையாய் நிற்கையில் என்னை இழுத்தணைத்துத் தன்திருமார்பிலே ஏறிட்டுக்கொள்ளவேணும் என்கை.
கூட்டுமாகில் நீகூடிடு கூடலே!” என்றது-“அவன் எழுந்தருளி என்னைக் கூட்டிக் கொள்ளும் படியாக நீ அநுகூலிக்கவேணும்” என்றபடி. … (உ)
English Translation
Vamana, the handsome bachelor lives in pleasure, owning the forest of Venkatam and the city of Kannapuram. Will he come running and take me by my hand? If he will come, then join, O Lord-of-the-circle.
