(495)
அம்கண்மா ஞாலத்து அரசர் அபிமான
பங்கமாய் வந்துநின் பள்ளிக்கட் டிற்கீழே
சங்கம் இருப்பார்போல் வந்து தலைப்பெய்தோம்
கிங்கிணி வாய்ச்செய்த தாமரைப் பூப்போலே
செங்கண் சிறுச்சிறிதே எம்மேல் விழியாவோ
திங்களும் ஆதித் தியனும் எழுந்தாற்போல்
அம்கண் இரண்டும்கொண்டு எங்கள்மேல் நோக்குதியேல்
எங்கள்மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய்.
பதவுரை
| அம் கண் மா ஞாலத்து அரசர் |
– |
அழகியதாய் விசாலமாய்ப் பெரிதாயுள்ள பூமியில் (அரசாட்சி செய்த ராஜாக்கள்) |
| அபிமான பங்கம் ஆய் வந்து |
– |
(தங்களுடைய) அஹங்காரமடங்கி வந்து |
| நின் பள்ளிக் கட்டில் கீழே |
– |
உன் சிங்காசனத்தின் கீழ் |
| சங்கம் இருப்பார் போல் |
– |
திரள்திரளாக இருப்பது போலே |
| வந்து |
– |
நாங்களும் உன் இருப்பிடத்தேற) விடைகொண்டு |
| தலைப் பெய்தோம் |
– |
கிட்டினோம்’ |
| கிங்கிணி வாய்ச் செய்த |
– |
கிண்கிணியின் வாய்ப்போ லிரா நின்ற (பாதிவிக ஸிதமான) |
| தாமரைபூ போலே |
– |
செந்தாமரைப் பூப்போன்ற |
| செம் கண் |
– |
சிவந்த திருக்கண்கள் |
| சிறுச்சிறிது |
– |
கொஞ்சங்கொஞ்சமாக |
| எம்மேல் |
– |
எங்கள் மேலே |
| விழியாவோ |
– |
விழிக்க மாட்டாவோ? |
| திங்களும் |
– |
சந்திரனும் |
| ஆதித்யனும் |
– |
ஸுர்யனும் |
| எழுந்தால் போல் |
– |
உதித்தாற் போல |
| அம் கண் இரண்டும் கொண்டு |
– |
அழகிய திருக்கண்களிரண்டினாலும் |
| எங்கள் மேல் நோக்குதிஏல் |
– |
எங்களைக் கடாக்ஷித்தருள் வாயாகில் |
| எங்கள் மேல் சாபம் |
– |
எங்கள் பக்கலிலுள்ள பாபம் |
| இழிந்து |
– |
கழிந்துவிடும்’ |
|
ஏல் ஓர் எம் பாவாய் |
||
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- கீழ்ப்பாட்டில், “மாற்றாருனருக்கு வலிதொலைந்து” இத்யாதியால் தாங்கள் போக்கற்று வந்தவாறைக் கூறின விடத்தும், “இன்னமும் இவர்களுடைய அகவாயை அறியக்கடவோம்” என்று கண்ணபிரான் பேசாதே கிடக்க’ அதுகண்ட ஆய்ச்சிகள், “பிரானே! இப்படியோ இன்னும் உன் திருவுள்ளத்தில் ஓடுவது? எமக்கு நீ தான் புகலாகாதொழிந்தாலும் வேறொரு புகலைத்தேடி ஓடாதபடி அநந்யார்ஹைகளாய் வந்து அடிபணியா நின்ற எங்களை நீ கடாக்ஷித்தருளவேணு” மென்று பிரார்த்திக்கும் பாசுரம், இது.
தம்மிடத்தில் ஈச்வரத்வ புத்தியையுடைய சில அஹங்காரிகளான அரசர்கள் “இப்பூமிக்கு நாம் கடவோம்” என்று அபிமானித்திருந்த அஹங்காரத்தை அடிப்பற்றோடு அழித்துப்போகட்டு ‘ஸோஹம்’ என்றிருந்த நிலைகுலைந்து ‘தாஸோஹம்’ என்று சேஷத்வத்தை முறையிட்டுக் கொண்டு ஸர்வஸ்வாமியான உன்னுடைய பள்ளிக்கட்டிலின் கீழ் வந்து புகுந்து கூட்டங்கூட்டமாக இருப்பதுபோல, நாங்களும் எங்களுடைய ஸ்த்ரித்வாபிமாநத்தைத் தவிர்த்துக்கொண்டு இங்ஙனே வந்து புகுந்தோம்’ இனி எம்மைக் கடாக்ஷி த்தருளதியேல், இன்றளவும் உன்னைப் பிரிந்திருந்ததற்கு அடியான பாவங்களடங்கலும் ஒழிந்துவிடு மென்கிறார்கள்.
அபிமானபங்கமாய்-“ஒரு நாயகமாய் ஓடவுலகுடனாண்டவர், கருநாய் கவர்ந்த காலர்சிதைகிய பானையர், பெருநாடுகாண இம்மையிலே பிச்சைதாங்கொள்வர்” என்று நம்மாழ்வார் அருளிச்செய்தபடி ராஜ்யம் முதலியவற்றை இழந்து மிக்க பரிபவங்கள் பட்டு அஹங்காரமடங்கப் பெற்றனரென்க.
ஆய்ச்சிகள் “வந்துதலைப் பெய்தோம்” என்றதைக் கேட்ட கண்ணபிரான் “பெண்காள்! எல்லாம் ஸபலமாயிற்றதன்றோ? இனி ஒரு குறையுமில்லையே?” என்ன’ “உன்னுடைய கடாக்ஷம்பெற நினைத்தன்றோ நாங்கள் வந்தது’ அது பெறவேண்டாவோ?” என்கிறார்கள்-“கிங்கிணி வாய்ச்செய்த” இத்யாதியால்.
ஏதகாலத்தில் ஞாயிறும் திங்களு முதித்தால் தாமரைமலர்பாதி முகுளிதமாயும், பாதி விகஸிதமாயுமிருக்கு மென்றுகொண்டு, கண்ணபிரானுடைய திருக்கண்களுக்கு அந்த நிலைமையை வேண்டுகின்றனர். இஃது, இற்பொருளுவமை’ வடநூலார், ‘அபூதோபமை’ என்பர். கண்ணனுடைய திருக்கண்கள். சோதனருடைய குற்றங்குறைகளை நினைத்துப் பாதி மூடியும், அவர்களுடைய கூக்குரலைக் கேட்டுப் பாதிதிறந்து மிருக்கு மாதலால், அதற்கு இந்த உவமை கூறியது மிகப் பொருந்தும்.
முதலிலேயே பூர்ணகடாக்ஷஞ் செய்தருளினால் தாங்கப்போகாதென்று, பொறுக்கப் பொறுக்கக் கடாக்ஷி க்கவேணு மென்கிறார்கள், சிறுச் சிறிதே என்பதனால்.
“கிங்கிணிவாய்ச் செய்த” என்றவிடத்து, செய்த- என்கிறவிது-உவமஉருபு’ (உபமாவாசகபதம்) எனவே, கிண்கிணிவாய்போன்ற என்றதாயிற்று. கிண்கிணி- அரைச்சதங்கை’ பாதிபாகம் மூடினவாறாகவும், பாதிபாகம் திறந்தவாறாகவுஞ் செய்யப்படுவதொரு ஆபரண விசேஷம்.
English Translation
Like the great kings of the wide world, who came in hordes and stood humbly at your bedstead, we have come to you. May your lotus bud like eyes open slowly on us, forming like the mouth of dancer’s ankle bells? May the gaze of your two eyes fall upon us, like the Sun and the Moon rose together. May the curse on us be lifted?
