(916)
வளவெழும் தவள மாட மதுரைமா நகரந் தன்னுள்
கவளமால் யானை கொன்ற கண்ணனை அரங்க மாலை
துவளத்தொண் டாய தொல்சீர்த் தொண்டர டிப்பொ டிசொல்
இளையபுன் கவிதை யேலும் எம்பிறார் கினிய வாறே.
பதவுரை
| வளம் எழும் தவளம் மாடம் |
– |
அழகு விஞ்சியிருப்பதும் வெண்ணிறமுடையதுமான மாடங்களையுடைய |
| மா மதுரைநகரம் தன்னுள் |
– |
பெருமை தங்கிய வடமதுரையில் |
| கவளம் மால் யானை கொன்ற |
– |
கவளங் கொண்டிருப்பதும் பெருத்ததுமான (குவலயாபீடமென்னும் கம்ஸனுடைய) யானையைக் கொலைசெய்தருளின |
| கண்ணனை |
– |
ஸ்ரீ க்ருஷ்ணனாகிய |
| அரங்கம் மாலை |
– |
கோயிலிலே (கண்வளரும்) எம்பெருமானைக் குறித்து |
| துளபம் தொண்டு ஆய |
– |
திருத்துழாய்க் கைங்கர்ய நிஷ்டரும் |
| தொல் சீர் |
– |
இயற்கையான சேஷத்வத்திலே நிலை நின்றவருமான |
| தொண்டரடிப் பொடி |
– |
தொண்டரடிப்பொடியாழ்வார் (அருளிச் செய்த) |
| சொல் |
– |
திருமாலையாகிய இத்திருமொழி |
| இளைய புன் கவிதை ஏலும் |
– |
மிகவும் குற்றங்குறைகளை யுடைய கவித்வமாயிருந்த போதிலும் |
| எம்பிராற்கு |
– |
பெரிய பெருமாளுக்கு |
| இனிதே ஆறே |
– |
பரமபோக்யமாயிருந்தபடி யென்! என்று ஈடுபடுகிறார்.) |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- விசேஷ உணவுகளையுண்டு மதம் பிடித்துக் கொழுத்திருந்த குவலயாபீடமென்னும் கம்ஸனது யானையை ஒழித்தருளினாற்போலே தம்முடைய ப்ராப்தி ப்ரதிபந்தகங்களையும் போக்கினபடியை அருளிச் செய்து பெரியபெருமாளுடைய ப்ரீதியே தமக்கு ப்ரயோஜன மென்று முடிக்கிறார் .
கவளம் என்று யானையுணவுக்குப் பெர். “களவமால்யானை” என்றும் பாடமுண்டு. அப்போது கலப: என்னும் வடசொல் களவமெனத்திரிந்ததாம் ஒரு பருவத்தில் பெருத்தயானை யென்றபடி. இளைய புன் என்பவை -சப்தத்தில் இளமையையும் கவித்வத்தில் குற்றத்தையும் கூறும்.
எம்பெருமானைக் குறித்து அடியேன் சொன்ன சொற்கள் குற்றம் குறைகள் நிரம்பிய வையாயினும், எனது நெஞ்சில் உருக்கத்தையும் ஊற்றத்தையும் அறிந்திருக்கும் பெரிய பெருமாளுக்கு இது ஆராவமுதமாயிருக்கு மென்கிறார்.
“இப் பிரபந்தம் கற்றார்க்குப் பலஞ்சொல்லா தொழிந்தது-இவ்வுகப்புத்தானே அவர்களுக்குப் பலமாகையாலே” என்ற வ்யாக்யாநஸூக்தி இங்கு அநுஸந்திக்கத்தக்கது.
அடிவரவு:- காவல் பச்சை வேதம் மொய்த்த பெண்டிர் மறம் புலை வெறுப்பு மற்றும் நாட்டினான் ஒரு நமனும் எறி வண்டு மெய் சூது விரும்பி இனிது குட பாய் பணி பேசு கங்கை வெள்ளம் குளித்து போது குரங்கு உம்பரால் ஊர் மனம் தவமார்த்து மெய்யுள்ளம் தாவி மழை தெளி மேம்பொருளடிமை திரு வான் பழுதில் அமரப் பெண் வளவெழும் கதிர்.
தொண்டரடிப்பொடியாழ்வார் திருவடிகளே சரணம்.
English Translation
Krishna, the killer of the rutted elephant in the great city of Mathura, is the Lord of Arangam where beautiful mansions rise high. These words of the trusted Tulasi-garland-weaver Tondaradippodi, even if puerile as poetry, are sweet to the Lord.
