(570)
சந்திர மண்டலம்போல் தாமோத ரன்கையில்
அந்தர மொன்றின்றி யேறிய வஞ்செவியில்
மந்திரம் கொள்வாயே போலும்வ லம்புரியே
இந்திரனு முன்னோடு செல்வத்துக் கேலானே
பதவுரை
| வலம்புரியே! |
– |
வலம்புரிச்சங்கே! |
| தமோதரன்கையில் |
– |
கண்ணபிரானது திருக்கையில் |
| சந்திரமண்டலம் போல் |
– |
சந்திர மண்டலம் போலே |
| அந்தரம் ஒன்று இன்றி ஏறி |
– |
இடைவிடாது இருந்து கொண்டு |
| அவன் செவியில் |
– |
அவனுடைய காதில் |
| மந்திரம் கொள் வாய் போலும் |
– |
ஏதோ ரஹஸ்யம்பேசுகிறாய் போலிராநின்றாய், |
| இந்திரனும் |
– |
(செல்வத்தில்மிக்க வனாகப்பகழ்பெற்ற) இந்திரனும் |
| செல்வத்துக்கு |
– |
ஐச்வர்யவிஷயத்தில் |
| உன்னோடு எலான் |
– |
உனக்கு இணையாக மாட்டான் |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- கண்ணபிரானுடைய திருக்கையிலே சந்திரமண்டலம்போலே விளங்காநின்று கொண்டு ஒரு நொடிப்பொழுதும் அத்திருக்கையை விட்டுப்பிரியாமல் அங்கேயிருந்துகொண்டு அவனுடைய திருச்செவியோடே அணைந்தாற்போலிருப்பதனால் அவனது திருக்காதில் ஏதோ ரஹஸ்யம் ஓதுவான் போலேயிராநின்றாய், சிறந்த செல்வம்பெற்றவனாகப் புகழப்படுகின்ற இந்திரனுக்கும் உன்னளவு செல்வமில்லாமையாலே நீ ஒப்பற்ற ஐச்வர்யம் அடைந்தவனாயிராநின்றாய் என்கிறாள்.
“அவன் செவியில் மந்திரன் கொள்வாயேபோலும்“ என்றவிடத்து வியாக்கியான் ஸ்ரீஸூக்தி – “உம்மைப்பிரிந்து ஆற்றமாட்டாதார் பலருமுண்டு என்று திருச்செவியிலே சொல்லுகிறாய் போலிருக்கிறது அவன் செவியிலே ரஹஸ்யத் திருச்செவியிலே சொல்லுவான்போல விருக்கை. கொள்கை – கொடுக்கை“ – என்று.
இந்திரனும் என்ற உம்மையால், இந்திரன் செல்வத்தல் சிறந்தவனென்று விளங்கும், அவனினும் விஞ்சிய செல்வமுடையார் பலரிருக்க க்ஷுத்ரனான அவ்விந்திரனை உம்மைகொடுத்தெடுத்தது எங்ஙனேயெனில், இதற்குப் பெரியவாச்சான்பிள்ளை இரண்டுவகையாக அருளிச்செய்வர், இந்திரன் தான் நினைத்தபோது மழைபெய்வித்தும் அல்லாதபோது தவிர்ந்தும்போருகையாலே ஐச்வர்யமுள்ளது அவ்விந்திரனுக்கே என்றிருப்பர்கள் இடையருமிடைச்சிகளும், ஆனதுப்பற்றியேயன்றோ அவர்கள் அவ்விந்திரனுக்கே ஆராதனை செய்துவந்தார்கள். இப்போது ஆண்டாள் இடைப்பெண்ஸமாதியில் இருக்கின்றாளாதலால் அவ்விடைப்பெண்களின் கருத்தின்படி அருளிச்செய்கிறாள் என்பது முதல் ஸமாதாநம். இரண்டாவது ஸமாதாநம், – இங்கு இந்திரன் என்றது ஸாக்ஷாத்பரமாத்மாவையே சொல்லிறிறாகவுமாம், வேத வேதாந்ததாத்பரியங்களை நிஷ்கல்மஷமாகத் தேர்ந்துணர்ந்துள்ள பெரியாழ்வாரது திருமகளாதலால், இந்த்ராதிஸிப்தங்கள் பரமாத்மவாசகங்களென்று வெதாந்தசாஸ்த்ரஸித்தாந்மாகையாலே அதனையடியொற்றிக் கூடினபடி. ஸ்ரீபாஷ்யத்தில் முதல் அத்யாயத்தின் முதற்பாதத்தின் முடிவு அதிகரணமாகிய இந்த்ரப்ராணாகிகரணத்தில் இவ்விஷயம் விசதமாகக் காணத்தகும். பரமாத்மாவும் உன்னோடு செல்வத்துக்கு எலான் என்றது – அவனுடைய ஸ்வாதந்திரியச் செல்வமானது உன்னுடைய பாரதந்திரியச்செல்வத்திற்குத் தோற்றுப்போய்விடுமென்கை. பாரதந்திரியத்தின் எல்லைநிலத்தில் நிற்பவர்களையன்றோ லக்ஷ்மீஸம்பந்நராகச் சொல்லிப்போருவது. “அரசமர்ந்தானடி சூடுமாசையல்லால் அரசாகவெண்ணேன் மற்றரசுதானே“.
English Translation
O Moon-like Valampuri Conch! Forever perched on Damodara’s shoulder, you seem to be whispering secrets into his ears. Even Indra would envy your fortune.
