(569)
தடவரை யின்மீதே சரற்கால சந்திரன்
இடையுவா வில்வந்தெ ழுந்தாலே போல்நீயும்
வடமதுரை யார்மன்னன் வாசுதே வன்கையில்
குடியேறி வீற்றிருந்தாய் கோலப்பெ ருஞ்சங்கே
பதவுரை
| கோலம் பெருசங்கே |
– |
அழகியபெரிய சங்கே! |
| சாற்காலம் சந்திரன் |
– |
சரத்காலசந்திரன் |
| உவா இடையில் |
– |
பௌர்ணமியினன்று |
| தட வரையின் மீதுவந்து எழுந்தால்போல |
– |
பெரிய உதயகிரியிலே வந்து உதித்தாற்போல |
| நீயும் |
– |
நீயும் |
| வடமதுரையார் மன்னன் வாசு தேவன்கையில் |
– |
வடமதுரையிலுள்ளார்க்கு அரசானான கண்ணபிரானுடையத் திருக்கையில் |
| குடி ஏறி |
– |
குடி புகுந்து |
| வீற்றிருந்தாய் |
– |
உன் மேன்மையெல்லாம் தோற்றஇராநின்றாய் |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- சரத்காலத்தில் எல்லாக்கலைகளும் நிரம்பின பூரணசந்திரன் உதயகிரியின் மேல் வந்து தோற்றினாற்போலே, ஸ்ரீபாஞ்சஜந்யமே! நீயும் கண்ணபிரானது, திருக்கையின்மேலே அழகாகவீற்றிருந்து தோற்றாநின்றாய், உனது பெருமையே பெருமையென்று கொண்டாடுகிறாள்.
எம்பெருமானுடைய திருக்கை தடவரையாகவும், திருச்சங்காழ்வான் சரத்கால சந்திரமண்டலமாகவும் உருவகப் படுத்தப்பட்டிருக்கின்றமை அறிக. உவா என்று – அமாவாஸ்யைக்கும் பௌர்ணமிக்கும் பெயர், இங்கு பௌர்ணமி விவக்ஷிதம், இடை உவாவில் – உவாவிடையில் – பௌர்ணமியிலே என்கை. இனி, உவர் என்று கடலுக்கும் பெயருண்டாதலால், ‘கடலிலையில் நின்றும் தடவரையின்மீது எழுந்தாற்போல‘ என்றுமுரைக்கலாமாயினும் சுவைகுன்றும். சரற்கால சந்திரன் – வடசொல்தொடர். வாசுதேவன் என்றது – வஸுதேவருடைய புத்திரன் என்றும் எங்கும் நிறைந்துறையுங் கடவுள் என்றும் பொருள்படும்.
English Translation
O Beautiful Conch! Like the full moon in the autumnal Sarat season, risen high over the tall Udayagiri mount, you are perched on the shoulder of Vasudeva, our king of Mathura.
