(3296)

(3296)

தொழுதாடி தூமணி வண்ணனுக்காட்செய்து நோய்தீர்ந்த

வழுவாத தொல்புகழ் வண்குருகூர்ச்சட கோபன், சொல்

வழுவாத ஆயிரத் துள்ளிவை பத்து வெறிகளும்,

தொழுதாடிப் பாடவல் லார்துக்க சீலம் இலர்களே.

 

பதவுரை

தொழுது ஆடி

வணங்குதலும் கூத்தாடுதலுஞ் செய்து

துர் மணி வண்ணனுக்கு

அழகிய நீலமணிபோன்ற நிறமுடையனான எம்பெருமானுக்கு

ஆள் செய்து

அடிமைத்தொழில் செய்து

நோய் தீர்ந்த

நோய் தீரப்பெற்றவரும்,

வழுவாத

அவத்யமடையாத

தொல் புகழ்

இயற்கையான புகழையுடையவரும்

வண் குருகூர்

அழகிய திருநகரிக்குத் தலைவருமான

சடகோபன்

ஆழ்வார்

சொல்

அருளிச் செய்த

வழுவாத

குறையற்றதான

ஆயிரத்துள்

ஆயிரத்தினுள்ளே

வெறிகள்

வெறிவிலக்கு விஷயமான

இவை பத்தும்

இப்பதிகத்தை

தொழுதும்  ஆடி

தொழுவதும் ஆடவதுமாய்க் கொண்டு

பாட வல்லார்

பாடவல்லார்கள்

துக்க சீலம் இலர்கள்

துக்கப்படுந்தன்மையில்லாதவராவர்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- இத்திருவாய்மொழியை அன்போடு அதிகரிக்குமவர்கள் எம்பெருமானைப் பிரிந்து படுகையாகிற துக்கமின்றிக்கே வாழப்பெறுவர்கள் என்று பயனுரைத்துத் தலைக்கட்டுகின்றார்.

“ஆட் செய்து நோய்தீர்ந்த” என்று வாசகமிருந்தாலும் ‘உருபுபிரித்துக் கூட்டுதல்’ என்கிற முறைமையின்கீழ்  “நோய்தீர்ந்து ஆட்செய்த” என்று பொருள்கொள்ளத்தகும்.  “நோய்தீர்ந்து தொழுதாடிப்பாடித் தூமணிவண்ணனுக்கு ஆட்செய்த வண்குருகூர்ச்சடகோபன்” என்பது ஆறாயிரப்படியருளிச் செயல். இனி, ஆட்செய்து என்பதை சொல்திரியினும் பொருள் திரியாவினைக்குறை” என்ற நன்நூற் சூத்திரத்தின்படி எச்சத்திரிபாகக் கொண்டு ‘ஆட்செய்ய’ என்று பொருள் கொள்ளவுமாம்.  தோழியின் சொற்படியே தாய்மார்கள் தொழுதாடித் தூமணிவண்ணனுக்கு ஆட்செய்ய, அதனால் ஆழ்வார் நோய் தீர்ந்ததாகக் கூறியவாறு.

ஆழ்வாருக்கு இந்த நோய் தீருவதன்று;  ஆத்மா உள்ளவரையில் அநுவர்த்திக்கு மத்தனை.  ஆகையாலே நோய்தீர்ந்த என்று சொல்லுவதற்கு ப்ரஸக்தியில்லை; அப்படியிருக்க இங்கு ‘நோய்தீர்ந்த’ என்றது மோஹம் தெளிந்து சிறிது உணர்த்தியுண்டானமைபற்றியென்க.  இங்கே ஈட்டு ஸ்ரீஸூக்தி காண்மின்;-“தொழுதாடித் தூமணி வண்ணனுக்காட்செய்து நோய்தீர்ந்த” என்றதுக்கு அம்மங்கியம்மாள் பணிக்கும்படி-மோஹித்தவன் அல்பம் ஆச்வஸித்தவாறே மோர்க்குழம்பு குடித்தாள் தரித்தாள் கண்விழித்தாள் வார்த்தை சொன்னாள் என்பர்களிறே; அதுபோலே காணும் என்று.”

எம்பெருமானோடு கலவிபெற்று நோய்தீர்ந்ததாகச் சொல்லுகின்றதன்று; மேல் திருவாய்மொழயில் * சாலவிருத்தி, யிரவும்பகலும் மாறாமல் கூப்பிட்டிருந்தனனாதலால் அங்ஙனம் சொல்லுவதற்கில்லை; பிறந்த உணர்த்தியைக்கொண்டு நோய்தீர்ந்ததாகச் சொன்னவர்த்தனை.

வழுவாத தொல்புகழ் வண்குருகூர்ச் சடகோபன் = இப்போது ஆழ்வார்க்கு வழுவாத புகழாவது தேவதாந்தர ஸம்பந்தத்தை ஈஷத்தும் ஸஹியாமையயேயாம்.  “ஒருவன் வைஷ்ணவனாகையாவது இது” என்பர் நம்பிள்ளை.

மூன்றாமடியில் “இவைபத்து வெறிகளும்” என்பதை ‘வெறிகள் இவைபத்தும்’ என்று அந்வயித்துக்கொள்க: வெறிவிலக்கான இத்திருவாய்மொழியை என்றபடி.  வெறிவிலக்காகவது-நாயகிவரஹத்தாலே நாயகி மிகவும் வருந்திக்கிடக்க, அவளுடைய வடிவு வேறுபாட்டை நோக்கி ‘இவள் இங்ஙனம் மெலிதற்குக் காரணம் என்னோ? என்று கவலைப்பட்டுக் கட்டுவிச்சியைக் குறிகேட்க, அவளும் தன் மரபின்படி அராய்ந்து ‘இவளுக்கு முருக்கடவுள் ஆவேசித்ததொழிய வேறொன்றுமில்லை’ என்றுகூற, அதுகேட்ட தாயார் உடனே வெறியாட்டாளனை யழைப்பித்து அவனைக்கொண்டு ஆவேசமாடுவிக்கவும், ஆடறுப்பது கள்ளுகுப்பது பலியிடுதாய்ப் பரிஹாரங்கள் செய்விக்கவும், முயல அச்சமயத்தில் அவளது துன்பத்தின் மெய்க்காரணத்தையறிந்த தோழி அம்முயற்சிகளை விலக்குவதாம்.

ஆக இப்படிப்பட்ட வெறிவிலக்குத் துறையிலே அமைந்த இத்திருவாய்மொழியை ஸஹ்ருதயமாக அநுஸந்திக்க வல்லவர்கள் எம்பெருமானைப் பிரிந்து படுகிற துயரமும் அதற்குப் பரிஹாரமாக தேவதாந்தர ஸமாராதனம் பண்ணத்தேடுகையாகிற துயரமும் ஸம்பந்திக்கப் பெறாதே வாழ்வார்கள் என்று பயனுரைத்துத் தலைக்கட்டினாராயிற்று…(கக)

 

English Translation

This decad of the faultless thousand,-on hysteria,- was sung by the world-famous kurugur city’s Satakpan, freed of sickness, worshipping and dancing, n seeing the Gem-Lord.  Those who can dance and sing these songs will overcome depression of spirits

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top