(3295)

(3295)

உன்னித்து மற்றொரு தெய்வம்தொழாளவ னையல்லால்,

நும்மிச்சை சொல்லிநும் தோள்குலைக்கப்படும் அன்னைமீர்,

மன்னப் படும்மறை வாணனை வண்துவ ராபதி

மன்னனை, ஏத்துமின் ஏத்துதலும்தொழு தாடுமே.

 

பதவுரை

அவனை அல்லால்

எம்பெருமானைத் தவிர்த்து

மற்று ஒரு தெய்வம்

வேறொரு தெய்வத்தை

உன்னித்து

ஒரு வஸ்துவாக நினைத்து

தொழாள்

(இப்பெண்பிள்ளை) தொழுவது கிடையாது:

(இப்படியிருக்க)

நும்

உங்களுடைய

இச்சை

மனம் போனபடியே

சொல்லி

(நான் அநுவாதம் செய்யவும் தகாத சொற்களைச்) சொல்லி

நும்

உங்களுடைய

தோள் குலைக்கப்படும் அன்னை மீர்

தோள் அசையநிற்கிற தாய்மார்களே!,

மன்னப்படும்

நித்யமாக விளங்குகின்ற வேதங்களினால் பிரதி பாதிக்கப்படுகிறவனும்

வண் துவராபதி மன்னனை

அழகிய துவாரகாபுரிக்கு அதிபதியுமான எம்பெருமானை

ஏத்துமின்

துதியுங்கோள்:

ஏத்தலும்

துதித்தவுடனே

கதொழுது

(இப்பெண்பிள்ளை உணர்த்தி பெற்று, அவனைத்) தொழுது

ஆடும்

களித்துக் கூத்தாடுவாள்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- இப்பராங்குச நாயகிக்குக் கண்ணபிரான் பக்கலிலுள்ள அளவுகடந்த ப்ராவண்யத்தையறிந்து நீங்கள் அதற்குத் தகுதியாக நடந்துகொள்வதே யுக்தமென்கிறாள் தோழி.

“இன்னார்க்கு இன்ன பரிஹார மென்றில்;லையோ? அது அறிந்து பரிஹரிக்க வேண்டாவோ? முழங்கால் தகர, மூக்கிலே ஈரச்சீலை கட்டுமாபோலேயன்றோ நீங்கள் பண்ணுகிற பரிஹாரம்.”  என்பது நம்பிள்ளையீடு.  ஒருவனுக்கு முழங்காலிலே காயம்பட்டால் முழங்காலிலேயன்றோ சிகித்ஸை செய்யவேண்டுவது;  அதைவிட்டு, முழங்கால் பாதையின் நிவ்ருத்திக்காக மூக்கிலே சிகித்ஸை செய்வதுண்டோ?  இது ரோகத்திற்குத்தகுந்த பரிஹாரமாகுமோ? என்கை.

“……………….  -அக்ஷிரோகே ஸமுத்பந்நே கர்ணம் சித்வா குதம் தஹேத்.” என்றொரு சுலொகமுண்டு:  கண்ணில் ரோகமுண்டானால் காதையறுத்து ப்ருஷ்டபாகத்தில் சூடுபோடவேண்டியதென்று இதன்பொருள்.  மிருக சிகித்ஸை கூறுமிடத்திலே உள்ளதான

இந்த ச்லோகத்தை ஒருவன் கண்டு இந்த சிகித்ஸையைக் கண்ரோகியான வொரு மனிதனுக்குச் செய்தானாம்.  அதுபோலவன்றோ இவர்கள் செய்து போருகிற பரிஹாரமறை

யிருப்பது என்று ஏசுகிறபடி.

அவனையல்லால் மற்றொரு தெய்வம் உன்னித்துத் தொழாள்-இப்பெண்பிள்ளை ஒரு காலத்திலும் தேவதாந்தர பஜனம் பண்ணியறியாள்.  உன்னித்து என்றது தன்னெஞ்சாலே மதித்து என்றபடி; ஒரு பொருளாகக் கொண்டு தொழாள் என்கை.  “பிறைதொழும் பருவத்திலும் பிறைதொழுதறியாள்” என்பர் நம்பிள்ளை.  அம்புலிப் பருவத்தில் பிறை தொழுவது மணிசர் யாவர்க்கும்; இயல்பாக நிகழ்வது;  அதுதானும் இவட்குக நிகழ்ந்ததில்லை யென்கிறவிது மிக்க பொருத்தமானது.  “முலையோ முழுமுற்றும்  போந்தில மொய்பூங்குழல் குறிய கலையோவரையில்லை நாவோ குழறும், கடல் மண்ணெல்லாம் விலையோ வெனமிளிருங்கண் இவள்பரமே!  பெருமான் மலையோ திருவேங்கடமென்று கற்கின்ற வாசகமே.” என்ற திருவிருத்தமும் இங்கு நினைக்கத்தக்கது. “அறியாக் காலத்

துள்ளே அடிமைக்கண் அன்பு செய்வித்து” என்னும்படியிருக்கிற ஆழ்வார்க்கு தேவதாந்த ரஸ்பர்ஸம் ஒரு காலத்திலும் புகுவதற்கு ப்ரஸக்தியில்லையே.

நும் இச்சை சொல்லி=உங்கள் மனம் போனபடியே சிலவற்றைச் சொல்லி என்றபடி.  நீங்கள் சொல்லுகிற சொற்கள் இவளுடைய தன்மைக்குச் சிறிதும் சேராது:  தோற்றினபடி ஏதேனும் சொல்லிப் போருகிற உங்கள் தன்மைக்குச் சேருமத்தனை  யென்று

காட்டினபடி.  (நும் தோள் குலைக்கப்படும் அன்னைமீர்)  “தோள் அவனையல்லால் தொழா” என்கிற குடியிலேபிறந்து வைத்து உங்களுடைய தோளுக்கு இப்படியும் ஒரு  துர்க்கதியுண்டாவதே! என்று பொடிகிறபடி.  தோள் குலைத்தலென்று வீணான ஆயாஸத்

தைச் சொன்னவாறு:  தொழுகையைச் சொல்லிற்றாகவுமாம், குலைதலாவது நிலைகெடுதல். தேவதாந்தர விஷயத்தில் பண்ணுகிற நமஸ்காரமாகையாலே தோள்நிலை கெடுதலாகக் கூறுகிறபடி, ஆவேசத்தாலே தோள் அசைத்தலைச் சொல்லுவதாகக் கொள்ளுதல் ஏற்கும்.

ஒழுங்குபடச் செய்யவேண்டிய பரிஹார முறையை உணர்த்துவன பின்னடிகள். வேதாந்த விழுப்பொருளான வண்துவராபதி மன்னனுடைய திருநாமத்தைச் சொல்லியேத்துதல் செய்யவே இந்நோய் தீருமென்றாளாயிற்று.  ஏத்துதலும்-ஏத்தினவுடனே, தொழுது ஆடும்-இப்பெண்பிள்ளை உஜ்ஜீவனம் பெற்றுவிடுவள் என்றபடி.  ஆடும் என்பதை ஏவற்பன்மை வினைமுற்றாகக் கொண்டு, நீங்கள் தொழுதாடுங்கோள் என்றதாகவுமுரைக்கலாம். நன்னூல் வினையியலில் “பல்லோர் படர்க்கை முன்னிலை தன்மையில். செல்லாதாகும் செய்யுமென் முற்றே”  என்ற சிறப்பு விதிக்கு மாறாக ஆடும் என்ற செய்யுமென் முற்றுக்கு முன்னிலைப் பொருள் கொள்ளலாமோ வெண்ணில், இதனைப் புதியனபுகுதலாகக் கொள்க. “நீர் உண்ணும் என முன்னிலையிற் பன்மை யேவலாப் வருதல் புகதியன புகதல்” என்று

நன்னூலுரைகாரர்களும் சொல்லிவைத்தார்கள்.  “பழையன கழிதலும் புதியன புகதலும் வழுவல காலவகையினானே” என்ற நன்னூற் சூத்திரமுங் காண்க.

…..  என்னும் வடசொல் துவராபதி யெனத் திரிந்தது.  தக்ஷிணத்வராகையாகக் கொண்டாடப்படும் ஸ்ரீராஜமன்னார் ஸந்நிதியில் இப்பாசுரம் மிக்க சிறப்புப் பெற்றுவரும்.

 

English Translation

O Ladies, do not shake you shoulders and vent your passions.  This girl will respond to no god other than Krishna. praise the king of Dvaraka, Lord revered by the Vedas. This girl will recover and dance in ecstatic worship

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top