(3290)

(3290)

இவளைப் பெறும்பரி சிவ்வணங் காடுதல் அன்றந்தோ,

குவளைத் தடங்கண்ணும் கோவைச்செவ்வாயும் பயந்தனள்,

கவளக் கடாக்களி றட்டபிரான்திரு நாமத்தால்,

தவளப் பொடிக்கொண்டு நீரிட்டிடுமின் தணியுமே.

 

பதவுரை

அன்னைமீர்

தாய்மார்களே!

இவளை

இப்பெண்பிள்ளையை

பெறும்பரிசு

(நோய்தீர்ந்து) நாம் பெறுதற்குரிய மார்க்கம்

இ அணங்கு    வெறியாடுதலாகிற இக்காரியமன்று:

ஆடுதல் அன்று

அந்தோ

ஐயோ!இ (இப்பெண்பிள்ளை)

குவளை தட கண்ணும்

குவளை மலர்போன்றதாய் விசாலமான கண்களும்

கோவை செம் வாயும்

கோவைக்கனிபோன்று சிவந்த அதரமும்

பயந்தனன்

வைவர்ணியமடையப்பெற்றாள்:

(இதற்குத்தகுந்த பரிஹாரமென்னவென்றால்)

கவளம்

மதகரமான மருந்துகளைக் கவளங்கொண்டதாய்

கடா

மதம் பெற்றதான

களிறு

(குவலயாபீடமென்னும்) யானையை

அட்ட

தொலைத்தருளின

பிரான்

ஸ்வாமியினுடைய

திருநாமத்தால்

திருநாமோச்சாரண பூர்வகமாக

தவளம் பொடி கொண்டு

பரிசுத்தமான (ஸ்ரீவைஷ்ணவ பாத) தூளியைக் கொண்டு

வந்து

நீர் இட்டிடுமின்

நீங்கள் (இவள்மேல்) துர்வுங்கோள்

தணியும்

(இவளதுநோய்) தீரும்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- மகளுடைய நோய் தீரவேணுமென்று நீங்கள் பண்ணுகிற பரிஹாரம் நோயை இன்னமும் அதிகப்படுத்தா நின்றதேயன்றித் தீரச்செய்கின்றதில்லையே:  ஆனபின்பு இந்த முறைமைகளைவிட்டு நோயின் ஸ்வரூபத்திற்கு யோக்யமான பரிஹாரமுறைமை அனுஷ்

டிக்கப் பாருங்களென்கிறாள்.

இந்த நல்லசரக்கை இழவாமல் பெறவேண்டியிருந்தீர்களாகில் இப்படி விபரிதமான செயல்களைச் செய்வீர்களோ? பெறுவதற்கு ஹேதுவென்று நினைத்து நீங்கள் செய்கிற காரியம் இழத்தற்கன்றோ ஹேதுவாகின்றது.  வேலனைக்கொண்டு வெறியாடுவிக்கின்றவிது

இவளைப் பெறுவதற்கு ஹேதுவாகுமோ ? இவளது  உயிர் மாய்வதற்கன்றோ இது ஹேது!. அநியாயமாய்; இப்பெண்பிள்ளையை இழந்துவிடப் பார்க்கின்றீர்களே! அந்தோ! இப்படியும்

ஒரு காரியம் செய்யலாமோ! என்கிற நிர்வேதம் முதலடியாக வடிவெடுத்திருக்கின்றது.

உலகத்தில் ஒரு வியாதிக்கு ஒரு சிகித்ஸை செய்தால் அது உத்தமாக இருக்குமானால் க்ரமேண குணமன்றோ காணப்படவேணும்.  குணம் காணப்படாததோடு துர்க்குணமும் காணப்பட்டால் உடனே அந்த சிகித்ஸாக்ரமத்தை விட்டுத் தொலைக்கவன்றோ அடுப்பது:  இங்கு இவளுடைய நிலைமை கண்டீர்களா! குவளைமலர்போன்று அழகியவாய கண்கள் விகாரப்பட்டனவே!:  கொவ்வைக்கனிபோன்று  பழுத்திருந்த அதரமும் நிறவேறு பாடுற்றதே! இங்ஙனே பயத்தலைக் கண்டுவைத்தும் இப்பரிஹாரமுறையைத் தவிர்க்கின்றி

வீர்களே பாவிகாள்! என்கிறாள் இரண்டாமடியால்.

இவ்விடத்தில் ஈட்டு ஸ்ரீஸூக்திகள் காண்மின்:-“அவனுடைய வாய்புகு சோறன்றோபுறியுண்கிறது:  ‘தொண்டையஞ் செங்கனிவாய் நுகர்ந்தானை’ என்றும் ‘மணநோக்கமுண்டான்’ என்றும் இவையிறே அவனுக்கு ஊண்”. இத்யாதி.

மாறன்பணித்த தமிழ்மறைக்கு ஆறங்கங்கூற அவதரித்த திருமங்கையாழ்வார் இரண்டிடத்திலே இரண்டு பாசுரங்களருளிச் செய்தார்:  “வண்டார் பூமாமலர்மங்கை மண நோக்க முண்டானே!” என்றார் ஓரிடத்தில்.  பிராட்டியானுடைய கடாக்ஷ் வீக்ஷ்ணத்தையே

எம்பெருமான் உணவாகக் கொண்டிருக்கிறானென்பது இதனால் தெரிவிக்கப்பட்டது. கள்வின் கொல்லில் “என்மகள் தன் தொண்டையஞ் செங்கனிவாய் நுகர்ந்தானை” என்றார் இதனால் அதர ரஸத்தையே எம்பெருமான் உணவாகக் கொண்டவன் என்பது  தெரிவிக்கப்பட்டது.

“பின்னைகொல் நிலமாமகள்கொல் திருமகள்கொல் பிறந்திட்டால்” என்கிறபடியே இப்பராங்குச நாயகியும் பிராட்டியேயன்றோ.  இவளுடைய குவளைத்தடங்கண்ணும் கோவைச்செவ்வாயும் அழிந்தால் எம்பெருமானுடைய உணவு முட்டுப்பட்டதே! என்று அன்பர்கள் துடிக்கவேண்டுமத்தனையே.

பயந்தனள்-வைவர்ணியடையும்படியானாள் என்றவாறு.  பயப்பு-நிறவேறுபாடு.

நாங்கள் செய்வது நேரான பரிஹாரமன்றாகில், நீ சொல்லிக்கண் என்று தாய்மார் தோழியைக்கேட்க, பின்னடிகளில் நேரான பரிடஹாரமுறை பகரப்படுகின்றது.

தன்னைக் கொல்லுமாறு கம்ஸனால் ஏவி நிறுத்தப்பட்ட குவலயாபீட யானையை முடித்த கண்ணபிரானுடைய திருநாமங்களைச் சொல்லுங்கோள்; அவ்வளவே போராது; ஸ்ரீ வைஷ்ணவவர்களின் ஸ்ரீ பாதரேணுவையுங் கொண்டு ரக்ஷையிடுங்கோள்; உடனே நோய் தீருமாறு காணுங்கோள் என்றாளாயிற்று.

கடாக்களிறு-மதயானை; கவளமென்று யானை உணவுக்குப்பெயர்.  …..மென்ற வடசொல்விகாரம். தீனிகளையிட்டு மதமூட்டப்பட்ட யானை என்றபடி.  கண்ணன் திருநாமத்தைச் சொன்னால் குவளைத் தடங்கண்களின் பயப்புத்தீரும்; தவளப்பொடிக்கொண்டு இட்டால் கோவைச்செவ்வாயின் பயப்புத்தீரும் என்றதாகக் கொள்க.

….என்ற வடசொல் தவளமெனத்திரிந்தது. பரிசுத்தமான என்றபடி. இங்கு இன்னபொடியென்று சொல்லிற்றில்லையாகிலும் ஸ்ரீவைஷ்ணவர்களின் திருவடித்துர்ள் என்னும் பொருளே ஆழ்வார்க்கு விவக்ஷ்தமென்னுமிடம் மேற்பாட்டில் “மாயன்தமரடிநீறு கொண்டு” என்றதனாலும் அறுதியிடத்தக்கது.  திருமங்கையாழ்வாரும் சிறிய திருமடலில் “சீரார் செம்புழுதிக்காப்பிட்டு” என்றருளிச்செய்தார்.  புழுதியென்பது தெருப்புழுதி; செழும்புழுதியென்பது எம்பெருமானுடைய திருவடிப்பொடி; சீரார்செழும்புழுதியென்பது பாகவதர்களின்  திருவடிப்பொடி.

இனி, “தெய்வத்தண்ணந்துழாய்த்தாராயினும் தழையாயினும் தண் கொம்பதாயினம் கீழ்வேராயினும் நின்றமண்ணாயினுங்கொண்டு வீசுமினே” என்கிற திருவிருத்தப் பாசுரத்தின் படி திருத்துழாய் மண்பொடியைக் கூறினதாகவுங் கொள்வர் சிலர்.

 

English Translation

This frenzied dancing in no way to get her back, alas!  Her large lotus eyes and coral lips whiten in fear.  Chart the names of the Lord who killed the rutted elephant, and smear white mud on her forehead; her fever will subside

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top