மன்னனை மாலிருஞ் சோலை மணாளனை,
கொன்னவிலும் ஆழிப் படையானை, – கோட்டியூர் (2778)
அன்ன வுருவில் அரியை, திருமெய்யத்து
இன்னமுத வெள்ளத்தை இந்தளூர் அந்தணனை,
மன்னும் மதிட்கச்சி வேளுக்கை யாளரியை,
மன்னிய பாடகத்தெம் மைந்தனை, – வெஃகாவில், (2779)
உன்னிய யோகத் துறக்கத்தை………………..
பதவுரை
|
மன்ன்னை |
– |
ஸர்வேச்வரனாய் |
|
மாலிருஞ்சோலை |
– |
திருமாலிருஞ் சோலையில் எழுந்தருளியிருக்கிற மணவாளப் பிள்ளையாய் |
|
கொல் நவிலும் ஆழிபடையானை |
– |
பகைவரைக் கொல்ல வல்ல திருவாழியை ஆயுதமாகவுடையனாய் |
|
கோட்டியூர் |
– |
திருக்கோடியூரில் |
|
அன்ன உருவின் அரியை |
– |
அப்படிப்பட்ட (விலக்ஷணமான) திருமேனியையுடைய நரஸிம்ஹ மூர்த்தியாய் |
|
திரு மெய்யத்து |
– |
திருமெய்யமலையில் |
|
இன் அமுதம் வெள்ளத்தை |
– |
இனிதான அம்ருத ப்ரவாஹம் போல் பரம போக்யனாய் |
|
இந்தளூர் |
– |
திருவிந்தளூரில் |
|
அந்தணனை |
– |
பரமகாருணிகனாய் |
|
மன்னு மதிள் |
– |
பொருந்திய மதிகள்களையுடைய |
|
கச்சி |
– |
காஞ்சிநகரத்தில் |
|
வேளுக்கை ஆனரியை |
– |
வேளுக்கை யென்கிற தலத்திலுள்ள ஆளழகிய சிங்கராய் |
|
பாடகத்து மன்னிய எம்மைந்தனை |
– |
திருப்பாடகத்தில் நித்யவாஸம் பண்ணுகிற எமது யுவரவாய், |
|
வெஃகாவில் |
– |
திருவெஃகாவில் |
|
உன்னியயோகத்து உறக்கத்தை |
– |
ஜாகரூகனாகவே யோகநித்ரை செய்பவனாய் |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- மாலிருஞ்சோலை “ஆயிரம்பூம் பொழிலுமுடை மாலிருஞ் சோலையிதே“ என்றபடி மிகப்பெரிய பல சோலைகளையுடைய மலையாதலால் மாலிருஞ்சோலை யென்று திருநாமம் உயர்ந்து பரந்தசோலைகளையுடைய மலை. வந்திரி எனப்படும். கோட்டியூர் – ஹிரண்யாஸுரன் மூவுலகத்தையும் ஆட்சி செய்த காலத்தில் தேவர்கள் அய்வஸுரனை யொழிப்பதற்கு உபாயத்தை ஆலோசிப்பதற்கு ஏற்றதாய் அஸுரர்களின் உபத்ரவமில்லாதான இடத்தைத் தேடுகையில் கதம்ப முனிவரது சாபத்தால் ‘துஷ்டர் ஒருவரும் வரக்கூடாது‘ என்று ஏற்பட்டிருந்த இந்த க்ஷேத்ரம் அவர்கள் கூட்டமாக இருந்து ஆலோசிப்பதற்கு ஏற்ற இடமாயிருந்த காரணம் பற்றி இத்தலத்திற்கு கோஷ்டீபுரம் என்று வடமொழியில் திருநாமம், அதுவே கோட்டியூரெனத் தமிழில் வழங்குகிறது. அன்னவுருவினரியை – “வண்கையினார்கள் வாழ்திருக்கோட்டியூர் நாதனை நரசிங்களை“ என்ற பெரியாழ்வார் திருமொழிப் பாசுரங்காண்க. தெக்காழ்வாரைக் குறித்தபடி.
திரு மய்யம் – ஸத்ய தேவதைகள் திருமாலை நோக்கித் தவஞ்செய்த தலமானது பற்றி இத்திருமலை ஸத்யகிரி யென்றும் எம்பெருமான் ஸத்யகிரிநாரென்றும் பெயர் பெறுவர். ஸத்யகிரியென்ற அச்சொல்லை திருமெய்யமலை யென்றும், அத்திருப்பதி திருமெய்ய மென்றும் வழங்கப்பெறும்
இந்தளூர் – சந்திரன் தனது சாபம் நீங்கப்பெற்ற தலமாதலால் திருவிந்தளூரென்று திருநாமமாயிற்றென்பர். இந்துபுர் எனப்படும். ஸுகந்தவநம் என்றொரு திருநாமமும் வழங்குகின்றது. அந்தணனை – “அந்தணரென்போர் அறவோர் மற்றெவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுகலான்“ (திருக்குறள்) என்றபடி அழகிய தன்மையையுடையவனென்று பொருளாய், பரமகாருணிகனென்றதாம். “அறவனை ஆழிப்படை அந்தண்னை“ என்றார் நம்மாழ்வாரும்.
வேளுக்கை – காஞ்சீபுரத்திலுள்ள திருப்பதிகளில் ஒன்று “வேள்இருக்கை“ என்பது மருவிற்றுப்போலும் வேள் – ஆசை, எம்பெருமான் தனது ஆசையினாலே வந்திருக்கும் தலம் என்றவாறாம் இத்திவ்ய தேசத்தைப்பற்றி ஸ்ரீவேதாந்த தேசிகன் அருளிச்செய்த காமஸிகாஷ்டகம் என்ற ஸ்தோத்ரத்தில் “காமாத் அதிவஸந் ஜீயாத் கச்சித் அற்புத கேஸா“ என்றமையால் வேளுக்கை யென்பதற்கு இங்ஙனே பொருளாமென்று தோன்றுகிறது. காமாஸிகா என்பதன் அர்த்தமும் இதுவேயாம். காமேந ஆஸிகா – தன் ஆசையினாலே இருக்குமிடம். ஆளரியை – ஆளழகிய சிங்கர்ஸந்திதி என்று வ்யவஹரிக்கப்படும்.
பாடகம் – பெரியகாஞ்சிபுரத்திலுள்ள பாண்டவ தூதர் ஸந்நிதி. “பாடுஅகம்“ என்ற பிரிக்க பெருமைதோற்ற எழுந்தருளியிருக்கும் தலம் என்கை. கண்ணன் பாண்டவதூதனாய்த் துரியோதனைனிடஞ் சென்றபொழுது துர்யோதன்ன் ரஹஸ்யமாகத் தனது ஸபாமண்டபத்தில் மிகப்பெரிய நீலவறை யொன்றைத் தோண்டுவித்து அதில் அநேக மல்லர்களை ஆயுதபாணிகளாய் உள்ளே யிருக்க வைத்து அப்படுகுழியைப் பிறர் அறியவொண்ணாதபடி மூங்கிற்பிளப்புக்களால் மேலேமூடி அதன் மேற் சிறந்த ரத்நாஸநமொன்றை அமைத்து அவ்வாஸனத்தில் கண்ணனை வீற்றிருக்கச் சொல்ல அங்ஙனமே ஸ்ரீக்ருஷ்ணன் அதன்மேல் ஏறின மாத்திரத்திலே மூங்கிற் பிளப்புகள் முறிபட்டு ஆசனம் உள்ளிறங்கி பிலவறையிற் செல்லுமளவில், அப்பெருமான் மிகப்பெரிதாக விச்வரூபமெடுத்துப் பல கைகளையுங் கால்களையுங் கொண்டு எதிர்க்கவே அப்பிலவறையிலிருந்த மல்லர்கள் அழிந்தனர். அப்போது கொண்ட விச்வரூபத் திருக்கோலத்திற்கு ஸ்மாரகமாகப் பெரிய திருமேனியோடே ஸேவை ஸாதிக்குமிடம் பாடகம். பாடு-பெருமை. (“அரவுநின் கொடியோன் அவையுள் ஆசனத்தை அஞ்சிடாதேயிட அதற்குப் பெரியமேனி அண்டமூடுருவப் பெருந்திசை அடங்கிட நிமிர்ந்தேன்“ என்ற பெரிய திருமொழிப் பாசுரத்தில் அநுஸந்திக்கப்பட்ட திருமேனிவளர்த்தியோடே ஸேவை ஸாதிக்குமாறு காண்க.
வெஃகா – கச்சியில் ஸ்ரீ யதோத்தகாரி ஸந்நிதி. இவ்வெம்பெருமான் பிரமன் செய்த வேள்வியை அழிக்க வந்த வேகவதி நதியைத் தடுக்கும்பொருட்டு அதற்கு அணையாகக் குறுக்கில் பள்ளிக்கொண்டருளினவனாதலால், அப்பிரானுக்கு, வடமொழியில் “வேகாஸேது“ என்று பெயர். அது தமிழில் “வேகவணை“ என்று மொழிபெயர்ந்து, அது பின் (நாகவணை யென்பது நாகணையென விகாரப்படுதல் போல) வேகணை என விகாரப்பட்டு, அது பின்னர் வெஃகணை“ எனத்திரிந்து, தானியாகுபெராய்த் தலத்தைக் குறித்து, அதுபின்பு வெஃகா என மருவி வழங்கிற்றென நுண்ணிதின் உணர்க.
