(2763)-(2764)

……….    …………    …………..    ………..  இதுவிளைத்த

 

மன்னன் நறுந்துழாய் வாழ்மார்வன் – மாமதிகோள்

முன்னம் விடுத்த முகில்வண்ணன் – காயாவின்       (2763)

 

சின்ன நறும்பூந் திகழ்வண்ணன் – வண்ணம்போல்

அன்ன கடலை மலையிட் டணைகட்டி,

மன்னன் இராவணனை மாமண்டு வெஞ்சமத்து,

பொன்முடிகள் பத்தும் புரளச் சரந்துரந்து

தென்னுலகம் ஏற்றுவித்த சேவகனை,                (2764)

 

பதவுரை

இது விளைத்த மன்ன்ன்

(தென்றல் முதலானவை பாதகமாம்படி) இப்படிப்பட்ட நிலைமையை உண்டு பண்ணின மஹாநுபா பாவனாய்,

நறு துழாய் வாழ் மார்பன்

மணம்மிக்க திருத்துழாய் மாலை விளங்குகின்ற திருமார்பை யுடையனாய்,

முன்னம் மாமதி கோள் விடுத்த முகில் வண்ணன்

முன்னொருகால் சந்திரனுடைய துன்பத்தைப் போக்கின காளமேக வண்ணனாய்,

காயாவின் சின்ன நறு பூ திகழ் வண்ணன்

“காயா” என்னும் செடியிலுண்டான சிறிய மணம் மிக்க பூப்போல் விளங்குகின்ற நிறத்தை யுடையனாய்,

வண்ணம் போல் அன்ன கடலை

தன்னுடைய வர்ணம் போன்ற வர்ணத்தையுடைய கடலிலே

மலைஇட்டு

மலைகளைக் கொண்டெறிந்து

அணை கட்டி

ஸேதுவைக்கட்டி (இலங்கைக்கெழுந்தருளி)

மா மண்டு வெம் சமத்து

சதுரங்கபலம் நிறைந்த கொடிய போர்க்களத்தில்

மன்னன் இராவணனை

ராக்ஷஸ ராஜனான ராவணனுடைய

பொன் முடிவுகள் பத்தும் புரள

அழகிய பத்துத்தலைகளும் (பூமியில் விழுந்து) புரளும்படியாக

சரம் துரந்து

அம்புகளைப் பிரயோகித்து

தென் உலகம் ஏற்றவித்த சேவகனை

(அவ்விராவணனை) யமலோகமடைவித்த மஹா சூரகனாய்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- ஆகக் கீழ்வரையில், தானநுபவிக்கும் கஷ்டங்களைச் சொல்லி முடித்தாள், இக்கஷ்டங்களை விளைவித்த மஹாநுபாவன் இன்னானென்பதை நான் அறியாமையில்லை, நன்கு அறிவேன், அடிபணிந்தாரை ரக்ஷிப்பதற்கென்றே மார்பில் தனிமாலையிட்டுக் கொண்டிருப்பதாகச் சொல்லி உலகங்களை வஞசிப்பவனாம் அவன், “சந்திரனுக்கு நேர்ந்த துன்பத்தைத் தொலைத்தேன், அப்படி உங்களுடைய துன்பத்தையும் தொலைத்தொழிப்பேன் வாருங்கள்“ என்று மயக்கி அழைப்பவன அவன். “காளமேகம் போலும் காபாமலர்போலும் என் வடிவு விளங்குகின்ற அழகைக்கண்டு களியுங்கள்“ என்றுமெனி நிறத்தைக்காட்டி வலைப்படுத்திக் கொள்பவன் அவன், ஒரு ஸீகாபிபாட்டிக்காகவும் எப்படி யெப்படியோ உருமாறிப் படர்படுகள் பட்டுஅதிகமாநுஷமான காரியங்கள் செய்தவனாக்கும் நான், என்னை யடுப்பார்க்கு ஒரு குறையுமுறாது என்று சொல்லி அகப்படுத்திக்கொள்பவன் அவன், பல திருப்பதிகளிலே தனது பெருமையைக் காட்டிக்கொண்டு மேனாணித்திருப்பவன் அவன், அவன் படிகளெல்லாம் நான்கறிவேன் நான், அவனுள்ள திருப்பதிகள்தொறும் நுழைந்து புறப்பட்டு என் மனவருத்தங்களை இனி நான் சொல்லிக்கொள்ளப் போகிறேன், ஆதரித்து உஜ்ஜீவப்பித்தானாகில் பிழைத்துப் போகிறான், இல்லையாகில் என் வாய்க்கு இரையாகி அவன் படப்போகிற பாடுகளைப் பாருங்கள் – என்கிறாள் மேல்.

முன்னம் மாமதிகோள்கிவிடுத்த – சந்திரனுக்கு நேர்ந்த க்ஷயரோகத்தைப் போக்கியருளினவன் இன்று எனக்கு க்ஷணத்தை விளைக்கலானது என்னோ என்று இரங்குகின்றாளாகவுமாம். “இப்போது கீடீர் அவன் ஆபந்நரானாரை நோக்கத் தவிர்ந்தது“ என்பர் அழகிய மணவாளப் பெருமாள் நாயனாரும், “மதியுகுத்த இன்னிலாவின் கதிரும் என்றனக்கே வெய்தாகும்“ என்று கீழே அருளிச்செய்தபடி என்னை எரிக்கின்ற சந்திரனுக்கு நேர்ந்த ஆபத்தைப்போக்கி என்னை நன்றாகத் தப்பிக்குமாறு அந்த சந்திரனுக்கு நியமித்த மஹாநுபாவன் என்றதாகவுமாம்.

மா மண்டு வெஞ்சமத்து – மா என்று யானையையும் குதிரையையும் சொல்லும், ரதம், கஜம், துரகம், பதாதி எனச் சேனையுறுப்புக்ள நான்காதலால் மற்ற இரண்டு உறுப்புகட்கு உபலக்ஷணமென்க மண்டுல் – நெருங்கியிருத்தல் சேவகனை – சேவகமாவது வீரம், அதனையுடையவன் சேவன். “செருவிலே அரக்கர்கோனைச் பெற்ற நம் சேவகனார்“ என்றார் தொண்டரடிப்பொடியாழ்வாரும்.

“இது விளைத்த மன்ன்ன்“ என்று தொடங்கி, “தென்னறையூர்“ மன்னு மணிமாடக்கோயில் மணாளனைக் கன்னவில் தோள்காளையை“ என்கிற வரையில் எம்பெருமானுடைய விபவாவதார வைபவங்கள் அர்ச்சாவதார வைபவ“கள் முதலியன விரிவாகக் கூறப்படுகின்றன. மார்பன். முகில்வண்ணன், சேவகனை, வீரனை, கூத்தனை என்கிற இவ்விசேஷணங்கள் எல்லாம் மேலே கன்னவில் தோள் காளையை என்ற விடத்தில் அந்வயித்து முடியும்.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top