(2761)-(2762)

……….   …………   ……………   மல்விடையின்

 

துன்னு பிடரெருத்துத் தூக்குண்டு, வன்தொடரால்

கன்னியர் கண்மிளிரக் கட்டுண்டு, மாலைவாய்             (2761)

 

தன்னுடைய நாவொழியா தாடும் தனிமணியின்,

இன்னிசை ஓசையும் வந்தென் செவிதனக்கே,

கொன்னவிலு மெஃகில் கொடிதாய் நொடிதாகும்,

என்னிதனைக் காக்குமா சொல்லீர்?,……                     (2762)

 

பதவுரை

மால் விடையின்

(பசுவின்மேல்) வியாமோஹங்கொண்ட வ்ருஷபங்களினுடைய

துன்னு பிடர் எருத்து

பெருத்த பிடரியிலுள்ள முசுப்பிலே

தூக்குண்டு

தூக்கப்பட்டு

கன்னியர் கண் மிளிர

சிறுப்பெண்களின் கண் களிக்கும்படி

வன் தொடரால் கட்டுண்டு

வலிதான கயிற்றாலே கட்டப்பட்டு

மாலை வாய்

ஸாயம் ஸந்தியா காலத்தில்

இன் இசை ஓசையும் வந்து

இனிதான இசையின் ஒலியும் வந்து

தன்னுடைய நா ஒழியாது ஆடும் தனி மணியின்

தனது நாக்கு ஓயாமல் ஆடிக்கொண்டிருக்கப் பறெற சிறந்த மணியினுடைய

என் செவி தனக்கே

என்னுடைய காதுக்கு மாத்திரம்

கொல் நவிலும் எஃகில் கொடிது ஆய் நெடிது ஆகும்

கொலை செய்ய வல்ல வேலைக் காட்டிலும் கடூரமாகி நெடுகா நின்றது

இதனை காக்கும் ஆ என்

இந்த ஆபத்திற்குத் தப்பிப் பிழைக்கும் வழி என்ன?

சொல்லீர்

(ஏதாவது உபாயம் உண்டாகில்) சொல்லுங்கள்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- “மன்னு மருந்தறிவீரில்லையே?” என்றதும் “நல்லமருந்துண்டு“ என்று விடையளிக்க வல்லாருடைய வார்த்தை காதில் விழவேணுமென்று பாரித்திருந்த பரகால நாயகியின் காதிலே ஊராமாடுகளின் மணியோசை வந்து விழுந்தது, அதற்கு வருந்திப் பேசுகின்றாள். செவிக்கு இனிதாகக் கேட்கத்தக்க விடைமணிக்குரலும் என் காதுக்குக் கடூரமாயிராநின்றது, இந்த்த் துன்பமெல்லாம் நீங்கி நான் வாழும் வகை ஏதேனுமுண்டோ? சொல்லீர் என்கிறாள்.

மாட்டின் கழுத்தில் தொங்கும் மணியை மூன்றடிகளாலே கூறுகின்றாள். நாகின்மேலே பித்தங்கொண்டு காமித்து வருகின்ற காளையின் புறங்கழுத்திலுள்ள முசுப்பின்மேலே மநோஹரமாகக் கட்டப்பட்டு ஸாயங்காலத்தில் இடைவிடாது சப்தித்துக் கொண்டே யிருக்கிற மணியின் ஓசையும் வந்து செவிப்பட்டு, செவியிலே சூலத்தைப் பாய்ச்சினாற்போலே ஹிம்ஸை பண்ணா நின்றது. அவ்வோசை ஓய்ந்தபாடில்லை, நெடுகிச் செல்கின்றதே! என்கிறாள. கடலோசை குழலோசை முதலியனபோல விடைமணி யோசையும் விரஹிகளுக்கு உத்தீபகமாதல் அறிக.

எஃகு – ஆயுதப் பொதுப்பெயர், சூலத்துக்குச் சிறப்புப்பெயருமாம். ஈட்டியையுஞ சொல்லும்.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top