முன்னம்நான் சொன்ன அறத்தின் வழிமுயன்ற,
அன்னவர்த்தாம் காண்டீர்க்க ளாயிரக்கண் வானவர்கோன்,
பொன்னகரம் புக்கமரர் போற்றிசைப்ப, – பொங்கொளிசேர் (2721)
கொல்னவிலும் கோளரிமாத் தாஞ்சுமந்த கோலம்சேர்,
மன்னிய சிங்கா சனத்தின்மேல், – வாணொடுங்கண் (2722)
கன்னியரா லிட்ட கவரிப் பொதியவிழ்ந்து ,ஆங்
கின்னளம்பூந் தென்றல் இயங்க, – மருங்கிருந்த (2723)
மின்னனைய நுண்மருங்குல் மெல்லியலார் வெண்முறுவல்,
முன்னம் முகிழ்த்த முகிழ்நிலா வந்தரும்ப,
அன்னவர்த்தம் மானோக்க முண்டாங் கணிமலர்சேர்,
பொன்னியல் கற்பகத்தின் காடுடுத்த மாடெல்லாம்,
மன்னிய மந்தாரம் பூத்த மதுத்திவலை,
இன்னிசை வண்டமரும் சோலைவாய் மாலைசேர்,
மன்னிய மாமயில்போல் கூந்தல், – மழைத்தடங்கண் (2724)
மின்னி டையா ரோடும் விளையாடி-வேண்டிடத்து,
மன்னும் மணித்தலத்து மாணிக்க மஞ்சரியின்,
மின்னின் ஒளிசேர் பளிங்கு விளிம்படுத்த,
மன்னும் பவளக்கால் செம்பொஞ்செய் மண்டபத்துள்,
அன்ன நடைய அரம்பய ர்த்தம் வகைவளர்த்த
இன்னிசையாழ் பாடல்கேட் டின்புற்று, – இருவிசும்பில் (2725)
மன்னும் மழைதழும் வாணிலா நீண்மதிதோய்,
மின்னி னொளிசேர் விசும்பூரும் மாளிகைமேல்,
மன்னும் மளிவிளக்கை மாட்டி, – மழைக்கண்ணார் (2726)
பன்னு விசித்திரமாப் பாப்படுத்த பள்ளிமேல்,
துன்னிய சாலேகம் சூழ்கதவம் தாள்திறப்ப,
அன்னம் உழக்க நெறிந்துக்க வாள்நீலச்,
சின்ன நறுந்தாது சூடி, – ஓர் மந்தாரம் (2727)
துன்னும் நறுமலரால் தோள்கொட்டி, கற்பகத்தின்
மன்னும் மலர்வாய் மணிவண்டு பின்தொடர
இன்னிளம்பூந் தென்றல் புகுந்து,ஈங்க் கிளைமுலைமேல்
நன்னருஞ் சந்தனச் சேறுலர்த்த, – தாங்கருஞ்சீர் (2728)
மின்னி டைமேல் கைவைத் திருந்தேந் திளைமுலைமேல்,
பொன்னரும் பாரம் புலம்ப, – அகங்குழைந்தாங் (2729)
இன்ன வுருவின் இமையாத் தடங்கண்ணார்,
அன்னவர்த்தம் மானோக்கம் உண்டாங் கணிமுறுவல்,
இன்னமுதம் மாந்தி யிருப்பர், – இதுவன்றே (2730)
அன்ன அறத்தின் பயனாவது?, ஒண்பொருளும்
அன்ன திறத்ததே ஆதலால், – காமத்தின் (2731)
மன்னும் வழிமுறையே நிற்றும்நாம்……………..
பதவுரை
|
முன்னம் நான் சொன்ன அறத்தின் வழி முயன்ற அன்னவர் தாம் |
– |
(புருஷார்த்தங்களில்) முதலதாக நான் எடுத்துச் சொன்ன தருமத்தின் வழியிலே அநுஷ்டானஞ் செய்தவர்கள் |
|
ஆயிரம் கண் வானவர் கோன் பொன் நகரம் புக்கு |
– |
ஆயிரங் கண்ணுடையனான இந்திரனுடைய அழகிய லோகத்திற்சென்று சேர்ந்து |
|
அமரர் போற்றி செய்ய |
– |
தேவர்கள் வாழ்த்தப்பெற்று, |
|
பொங்கு ஒளி சேர்கொல் நவிலும் கோள் அரிமாதான் சுமந்த கோலம் சேர் மன்னிய சிங்க ஆசனத்தின் மேல் |
– |
மேன்மேலும் வளர்கின்ற ஒளியை யுடையதும், கொல்லுந் தொழிலிற் பழகின் வலிய சிங்கத்தால் சுமக்கப்பட்டதும், அழகியதும், பொருத்தமுடையதுமான சிங்காசனத்தின் மேலே (இருந்துகொண்டு) |
|
வாள் நெடு கண் கன்னி யரால் இட்ட |
– |
வாள் போற்கூரிய நீண்ட கண்களையுடைய கன்னிகைகளாலே வீசப்பட்ட கவரிபொதி அவிழ்ந்து |
|
சாமரத்திரள்கள் (தம்மேல்வந்து) மலரப்பெற்று) |
||
|
இன் இள பூ தென்றல் இயங்க |
– |
இனிதாயும் மந்தமாயும் பரிமள முடையதாயுமிருக்கிற தென்றல் வந்து வீசப்பெற்று |
|
மருங்கு இருந்த மின் அனையை நுண் மருங்குல் மெல் இயலார் |
– |
அருகே யிருக்கிற மின்போல் ஸூக்ஷமமான இடையையுடைய மாதர்கள் |
|
வெண் முறுவல் |
– |
(தங்களுடைய) வெளுத்த பற்களாலே |
|
முன்னம் முகிழ்த்த |
– |
அபிப்பிராயத்தை ஸூசிப்பிக்கின்ற |
|
முகிழ் நிலா வந்து அரும்ப |
– |
இளநிலாவந்து மேலே ப்ரஸிக்க |
|
அன்னவர் தம் |
– |
அப்படிப்பட்ட மாதர்களுடைய |
|
மான் நோக்கம் உண்டு |
– |
மானின் நோக்குப் போன்ற நோக்கை அநுபவித்து |
|
ஆங்கு |
– |
அவ்வளவிலே |
|
அணி மலர சேர் |
– |
அழகிய பூக்கள் நிறைந்துள்ள |
|
பொன் இயல் கற்பகத் தின் காடு உடுத்தமாடு எல்லாம் |
– |
பொன்மயமான கற்பகக்காடுகள் நிறைந்த ப்ரதேசங்க ளெல்லாவற்றிலும் |
|
மன்னிய மந்தாரம் பூத்த மது திவலை |
– |
நிலைபெற்றிருக்கிற பாரிஜாத வ்ருக்ஷங்களின் பூக்களிலுள்ள மகரந்த பிந்துக்களில் |
|
இன் இசை வண்டு அமரும் சோலை வாய் |
– |
இனிய இசைகளைப்பாடுகின்ற வண்டுகள் பொருந்தி யிருக்கப்பெற்ற பூஞ்சோலைகளிலே, |
|
மாலை சேர் மன்னிய மா மயில் போல் கூந்தல் |
– |
புஷ்பங்களை யணிந்தும் மயில் தோகை போன்றுமிருக்கிற கூந்தலை யுடையவர்களாயும் |
|
மழை தட கண் |
– |
குளிர்ந்து விசாலமான கண்களை யுடையவர்களாயும் |
|
மின் இடையாரோடும் |
– |
மின்போல் நுண்ணிய இடையை யுடையவ்ர்களாயு மிருக்கிற அப்ஸரஸ் ஸ்த்ரீகளோடே |
|
வேண்டிடத்து விளையாடி |
– |
யதேஷ்டமான இடங்களில் ரமித்து |
|
மன்னும் மணி தலத்து |
– |
சிறந்த ரத்னங்களழுத்தின ஸ்தலங்களிலே (கட்டப்பட்டு) |
|
மாணிக்கம்மஞ்சரியின் |
– |
மாணிக்க மயமான பூங்கொத்துக்களை யுடையதும் |
|
மின்னின் ஒளி சேர்பளிங்கு விளிம்பு அடுத்த |
– |
மின்னல்போலே பளபள வென்று விளங்குகின்ற ஸ்படிகக் கற்களாலே குறடு (கொடுங்கை) கட்டப்பெற்றதும் |
|
மன்னும் பவளக்கால் |
– |
சிறந்த பவழ ஸ்தம்பங்களை யுடையதும் |
|
செம்பொன் செய் |
– |
செம்பொன்னால் செய்யப்பட்டதுமான |
|
அன்னம் நடைய அரம்பையர் தம் கை வளர்த்த |
– |
அன்ன நடையுடைய அப்ஸரஸ்ஸுக்களின் கை வழியாக வுண்டான |
|
இன் இசை யாழ் பாடல் |
– |
இனிய இசையை யுடையவீணையின் பாட்டை |
|
கேட்டு இன்புற்று |
– |
கேட்டு ஆனந்தித்தும், |
|
இரு விசும்பில் மன்னு மழை தவழும் |
– |
பரந்த ஆகாசத்திலே பொருந்தி யிருக்கிற மேக மண்டலங்கள் வந்து படியப்பெற்றதும் |
|
வாள் நிலா நீள் மதி தோய் |
– |
அழகிய நிலவையுடைய பெரிய சந்திரன் வந்து படியப் பெற்றதும் |
|
மின்னின் ஒளி சேர் |
– |
மின்னலின் ஒளி போன்ற ஒளியை யுடையதும் |
|
விசும்பு ஊரும் |
– |
ஆகாசத்தில் ஸஞ்சரிப்பதுமான |
|
மாளிகை மேல் |
– |
விமாநத்திலே |
|
மழை கண்ணார் |
– |
குளிர்ந்த கண்களையுடையரான மாதர்கள் |
|
மன்னு மணி விளக்கை மாட்டி |
– |
என்று மணையாத மணி விளக்குகளைத் தொங்கவிட்டு |
|
விசித்திரமா பாப்படுத்த |
– |
ஆச்சரியமாக விஸ்தாரமாய்ப் பரப்பின் |
|
பன்னு பள்ளிமேல் |
– |
கொண்டாடத்தக்க சயனத்தின் மீது |
|
துன்னிய சாலேகம் சூழ் கதவம் தான் திறப்ப |
– |
நெருங்கிய சன்னல்களைச் சுற்றியுள்ள கதவுகள் திறந்துகொள்ள, |
|
இன் இள பூ தென்றல் |
– |
பரமபோக்யான மந்த மாருதமானது |
|
அன்னம் உழக்க நெரிந்து உக்க வாள் நீலம் நறு சின்னதாது சூடி |
– |
அன்னப்பறவைகள் மிதிப்பதனாலே நெரிந்து துகளாய்ப்போன அழகிய நீலோத்பலத்தின் மணம் மிக்க சிறிய தாதுகளைச் சூடிக்கொண்டும் |
|
ஓர் மந்தாரம் துன்னு நறு மலரால் தோள் கொட்டி |
– |
சிறந்த மந்தார வ்ருக்ஷத்திலே நெருங்கியுள்ளதும் மணம் மிக்கதுமான புஷ்பங்களாலே தோள்களை அலங்காரித்துக்கொண்டும் |
|
கற்பகத்தில் மன்னுமலர் வாய் மணி வண்டு பின் தொடர |
– |
கல்ப வ்ருக்ஷத்திலே பொருந்திய பூக்களிலே படிந்த அழகிய வண்டுகள் பின் தொடரப் பெற்றும் |
|
ஈங்கு புகுந்து |
– |
இவர்கள் ரமிக்கு மிடங்களிலே வந்து சேர்ந்து |
|
இள முலை மேல் நல் நறு சந்தனம் சேறு உள் புலர்ந்த |
– |
இளமுலைகள் மேல் பூசப்பட்ட நல்ல மணமுடைய சநதனச் சேற்றை நன்கு உலர்த்த |
|
தாங்க அரு சீர் மின் இடை மேல் கை வைத்து இருந்து |
– |
தரிக்க முடியாத (ஸூக்ஷ்மமான) அழகிய மின் போன்ற இடுப்பின் மீது கையை வைத்துக்கொண்டிருந்து |
|
எந்து இள முலை மேல் பொன் அரும்பு ஆரம் புலம்ப |
– |
உந்நதமான இள முலை மேலே காசுமாலைகள் ஒலிக்கும்படி நிற்க |
|
ஆங்கு |
– |
அவ்விருப்பைக் கண்டு |
|
அகம் குழைந்து |
– |
மனமுருகி |
|
இன்ன உருவின் இமையா தடங்கண்ணார் அன்னவர் தம் |
– |
இப்படிப்பட்ட விலக்ஷணமான வடிவுபடைத்த தேவ மாதர்களுடைய |
|
மான் நோக்கம் உண்டு |
– |
மானின் நோக்குப் போன்ற நோக்கை அநுபவித்து |
|
ஆங்கு |
– |
அதனோடு கூட |
|
அணி முறுவல் இன்அமுதம் மாந்தி இருப்பர் |
– |
அழகிய புன்சிரிப்பாகிற இனிய அம்ருதத்தையும் புஜித்திருப்பர்கள் |
|
அன்ன அறத்தின் பயன் ஆவது இது அன்றே |
– |
அப்படிப்பட்ட (முன்னே நான் சொன்ன) தர்ம புருஷார்த்தத்திற்குப் பலனாகப் பெறும்பேறு இதுவே யாம். |
|
ஒண் பொருளும் அன்ன திறதத்தே |
– |
சிறந்த அர்த்த புருஷார்த்தத்தின் பலனும் அப்படிக்கொதத்தேயாம் |
|
ஆதலால் |
– |
இப்படி தர்ம அர்த்தங்களாகிய இரண்டு புருஷார்த்தங்களுக்கும் காம்மே பயனாகத் தேறுவதனால் |
|
காமத்தின் |
– |
அக்காம புருஷார்த்தத்தினுடைய |
|
மன்னும் வழிமுறையே |
– |
நிலை நின்றவழியாகிய பகவத் காமமார்க்கத்திலே |
|
நாம் நிற்றும் |
– |
நாம் ஊற்றமுடையரா யிருப்போம். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- இனி, தாம் பற்றின புருஷார்த்தம் காமம் என்று சொல்லவேண்டி, மற்ற தருமம் அர்த்தம் என்ற இரண்டு புருஷார்த்தங்களால் பெறக்கூடிய பேறு இன்னது, இப்படிப்பட்டது –என்று நிரூபிக்கத் திருவுள்ளம்பற்றி, தருமத்தை அநுஷ்டிப்பவர்கள் பெறும்பேறு இன்னதென்கிறார். “ஆயிரக்கண் வானவர்கோன்“ என்று தொடங்கி “இன்னமுதம் மாந்தியிருப்பர்“ என்னுமளவும் தாம் புருஷார்த்தத்தினால் ஸவர்க்கலோகத்தல் கிடைக்கும் விஷயகோகங்களை விரிவாக்ச் சொல்லுகிறது.
“அம்மறைதான் மன்னுமறம் பொருளின்பம் வீடென்றுலகில், நன்னெறி மேம்பட்டன் நான் கன்றே“ என்று கீழே சொல்லுமிடத்துப் புருஷார்தங்களில் முதன்மையாகச் சொல்லப்பட்ட யாதொரு தர்ம்முண்டு, அதனை அடைவுபட அநுஷ்டித்த மஹான்கள் இவ்வுடலைவிட்டு இவ்வுலகையும் விட்டொழிந்த பின்பு, புண்ய பலன்களை அநுபவிப்பதற்கென்று ஏற்பட்ட இடமாகிய தேவேந்திர நகரத்திற்கு (ஸ்வர்க்க லோகத்திற்கு)ச் செல்லுங்கள், சென்றவாறே அங்குள்ள அமரர்கள் “ஜய விஜயீபவ“ இத்யாதி சப்த கோஷங்களாலே தோத்திரஞ் செய்து, விலையுயர்ந்து அழகுமிக்க சிங்காசனத்தின் மீது வீற்றிருக்கச்செய்வர்கள், கண்ணழகிற் சிறந்த கன்னிகைகள் அருகேவந்து சாமரம் வீசுவார்கள், இனிதான தென்றற் காற்றும் தன்னடையே வந்து மேலேபடும், மற்றுஞ் சிலமாதர்கள் அருகே வந்து நின்று தங்களுடைய உட்கருத்தை வெளிக்காட்டுகின்ற மந்தஸ்மிதத்தை (புன்சிரிப்பை)ச் செய்வர்கள், அவர்களது நோக்கிலே ஈடுபட்டிருப்பவர்கள் இவர்கள்.
(ஆங்கணி மலர் சேர் தொடங்கி விளையாடி வேண்டிடத்து என்னுமளவும் ஒரு வாக்கியார்த்தமாகக் கொள்க) சிங்காசனத்தின்மீது வீற்றிருந்து போகங்கள் பெறும்படியைச் சொல்லிற்று கீழ்வாக்கியத்தில், கற்பகவ்ருக்ஷங்கள் நிறைந்த அழகிய பூஞ்சோலைகளிலிருந்து கொண்டு போகங்கள் அநுபவிக்கிறபடியைச் சொல்லுகிறது இவ்வாக்கியம். சிங்காசனத்திலிருக்கும்போது சில மாதர்கள் வந்து ஸாபிப்ராயமாகப் புன்சிரிப்புச் சிரித்தவாறே, ‘பூக்கொய்கையிலே நோக்காகச் சிரிக்கிறார்களிவர்கள் என்று உணர்ந்து உடனே எழுந்துபோய்ச் சோலைகளிலே விளையாடித்திரிவர்களாம்.
அந்த நந்தவனங்கள் எப்படியிருக்கின்றவென்றால், எங்கே பார்த்தாலும் பொன்மயமான கல்ப வ்ருக்ஷங்கள் நிறைந்தும், அந்தக் கல்பவ்ருக்ஷங்கள் மலர்களில் மதுவைப்பருகுவதற்காக வண்டுகள் வந்து படிந்து இனிதாக ரீங்காரம் பண்ணப்பெற்றும் இருக்கின்றனவாம். அப்படிப்பட்ட சோலைகளிலே, கூந்தலழகும் கண்ணழகும் இடையழகும் அமைந்த மங்கையர்களுடனே கூடி யதேச்சமாக விளையாடுவர்களாம்.
(மன்னு மணித்தலத்து என்று தொடங்கி இன்னிசையாழ் பாடல் கேட்டின்புற்று என்னுமளவும் ஒரு வாக்கியர்த்தமாகக் கொள்க) நந்தவனங்களில் விளையாடிக் களைத்துப்போய் ஒரு திவ்ய மண்டபத்திற் சென்று வீற்றிருந்து அங்கு அப்ஸாஸ் ஸ்த்ரீகள் செவிக்கினியாக வீணாகானம் பண்ண அதனைக் கேட்டுக் களைதீர்ந்து ஆநந்திக்கும்படி சொல்லுகிறது. அந்த மண்டபங்கள் எப்படியிருக்கின்றன. வென்றால், கீழ்த்தரையெல்லாம் ரத்னங்களழுத்தப்பட்டு அந்த ரத்நமய ஸ்தலத்திலே கட்டப்பட்டும், மாணிக்கமயமான பூங்கொத்துகளால் அலங்கரிக்கப்பட்டும், மின்னல்போலே பளபளவென்று விளங்குகின்ற ஸ்படிகக் கற்களாலே கொடுங்கைகள் கட்டப்பெற்றும், பவழ ஸ்தம்பங்கள் நாட்டப்பெற்றும் செம்பொன்னாற் செய்யப்பட்டு மிருக்கின்றனவாம், அப்படிப்பட்ட மண்டபத்துள் தேவமார்கள் வீணை வாசிக்க, மதுரமான அப்பாடலைக் கேட்டு இன்புறுகின்றனராம்.
(இரு விசும்பில் மன்னு மழை தவழும் என்று தொடங்கி அணிமுறுவ லின்னமுதம் மாந்திருயிருப்பர் என்னுமளவும் ஒரு வாக்கியார்த்தமாகக் கொள்க) வீணாகானங் கேட்டுக் களைதீர்ந்து களித்த பின்பு அத்தேவ மாதர் விரித்த படுக்கைகளிலே கிடந்து போகங்களின் எல்லையான பரம போகங்களை அநுபவித்துத் தீருகிறபடி சொல்லுகிறது. ஸ்வர்க்கலோகத்து அநுபவங்களின் சரமாவதியைச் சொல்லு கிறதாகையாலே இந்த வாக்கியத்தைச் சிறிது விரிவாகச் சொல்லி முடிக்கிறார். இத தார்மிகர்கட்காகப் படுக்கை விரிக்கும் மாளிகை மேக மண்டலங்கள் வந்து படியப்பெற்றிருத்தலால் இருட்சியும் குளிர்ச்சியும் பொருந்தியும், சந்திரன் வந்து உறைந்தருப்பதனால் ப்ரகாசம் பொருந்தியுமிருக்கும். ஸம்போக ருசியுடையார்க்கு இருளும் வெளிச்சமும் இரண்டும் வேண்டியிருக்குமே. அப்படிக்குப் பாங்கான மாளிகையின் மேல் ரத்தன தீபங்களைத் தொங்கவிட்டு அப்ஸரஸ்ஸுக்கள் ஆச்சரியமான படுக்கையை விரிப்பார்கள். உலகில் இப்படியும் ஒரு படுக்கையுண்டோ? என்று கொண்டாடிக் கொண்டாடி நாத்தழும் பேறும்படி யிருக்குமாம் அப்படுக்கை. அதன்மேல் சயனிக்கும்போது சன்னல்கள் கதவு திறந்துகொள்ள அவ்வழியாலே இனிய தென்றற்காற்று வந்து உள்ளே வீசும்.
காற்றுக்கு உருவமில்லையாயினும் ஆழ்வார் தமது சமத்காரந் தோற்ற அதனை ஒரு மஹா புருஷன் போலத் தோற்றுவித்து வருணிக்கிறபடி பாருங்கள், – மஹா புருஷன் வரும்போது நல்ல பூக்களைத் தலையிற் சூடிக்கொண்டும் நல்ல மாலையைத் தோளிலணிந்து கொண்டு பின்னே சிவ சேவகர்கள் தொடரவும் வருவனே, அப்படியே வருகிறதாம் அந்தத் தென்றலும், அதாவது – நீலோற்பல மலர்களின் தாதுக்களைச் சூடிக்கொண்டும் பாரிஜாத மலர் மாலையைத் தோளிலணிந்து கொண்டும் அம்மலரிலுள்ள மதுவில் நசையாலே பின் தொடர்ந்து வருகின்ற வண்டுகளாலே பின் செல்லப்பெற்றும் வருகின்ற தென்கிறார். தென்றலானது நல்ல பொய்கைகளில் வியாபித்து அங்குள்ள மலர்களின் மணத்தை என்று வீசிக்கொண்டே வருகின்ற தென்றவாறு.
அப்படிப்பட்ட தென்றவானது முன் சொன்ன கதவு திறந்த சன்னல் வழியே உள்ளே புகுந்து மாதர்களின் முலைமேற் பூசியுள்ள சந்தனச்சேற்றை யுலர்த்துகின்றதாம். அத்தகைய தென்றற்காற்று இனிதாக் வீசப்படுக்கையிற் படுகிறப்படி சொல்லிற்றாகிறது. இது உடலுக்கு நேரும் ஸுகம். இனி, செவிப்புலனுக்கு சேரும் ஸுகஞ் சொல்லுகிறது –சில தேவமாதர் உல்லாஸமாக இடுப்பின்மீது கையை வைத்துக்கொண்டு முன்னே வந்து நிற்க அவர்களது முலைகளின்மேல் அணியப்பட்டிருக்கின்ற காசுமாலை முதலிய ஆபரணங்கள் ஒன்றோடொன்று உறைந்து கலகலவென்று சப்திக்க, அந்த சப்தத்தாலே செவிக்கு ஆநந்தம் பெறுகிறபடி. உண்ணுஞ்சோறும் பருகும் நீரும் அவர்கட்கு வேறில்லை, அத்தேவமாதர்களின் கடாக்ஷ வீக்ஷணத்தை ஓவாத ஊணாக உண்பர். அவர்களது புன்முறுவலோடு கூடின அதராம்ருதத்தைப் பானம் பண்ணுவர். ஆக இவ்வளவுஞ் சொல்லப்பட்ட இன்ப நுகர்ச்சியே தரும புருஷார்த்தத்திற்குப் பயனாகப் பெறுவதாம். இரண்டாவதான அர்த்தம் (பொருள்) என்னும் புருஷார்த்தத்தின் பயனும் இதுவே யொழிய வேறில்லை, பொருள் படைத்தவர்கள் தருமம் செய்வர்கள் ஆதலால் அறத்தின் பயனே பொருட்கும் பயனாக முடியக்கடவதாம்.
(ஆதலால் காமத்தின் மன்னும் வழிமுறையே நிற்றும் நாம்) நான்கு புருஷார்த்தங்களில் மோக்ஷமென்பது முதலிலேயே தள்ளுண்டது, தருமமும் அர்த்தமும் காமஸித்தியையே பயனாகக் கொண்டன, ஆகவே, காமபுருஷார்த்த மொன்றே முக்கியம், மற்ற அறம் பொருள்கள் இதற்குச் சேஷபூதம் – என்று இதுவரையில் நிரூபிக்கப்பட்டதாதலால் நாம் காமபுருஷார்த்தத்தையே கைக்கொள்வோமானோம், அது தன்னிலும் ஹேயமான விஷயாந்தர காமமன்றிக்கே வேதாந்த விஹிதமாய் உத்தேச்யமாய் சாச்வதபலமான பகவத்விஷய காமத்தைக் கைக்கொண்டோம் என்று ஆழ்வார் தமது உறுதியைக் கூறித்தலைக்கட்டினாராயிற்று.
“சேமநல்வீடும் பொருளுந் தரும்முஞ் சீரிய மற்காம்மும் என்றிவை நான்கென்பர் – நான்கினுஞ் கண்ணுக்கேயாமது காமம் அறம் பொருள் வீடிதற் கென்றுரைத்தான், வாமநன் சீலன் இராமாநுசனிந்த மண்மிசையே“ என்ற நூற்றந்தாதிப் பாசுரம் இங்கே நினைக்கத்தகும்.
