…………. ……………. நானவனை
காரார் திருமேனி காணுமலவும்போய்
சீரார் திருவேங் கடமே திருக்கொவல்
ஊரே மதிட் கச்சி ஊரகமே பேரகமே
பேரா மனுதிருத்தான் வெள்ள றையே வெஃகாலே
பேராலி தண்கால் நரையூர் திருப்புலியூர்
ஆராமம் சூழ்ந்த வரங்கம் கணமங்கை (2706)
காரார் மணினிர கண்ணனூர் விண்ணகரம்
சீரார் கணபுரம் சேரை திருவழுந்தூர்
காரார்க் குடந்தை கடிகை கடல்மல்லை
ஏரார் பொழில் சூழ் இடவந்தை நீர்மலை
சீராரும் மாலிரும் சோலை திரு மோகூர் (2707)
பாரோர் புகழும் வதரி வடமதுரை
ஊராய வெல்லாம் ஒழியாமே நானவனை
ஓரானை கொம்பொசித் தோரானை கோள்விடுத்த
சீரானைச் செங்கணெடியானைத் தேந்துழாய்த்
தாரானை தாமரைபோல் கண்ணனை யெண்ணருஞ்சீர்ப் (2708)
பேராயிரமும் பிதற்றி பெருந்தெருவெ (2709)
ஊராரிகழிலும் ஊராதொழியேன் நான்
வாரார் பூம் பெண்ணை மடல்…… (2710)
பதவுரை
| நான் அவனை கார் ஆர் திரு மேனி காணும் அளவும் போய் |
– |
(காமம் தலைக்கொண்ட) நான் அவனுடைய காளமேகத் திருவுருவைக்கண்டு களிக்கும் வரையில் ஊருராகப் போய் சீர் ஆர் திருவேங்கடமே வடமதுரை சிறந்த திருவேங்கடமலை, திருக்கோவலூர், மதிள் சூழ்ந்த காஞ்சீநகரத்திலுள்ள ஊரகம், அப்பக்குடத்தான் ஸந்நிதி, சலியாமற் கிடந்த மருத மரங்க முறித்த பெருமாள் எழுந்தருளியிருக்கிற திருவெள்ளறை, திருவெஃகா, பெரிய திருவலி நகர், திருத்தண்கால், திருநறையூர், குட்டநாட்டுத் திருப்புலியூர், அழகிய தோட்டங்கள் சூழ்ந்த திருவரங்கம், திருக்கண்ணமங்கை, நீலமணிவண்ணனான கண்ணபிரானது திவ்ய தேசமாகிய திருவிண்ணகர், அழகிய திருக்கண்ணபுரம், திருச்சேறை, தேரழுந்தூர், ச்ரமஹரமான திருக்குடந்ரை, கடிகைத் தடங்குன்று (அதாவது சோளஸிம்ஹபுரம்) திருக்கடல்மல்லை, அழகிய சோலைகள் சூழ்ந்த திருவிடவெந்தை, திருநீர்மலை, அழகிய திருமாலிருஞ்சோலை திருமோகூர், உலகத்தாரனைவரும் துதிக்கின்ற ஸ்ரீபதரிகாச்ரமம், வடதிசை மதுரை (ஆகிய) |
| ஊர் ஆய எல்லாம் ஒழியாமே |
– |
திவ்ய தேசங்களா யுள்ளவற்றில் ஓரிடமும் தப்பாமல் (எங்கும் புகுந்து) |
| ஓர் ஆனை கொம்பு ஒசிந்து ஓர் ஆனை கோள் விடுத்த சீரானை |
– |
குவலயாபீடமென்ற ஒரு யானையின் கொம்பை முறித்தும் மற்றொரு யானையின் இடரைப் போக்கியும் சீர்மை பெற்றவனாய் |
| செம் கண் கொடியானை |
– |
சிவந்தகண்களை யுடையனாய்க் கொண்டு எனக்கு எட்டர் தேயிருப்பவனாய் |
| தேன் துழாய் தாரானை |
– |
தேனொழுகுகின்ற திருத்துழாய் மாலையை யுடையனாய் |
| தாமரைபோல் கண்ணானை அவனை |
– |
தாமரைபோன்ற திருக்கண்களையுடையனான அப்பெருமானை குறித்து |
| எண் அஞசீர் பேர் ஆயிரம் பிதற்றி |
– |
எண்ணமுடியாத (கொடிய) குணங்களுக்கு வாசகமான நூதந) ஸஹஸ்ர நாமங்களைப் பிதற்றிக்கொண்டு |
| பெரு தெருவே |
– |
பெரிய தெருவழியே |
| ஊரார் இதிழிலும் |
– |
(என்னை) ஊரிலுள்ளாரெல்லாரும் பழித்தாலும் |
| நான் வார் ஆர் பூ பெண்னை மடல் ஊராது ஒழியேன் |
– |
நான், நீண்டு அழகிய பனை மட்டையைக் கொண்டு மட்லூர்வதை நிறுத்தமாட்டேன் (மடலூர்ந்தே தீர்வேன். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- பந்தடிக்கத் தொடங்கிக் குடக்கூத்திலேயகப்பட்டு மெலிந்த நான், என்னை இப்பாடு படுத்தினவனுடைய காரார்ந்த திருமேனியைக்கண்டு களிக்கப் பெறுமளவும் அவன் குணங்கள் கொண்டாடி யிருக்கும் தேசமெங்கும் நுழைந்து, விரஹம் தின்ற என்வடிவைக் காட்டி அவன் குணங்களை யழித்து வழியில்லா வழியினாலாயினும் அவனைப் பெறக்கடவேனென்று தன் துணிவை வெளியிடுகிறாள்.
கச்சியூரகம் – காஞ்சீபுரத்திலுள்ள ஸ்ரீ உலகளந்த பெருமாள் ஸ்ந்நிதி, பேரகம் – அப்பக்குடத்தான் ஸந்நிதி.
பேரா மறுதிறுத்தான் – ‘பேரா‘ என்பதை மருதுக்கு விசேஷணமாக யோஜிப்பது, பேராத (அஸுராவேதத்தாலே) ஸ்திரமாக நின்ற யமளார்ஜுநங்களை என்றபடி. அன்றியே, பேரா என்பதை செய்யாவென்னும் வாய்பாட்டிறந்தகால் வினையெச்சமாகக் கொண்டு (பேர்ந்து என்றபடியாய்) தளர் நடையிட்டுக் கொண்டு சென்று மருதுகளை முறித்தானென்றுமாம்.
எண்ணருஞ்சீர்ப் பேராயிரமும் பிதற்றி என்றவிடத்துப் பெரிய வாச்சான்பிள்ளையின் ஸ்ரீஸூக்தி காண்மின் – “குணகதநம் பண்ணுகைக்கு ஒரு ஸ்ரீ ஸஹஸ்ர நாம்முண்டிறே, அப்படி குணஹாநிக்கும் ஒரு ஸஹரநாமம் பண்ணுகிறேன்“ – என்று.
சீரார் திருவேங்கடம் முதலிய பல திருப்பதிகளிலே சென்று ஒவ்வொரு திருப்பதியிலும் ஒரு மூலையிலிருந்து நால்வரிருவர்க்குச் சொல்லி விடுசையன்றிக்கே நெடுவீதியேறப் புறப்பட்டு இங்கே இப்படி குணம் பாராட்டிக்கொண்டுகிடக்கிற மஹாநுபாவனுடைய குணஹாநியை நாட்டாரும் நகரத்தாரும் நன்கு அறியுங்கோள்“ என்று கோஷம்போட்டு மடலூரக் கடவேன், இப்படி நான் செய்வதற்காக ஊராரெல்லாரும் என்னைச் சிறிதும் இகழாமல் தலைமேல் சுமந்து கொண்டாடவேண்டும். அப்படி கொண்டாடாதே இகழ்ந்து பழி சொன்னார்களேயாகிலும் நான் மடலூருகை தவிரமாட்டேன் என்று தனது உறுதியை உரைத்துத் தலைக்கட்டினாளாயிற்று.
பெண்ணை என்று பனைமரத்துக்குப் பெயர், “வாரார்பூம் பெண்ணைமடல்“ என்று பனைமடலைச் சிறப்பித்துச் சொன்னது ‘என்கையிலே சிறந்த ப்ரஹமாஸ்த்ரமிருக்கிறபடி பாருங்கள், இனி எனக்கு என்னகுறை? என் காரியம் கைபுகுந்த்தேயாம்“ என்று தான் பரிக்ரஹித்தஸாதநத்தின் உறைப்பைக் காட்டினபடி.
