(2154)

(2154)

புகழ்வாய் பழிப்பாய்நீ பூந்துழா யானை,

இகழ்வாய் கருதுவாய் நெஞ்சே, – திகழ்நீர்க்

கடலும் மலையும் இருவிசும்பும் காற்றும்,

உடலும் உயிருமேற்றான்.

 

பதவுரை

நெஞ்சே

(நல்லது கெட்டதுகளை ஆராயக்கூடிய ) மனமே!

நீ

நீ

பூந்துழாயானை

அழகிய திருத்துழாய் மாலையணிந்தபெருமானை

புகழ்வாய்

ஸ்தோத்ரம் பண்ணினாலும் பண்ணு;

(அன்றியே)

பழிப்பாய்

நிந்திப்பதானாலும் நிந்தி;

(அன்றியே)

இகழ்வாய்

அநாதரித்தாலும் அநாதரி;

(அன்றியே).

கருதுவாய்

ஆதரித்தாலும் ஆதரி; (நீ உனக்கு இஷ்டமானபடி செய்;)

திகழ் நீர் கடலும்

விளங்குகின்ற ஜலபூர்த்தியையுடைய ஸமுத்ரமும்,

மலையும்

பர்வதங்களும்

இரு விசும்பும்

பரம்பிய ஆகாசமும்

காற்றும்

வாயுவும்

உடலும்

(தேவாதி) சரீரங்களும்

உயிரும்

(அந்தந்த சரீரங்களிலுள்ள) (பிராணிகளும் ஆகிய இவற்றையெல்லாம் )

ஏற்றான்

தரித்துக் கொண்டிருப்பவன் அவ்வெம்பெருமானே காண்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- 1.“சஞ்சலம் ஹி மந:கிருஷ்ண!” என்றும் 2. “நின்றவா ரில்லாநெஞ்சு” என்றுஞ்சொல்லுகிறபடியே நெஞ்சின் நிலைமை மாறிமாறி கொண்டேயிருக்குமென்பதை நினைத்த ஆழ்வார், ‘நெஞ்சே! நீ எப்போதும் ஒரே நிலையாயிருந்து எம்பெருமானைப் புகழ்வதும் ஆதரிப்பதுமாயிருந்தாலும் சரி; நிலைமாறிச் சிசுபாலாதிகளைப்போலே அவனைப் பழிப்பதும் அநாதரிப்பதுமாயிருந்தாலும் சரி; நீ எது செய்தாலும் அவனுடைய பெருமேன்மைக்குக் குறைவு நிறைவுகள் வாராதுகாண்’ என்று தம்முடைய உறுதியைத் தெரிவிக்கிறார் பின்னடிகளில், எம்பெருமான் கார்ய காரண ரூபங்களான ஸகல பதார்த்தங்களையும் தரித்துக்கொண்டிருப்பவன் என்று அவனுடைய ஸர்வதாரகத்வத்தை சொன்னதானது நம்முடைய புகழ்வு மிகழ்வுமெல்லாம் அவனுக்கு அப்ரயோஜகம் என்கைக்காகவென்க. ஏற்றான் – எல்லாம் தானென்கிற சொல்லுக்குள்ளே அடங்கும்படி எல்லாவற்றையும் தனக்கு விசேஷணமாகக் கொண்டுள்ளான் என்றுரைப்பதுமுண்டு.

இரண்டாமடியில் “கருதுவாய் என் நெஞ்ச்சே!” என்றும் பாடமோதுவர்;தளைபிறழாது.

 

English Translation

Praise him or blame him, -O Heart of mine!, -honour him or dishonour him, the Lord accepts all; for does he not contain the mighty ocean, the mountains, plains, winds, bodies and lives, all within himself? He wears a cool Tulasi garland.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top