(1910)

(1910)

தெள்ளிய வாய்ச்சிறி யான்நங்கை காள் உறி மேலைத் தடாநி றைந்த,

வெள்ளி மலையிருந் தாலொத்த வெண்ணெயை வாரி விழுங்கி யிட்டு,

கள்வ னுறங்குகின் றான்வந்து காண்மின்கள் கையெல் லாம்நெய்,வயிறு

பிள்ளை பரமன்றுஇவ் வேழுல கும்கொள்ளும் பேதையேன் என்செய் கேனோ.

 

பதவுரை

நங்கைகாள்

தெள்ளிய வாய்

தெளிந்த திருப்பவளத்தை யுடையனான

சிறியான்

இச்சிறு பிள்ளையானவன்

உறி மேலைத் தடா நிறைந்த

உறையின் மேலிலுள்ள பானையிலே நிரம்பியிருந்த

வெள்ளி மலை இருந்தால் ஒத்த

வெள்ளிமலை போன்றிருந்த

வெண்ணெயை

வெண்ணையை

வாரி விழுங்கியிட்டு

(தன் தடங்கையார) வாரி விழுங்கிவிட்டு

கள்வன் உறங்குகின்றான்

கள்ளத் தூக்கம் தூக்குகின்றான்

வந்து காண்மின்கள்

வந்துபாருங்கள்

(செய்த களவை மறைக்க வொண்ணாதபடி)

கை எல்லாம் நெய்

கை முழுதும் நெய் மயமாயிரா நின்றது,

வயிறு

(இவனது) வயிறானது

பிள்ளை பரம் அன்று

பிள்ளைப் பருவத்துக்கு ஏற்றதா யிருந்ததில்லை.

இ ஏழ் உலகும் கொள்ளும்

இந்த ஸப்த லோகங்களையும் உட்கொள்ளக் கடவது போலும்,

பேதையன்

அறிவற்றவளான நான்

என் செய்கேன்

என்ன பண்ணுவேன்?

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- யசோதை தானே முறைப்பட்டுப் பேசும் பாசுரம் இது. நங்கைமீர்! உறிமேலே தடாக்களிலே சேமித்து வைக்கப்பட்டு வெள்ளிமலை யிருந்தாற் போன்ற வெண்ணெயை அள்ளி விழுங்கிவிட்டு ‘இந்தப் பூனையா இந்தப் பாலைக்குடித்தது!’ என்னும் படியாகப் பாசாங்குடன் குறட்டைவிட்டுக் கள்ள நித்திரை செய்கின்றான், இந்த வேடிக்கையை வந்துபாருங்கள், தன் களவை மறைத்துவிட வேணுமென்ற எண்ணத்தினால் ஒன்றுமறியாதவன்போல உறங்குவதாகப் பாவனை காட்டுகின்ற இவன் கையிலுள்ள நெய்யை நன்றாகத் துடைத்துவிட்டன்றோ உறங்கவேணும், திருடக்கற்றானே யன்றித் திருட்டை மறைக்கும்வகை கற்றானல்லன், கையெல்லாம் நெய்மயமாக இருக்கும்படியை வந்து காணுங்கோள், இவ்வளவு வாரியுண்டும் வயிறு நிரம்பினபாடில்லை, இவனுடைய பருவத்துக்குத் தக்க வயிறாக இல்லை. இவ்வேழுலகையும் உட்கொள்ளக் கடவதாக இடமுடைத்திரா நின்றது, என்று யசோதை சொன்னதைக் கேட்ட சில ஆய்ச்சிகள்; அசோதாய்! இத் தயிரும் பாலும் பாழ் போகாமே ஒரு பிள்ளை வேணுமென்றோ நீ பெற்றது, அவன் இப்போது அமுது செய்தானாகில் நீ, இப்படி முறையிடுவானேன்?“ என்று சொல்ல, பேதையேன் என்செய்கேனோ? என்கிறாள். வெண்ணெய் போயிற்றே யென்று வருந்துகிறேனல்லேன், இத்தனையும் இவனுக்கு ஜீர்ணியாதொழியில் என் செய்வதென்று வருந்துகின்றே னென்கிறாள் போலும்.

தெள்ளியவாய்ச் சிறியான் – “கண்ணனுக்கு இருக்கிறபடியும் செயலிருக்கிற படியுங்காண்“ என்பது பெரியவாச்சான் பிள்ளை வியாக்கியான ஸ்ரீ ஸூக்தி. ஒரு சிறுபிள்ளையாகக் கண்ணுக்குத் தோற்றுவானாயினும் செய்கிற காரியம் வலிதாயிராநின்ற தென்கை. தெள்ளியவாய் என்ற விசேஷணத்தினால், கள்ளத்தனம் முகத்திலே தோற்றாமே தெளிவுதோற்ற விகாரநின்ற தென்கை.

கீழில் மேலிற்பாட்டுகளிற் போலே இப்பாட்டில் ஈற்றில் ;என் செய்கை னென்சேய்கேனோ; என்று இரட்டித்து ஒதுதல் அத்யாபக பாடமாயினும் அது யாப்புக்குப் பொருந்தாது.

 

English Translation

O Ladies!  This wily child with clean I sleeps innocently after gulping but that was heaped like a white mountain the pitcher set on the rope shelf hanging from the ceiling.  His hands are smeared with butter.  His stomach is not what a normal child would have, it can fit the seven worlds into itself. O Dear me, what shall I do, what shall I do?

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top