ஸ்ரீ:
ஆழ்வார் திருவடிகளே சரணம்.
முதலாழ்வார்களுள் முதல்வரான பொய்கையாழ்வார் அருளிச்செய்த
முதல் திருவந்தாதி.
முதலாழ்வார்கள் திருவடிகளே சரணம்.
ஆழ்வார்களனைவர்க்கும் முன்னே இந்த வுலகிலிருள் நீங்க வந்துதித்து அந்தமிழால் நற்கலைகளாய்ந்துரைத்த பொய்கையார் பூதத்தார் பேயார் என்னுமிம்மூவரும் முதலாழ்வார்களென்று பிரஸித்தி பெற்றிருப்பர். மற்றுள்ள வாழ்வார்களுக்கு முன்னே வந்துதித்து, நற்றமிழால் நூல் செய்து நாட்டையுய்த்த – பெற்றி மையோரென்று முதலாழ்வார்களென்னும் பெயரிவர்க்கு, நின்ற துலகத்தே நிகழ்ந்து.” என்ற உபதேசரத்தினமாலைப் பாசுரம் நோக்கத்தக்கது.
விபவத்தில் இம்மூவரும் பகவத்கடாக்ஷம் பெற்ற பின்னர் ஒருவரையொருவர் விட்டுப்பிரியாமல் ஒன்று கூடியே வாழ்ந்தது பற்றி அர்ச்சாவதாரத் திருக்கோயில்களிலெங்கும் இம்மூவரும் ஒன்றுசேர்ந்தே கோயில் கொண்டிருப்பர்கள் ; அப்படியே இவர்களின் வைபவமும் ஒன்றுசேர்த்தே அநுஸந்திக்கப்படும். இம்மூவர்க்கும் திருநாள் பாட்டு அருளிச்செய்யாநின்ற ஸ்ரீமணவாள மாமுனிகளும் “ஐப்பசியிலோணமவிட்டம் சதயமிவை, ஒப்பிலவா நாள்களுலகத்தீர்–எப்புவியும், பேசுபுகழ்ப் பொய்கையார் பூதத்தார் பேயாழ்வார், தேசுடனே தோன்று சிறப்பால்.” என்று ஒரே பாசுரமாகத் தொகுத்து அருளிச்செய்தமையும் நோக்கத்தக்கது.
முதலாழ்வார்கள் வைபவம்.
பொய்கையாழ்வார்.
“தெண்ணீர்வயல் தொண்டை நன்னாடு சான்றோருடைத்து” என்று ஔவையார் பாடியபடி கல்வி கேள்வி அறிவொழுக்கங்களாலான்றவர் பலரையுமுடையதான தொண்டை நன்னாட்டிலே புண்ய க்ஷேத்ரங்களெல்லாவற்றினுள்ளும் மிக்க சீர்மை பெற்று விளங்கும் ஸத்யவ்ரத க்ஷேத்ரத்திலே, ” முத்தி தரும் நகரேழில் முக்கியமாங்கச்சி’ என்றும் ‘காசி முதலாகிய நன்னகரி யெல்லாம் கார்மேனியருளாளர் கச்சிக்கு ஒவ்வா ” என்றும் சிறப்பித்துக் கூறப்படுவதும் வேகவதியென்னும் புண்ணிய நதியின் தென்பால் விளங்குவதுமான காஞ்சிமாநகரிலே ஸ்ரீயதோக்தகாரி ஸந்நிதி யென்று ப்ரஸித்தமான திருவெஃகா வென்னும் திவ்ய தலத்தின் வடபுறத்தில் மஹான்களது திருவுள்ளம் போல் ஆழ்ந்து தெளிந்து விளங்கும் பொற்றாமரைப் பொய்கையிலே பூத்த தொரு நற்றாமரைப்பூவிலே ஐப்பசிமாதத்துத் திருவோணத்திலே ஒருவர் திருவவதரித்தார். இவருடைய பிரபாவத்தைப் பார்த்து அனைவரும் இவரைத் தேவிற்சிறந்த திருமாலின் திவ்யாயுதங்களுள் பாஞ்சஜந்யமென்னும் திருச்சங்கின் அம்சமாக அறுதி யிட்டிருந்தனர். பொய்கையில் அவதரித்தது காரணமாகப் பொய் கையாழ்வாரென்று திருநாமம் பெற்றாரிவர்.
பூதத்தாழ்வார்.
நீர் வளம் நிலவளம் முதலிய பல வளங்களும்மலிந்து இப்பூமண்டலத்திற்குத் திலகம் போன்றுள்ள அத்தொண்டை மண்டலத்திலே கீழ்கடற்கரையிலுள்ள திருக்கடல்மல்லை யென்கிற மஹாபலிபுரத்திலே குருக்கத்திப்பந்தரிலே ஒரு குருக்கத்திமலரிலே ஐப்பசி மாதத்து அவிட்ட நக்ஷத்ரத்திலே ஒருவர் திருவவதரித்தார். இவருடைய வைபவத்தை நோக்கி அனைவரும் இவரைக் கௌமோதகி யென்னும் கதாயுதத்தின் அம்சமாக அறுதியிட்டிருந்தனர். இவர்க்குப் பூதத்தாழ்வாரென்று திருநாமமானபடி என்னென்னில் ;-வடமொழியில் “***” (பூ-ஸத்தா யாம்.) என்கிற தாதுவடியாகப் பிறந்தது பூதம் என்னுஞ் சொல். முதல் திருவந்தாதி. ஸத்தை பெற்றது என்று பொருள். எம்பெருமானுடைய திருக் குணங்களையநுபவித்தே ஸத்தைப்பெற்றாரென்னுங் காரணம் பற்றிப் பூதத்தாழ்வாரென்று திருநாமமாயிற்றென் றுணர்க. திருவாய் மொழியில் (5-2-1) “ கடல் வண்ணன் பூதம் ” என்றவிடத்து வியாக்கியானங்களில் இப்பொருள் விளங்கக் காண்க.
பேயாழ்வார்.
“ஆறோடீரெட்டுத் தொண்டை” என்றவாறு நூற்றெட்டுத் திருப்பதிகளுள் இருபத்திரண்டு திருப்பதிகளையுடையதான துண்டீரமண்டலமென்கிற அத்தொண்டைவள நாட்டிலே திருவல்லிக்கேணியென்னும் திவ்ய தேசத்துக்குத் தென் திசையிலுள்ள திருமயிலை நகரியில் ஒரு கிணற்றிலேயுண்டான செவ்வல்லிப் பூவிலே ஐப்பசி மாதத்துச் சதயநக்ஷத்ரத்திலே ஒருவர் திருவவதாரஞ் செய்தருளினர். இவருடைய வைபவத்தைக்கண்டு பலரும் இவரை நந்தகமென்னும் வாட்படையின் அம்சமாக அறுதியிட்டனர். இவர் ஒப்புயர்வற்ற பகவத்பக்தியையுடையராய், கண்டவர்களடங்கலும் ‘ இவர் பேய் பிடித்தவர்’ என்னும்படி நெஞ்சழிந்து கண் சுழன்று அழுதும் சிரித்தும் தொழுதுமெழுந்தாடியும் மகிழ்ந்து பாடியும் அலறியுமே அநவரதம் போது போக்கிக்கொண்டிருந்தமையால் பேயாழ்வாரென்று திருநாமம் பெற்றனர். பரமபக்தி தலை யெடுத்து எம்பெருமானை அநுபவிக்கும் திறம் மற்ற ஆழ்வார்களிற் காட்டில் இவர்க்கு மிகப் பெரிதாயிருந்ததனாலும், இவர் தாம் எம்பிரானுக்கு ஆட்பட்டது மாத்திரமேயன்றித் திருமழிசையாழ்வாரைத் திருத்திப் பணிகொண்ட மஹானாதலாலும் மஹதாஹ்வயர் என்ற மற்றொரு திருநாமமும் இவர்க்கு உண்டு.
இவர்களின் வைபவம்.
ஸ்ரீராம பரதலக்ஷ்மணர்போல அடுத்தடுத்த நாள்களில் அவதரித்தவர்களும் அயோநிஜர்களுமாகிய இம்மூவர்க்கும், ஸ்ரீவைகுண்டநாதனுடைய திருவாணையினால் ஸேனை முதலியார் இந் நிலத்திற்கெழுந்தருளிப் பஞ்சஸம்ஸ்காரங்களைச் செய்து திருமந்திரப் பொருள்களையும் உபதேசித்தருளினர். அதனால் இவர்கள் “முக்குணத் திரண்டவையகற்றி, ஒன்றினிலொன்றிநின்று ” என்றாற்போல ரஜோகுணமும் தமோகுணமும் சிறிதுமற்று சுத்த ஸாத்விகர்களாய் எம்பெருமானுக்குக் கைங்கரியம் செய்வதையே பெரும் பேறாகக்கொண்டு ஞான பக்திவிரக்திகளுக்குப் பிறப்பிட மென்னலாம்படி விளங்கி “ உண்ணுஞ்சோறு பருகுநீர்த் தின்னும் வெற்றிலையுமெல்லாங் கண்ணன் ” என்றாற்போல பகவத் குணாது பவத்தையே தாரகமும் போஷகமும் போக்யமுமாகக்கொண்டு அந்நபாநாதிகளை யொழித்து, உண்டியே உடையே உகந்தோடுகின்ற இம்மண்டலத்தாரோடு கூடகில்லாமல் ஒருநாளிருந்தவிடத்தில் மற்றொருநாளிராதபடி ஓடித்திரியும் யோகிகளாய், தம்மில் ஒருவரையொருவர் அறியாமல் தனித்தனியே ஸஞ்சரித்துக்கொண்டிருந்தனர்.
இப்படி ஸஞ்சரித்துக் கொண்டிருந்த இம்மூவரையும் ஓரிடத் திலே சேர்த்து ஆட்கொண்டு இவர்கள் முகமாக உலகத்தை வாழ் விக்கவேணுமென்கிற குதூஹலம் எம்பெருமான் திருவுள்ளத்தி லுண்டாயிற்று.
ஸத்யகாமனாய் ஸத்யஸங்கல்பனான எம்பெருமானுடைய மநோரதம் பழுதுபடுமோ? அவனுடைய திருவுள்ளம் நிறைவேறுதற்கு வழியுண்டாயிற்று. அதாவது ஒருநாள் ஸுர்யன் அஸ்தமித்தபின்பு பொய்கையாழ்வார் திருக்கோவலூரையடைந்து அங்கு ம்ருகண்டு மஹர்ஷியின் திருமாளிகையிற் சென்று அதன் இடை கழியிற் பள்ளிகொண்டிருந்தார். பிறகு பூதத்தாழ்வாரும் அங்கே வந்து சேர, ”வைஷ்ணவோ வைஷ்ணவம் த்ருஷ்ட்வா தண்டவத் ப்ரணமேத் புவி ” என்கிற சாஸ்திர முறைப்படி ஒருவரை யொருவர் வந்தனை வழிபாடுகள் செய்தவுடன், ” இவ்விடம் ஒருவர் படுக்கலாம், இருவர் உட்கார்ந்திருக்கலாம்” என்று பொய்கையார் விண்ணப்பஞ்செய்ய, அவ்விதமே இருவரும் அங்கு உட்கார்ந்திருந்தனர். அதன் பிறகு பேயாழ்வாரும் அவ்விடத்திற்கே வந்து சேர, ஒருவரையொருவர் தண்டன்ஸமர்ப்பித்து உபசரித்துக் கொண்ட பின் “. இவ்விடம் ஒருவர் படுக்கலாம், இருவர் இருக்கலாம், மூவர் நிற்கலாம் ” என்று பொய்கை பூதத்தாரிருவரும் சொல்ல, அவ்விதமே மூவரும் அவ்விடத்திலே நின்றுகொண்டு பரஸ்பரம் பகவத் குணங்களைச் சொல்லுதலும் கேட்டலுஞ்செய்து களித்திருந்தனர்.
அப்பொழுது உலகளந்த மூர்த்தி அவர்கள் திறத்திலே திரு வருள் செய்யும் பொருட்டுப் பெருத்த இருளையும் கனத்த மழை யையுமுண்டாக்கி, பெரிய வடிவத்தோடு அவர்களிடையே சென்று நின்று பொறுக்க முடியாத மிக்க நெருக்கத்தைச் செய்தருளினான். அதன்மேல் இவர்கள் . இதுவரையிலும் இல்லாத நெருக்கம் இப்போது உண்டானதற்குக் காரணமென் கொல்!; பிறரெவரேனும் இங்கு வந்து புகுந்தவருண்டோ?’ என்று சங்கிக்கையில், பொய்கையாழ்வார் பூமியாகிய தகழியில் கடல் நீரையே நெய்யாகக் கொண்டு ஸுர்யனை விளக்காக ஏற்ற, பூதத்தாழ்வார் அன்பாகிய தகழியில் ஆர்வத்தை நெய்யாகவும் சிந்தையைத் திரியாகவுங் கொண்டு ஞான தீபத்தை ஏற்ற, இவ்விரண்டி னொளியாலும் இருளற்றதனால், பேயாழ்வார் எம்பெருமானைத் தாம் ஸேவித்தமை கூறியவளவிலே மூவரும் பகவத்ஸ்வரூபத்தை நன்கறிந்து அநுபவித்து ஆநந்தப் பெருவெள்ள மெய்தி அதனுக்குப் போக்குவீடாகப் பிரபந்தங்களருளிச்செய்து உலகத்தாரை உய்விக்கத் திருவுள் ளம்பற்றினர்.
அப்பொழுது, பொய்கையாழ்வார் “ வையம் தகளியா ” என்று தொடங்கியும், பூதத்தாழ்வார் “ அன்பே தகளியா ” என்று தொடங்கியும், பேயாழ்வார் . “ திருக்கண் டேன் ” என்று தொடங்கி யும் மூவரும் மூன்று திருவந்தாதிப் பிரபந்தங்களைத் திருவாய்மலர்ந் தருளினர். இப்பிரபந்தங்கட்கு அடைவே, முதல் திருவந்தாதி யென்றும் இரண்டாந் திருவந்தாதி யென்றும் மூன்றாந் திருவந்தாதி யென்றும் திருநாமம் வழங்கலாயிற்று.
பின்பு இவ்வாழ்வார்கள் மூவரும் தேஹளீசனென்னும் திருக் கோவலூராயனாரைத் திருவடி தொழுது விடைபெற்று நெடுங்காலம் திருப்பதிகள் தோறும் சென்று மங்களாசாஸம் செய்து, யோகபலத்தால் ஆயிரக்கணக்கான வருஷங்கள் இம்மண்ணுலகில் வாழ்ந் திருந்து வையகத்தை வாழ்வித்தருளினர்.
முதலாழ்வார் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ:
பொய்கையாழ்வார் திருவடிகளே சரணம்.
-இயற்பா-
முதல் திருவந்தாதி.
இது – மயர்வற மதிநல மருளப்பெற்ற ஆழ்வார்கள் முதல்வரான பொய்கையாழ்வாரருளிச் செய்ததும், நாலாயிரப் பிரபந்தத்தில் மூன்றாவது ஆயிரமாக ஸ்ரீமந்நாதமுனிகளால் வகுக்கப்பட்ட இயற்பாவில் முதற்பிரபந்தமுமாகும்.
அந்தத்தை ஆதியாகவுடையது அந்தாதி. அன்மொழித்தொகை: வடமொழித்தொடர். அந்த ஆதி எனப்பிரிக்க. அந்தாதியாவது – முன்னின்ற செய்யுளின் ஈற்றிலுள்ள எழுத்தாயினும் அசையாயினும் சீராயினும் அடியாயினும் அடுத்துவரும் செய்யுளின் முதலாக அமையும்படி பாடுவது. அந்தாதியென்பது தொண்ணூற்றாறு வகைப் பிரபந்தங்களுள் ஒன்றாம். பதிற்றந்தாதி யென்றும் நூற்றந்தாதி யென்றும் வகைகள் உண்டு. பத்து வெண்பாவினாலேனும் பத்து கட்டளைக் கலித்துறையினாலேனும் அந்தாதித் தொடையாற் கூறுவது பதிற்றந்தாதி. நூறு வெண்பாவினாலேனும் நூறு கட்டளைக் கலித்துறையினாலேனும் அந்தாதித் தொடையாற் பாடுவது நூற்றந்தாதி. இப்பிரபந்தம் நூறு வெண்பாவினாலமைந்தது. சொற்றொடர் நிலைச் செய்யுள், பொருட்டொடர் நிலைச் செய்யுள் என்றவகையில் இது சொற்றொடர் நிலை, “செய்யுளந்தாதி சொற்றொடர் நிலையே“ என்றார் தண்டியலங்காரத்தும். இந்நூலின் பாசுரங்கள் பொருளில் ஒன்றையொன்று தொடர்ந்து நிற்பது தோன்ற அறிவிற் சிறந்த ஆன்றோர் உபந்யஸிக்க்க் கூடுமாதலால் இது பொருட்டொடர் நிலையுமாம். “பொருளினுஞ் சொல்லினுமிருவகை தொடர்நிலை“ என்னும் தண்டியலங்காரச் சூத்திரத்தின் உரையில் “ இரண்டென்னாது வகை என்ற மிகையான் மூன்றாவது பொருளினுஞ் சொல்லினுந் தொடர்தலுமுண்டெனக் கொள்க“ என்றது காண்க. நெடுக ஒரு கதையாகக் கூறுதலின்றியே ஸ்தோத்ர ரூபமாக அருளிச் செய்யப்பட்ட பாசுரங்களாதலால் சொற்றொடர் நிலையாகவே கொள்ளலாம்.
தொல்காப்பியத்துச் செய்யுளியலிற் கூறப்பட்ட அம்மை, அழகு, தொன்மை, தோல், விருந்து, இயைபு, புலன், இழைபு என்ற எண்வகை வனப்பினுள் இந்நூல் விருந்தென்னும் வனப்பின்பாற்படும். * “ விருந்தே தானும் புதுவது கிளந்த யாப்பின்மேற்றே” என்ற தொல்காப்பியச் சூத்திர வுரையில் நச்சினார்க்கினியர் “ விருந்து தானும் பழங்கதை மேலதன்றிப் புதிதாகத் தாம் வேண்டியவாற்றாற் பல செய்யுளும் தொடர்ந்து வரத்தொடுத்துச் செய்யப்படும் தொடர்நிலை மேலது” என்றும், “ அது-முத்தொள்ளாயிரமும் பொய்கையார் முதலாயினோர் செய்த அந்தாதிச் செய்யுளும் என உணர்க; கலம்பகம் முதலாயினவும் சொல்லுப ” என்றும் உரைத்துள்ளமை காண்க. [* தொல்காப்பியம் – பொருளதிகாரம்- செய்யுளியல் 240]
திரு என்னும் பல பொருளொரு சொல் – வடமொழியிலே ஸ்ரீ என்பதுபோலத் தமிழிலே மேன்மையையுடைய எப்பொருள்களுக்கும் விசேஷண பதமாகி அவற்றிற்கு முன்னே மகிமைப் பொருளைக் காட்டிவரும். இங்கே இது அந்தாதிக்கு (நூலுக்கு) அடைமொழி. மேன்மையாகிய அந்தாதி என்றாவது, மேன்மையையுடைய அந்தாதி என்றாவது விரியும். மற்றைத் திருவந்தாதிப் பிரபந்தங்களுக்கு முன்னே இது திருவதரித்துபற்றி முதல் திருவந்தாதி யென்று இதற்குத் திருநாமமிட்டு வழங்கலாயினர் முன்னோர்.
ஸ்ரீ:
ஆழ்வார் திருவடிகளே சரணம்
-இயற்பா முதல் திருவந்தாதி-
தனியன் உரை
முதலியாண்டான் அருளிச்செய்த தனியன்.
[இருவிகற்ப நேரிசை வெண்பா]
கைதைசேர் பூம்பொழில்சூழ் கச்சிநகர் வந்துதித்த *
பொய்கைப் பிரான்கவிஞர் போரேறு – வையத்
தடியவர்கள் வாழ வருந்தமிழ் நூற்றந்தாதி *
படிவிளங்கச் செய்தான் பரிந்து.
கைதை சேர் | – | தாழைகள் மிகுதியாகச் சேர்ந்திருக்கப் பெற்ற |
பூம்பொழில் சூழ் | – | அழகிய சோலைகளாலே சூழப்பட்ட |
கச்சி நகர் | – | காஞ்சீபுரத்தில் [திருவெஃகாவினருகே] |
வந்து உதித்த | – | திருவவதரித்த |
பொய்கைப்பிரான் | – | பொய்கையாழ்வாரென்கிற |
கவிஞர் போர் ஏறு | – | கவிச்ரேஷ்டரானவர் |
வையத்து | – | இப்பூமண்டலத்திலுள்ள |
அடியவர்கள் | – | பக்தர்களான ஸ்ரீவைஷ்ணவர்கள் |
வாழ | – | வாழும்படியாகவும் |
படி விளங்க | – | இப்பூமியானது [இருள் நீங்கி ஞானவொளி பெற்று] விளங்கும்படியாகவும் |
அரு தமிழ் | – | அரிய தமிழினாலாகிய |
நூற்றந்தாதி | – | அந்தாதித் தொடையாலமைந்த நூறு பாசுரங்களையுடைய பிரபந்த்த்தை |
பரிந்து | – | அன்புகொண்டு |
செய்தான் | – | திருவாய் மலர்ந்தருளினர். |
***- “இன்கவிபாடும் பரமகவிகள்“ என்றும் “செஞ்சொற் கவிகாள்“ என்றும் நம்மாழ்வாராலும், “செந்தமிழ் பாடுவார்“ என்று திருமங்கை மன்னனாலும் சிறப்பித்துக் கூறப்பட்டுச் செந்தமிழ்க் கவிகளுள் சிறந்து விளங்குபவரும், திருக்கச்சிமாநகரில் திருவவதரித்தவருமான பொய்கையாழ்வார் தமது திவ்யப்ரபந்தமாகிற சிறந்த திருவிளக்கையேற்றி அதனால் இந்நிலவுலகம் முழுவதையும் இருள்நீக்கி விளங்கச்செய்து, “ தொண்டர்க்கு அமுதுண்ணச் சொன்மாலைகள் சொன்னேன் “ என்றாற்போல பகவத்பக்தரான ஸ்ரீவைஷ்ணவர்களையும் இப்பிரபந்த முகத்தால் வாழ்வித்தருளினர் என்றதாயிற்று.
கவிஞர்போரேறு – வடநூலார் ச்ரேஷ்டர்களைச் சொல்லும்போது, சிங்கம், புலி, எருது முதலிய செருக்குடைய மிருகங்களுக்கு வாசகமான சொற்களைச் சேர்த்து, ‘புருஷஸிம்ஹ:‘ ‘புருஷவ்யாக்ர:‘ ‘புருஷபுங்கவ: -புருஷர்ஷப: ‘ என்று பிரயோகிப்பது போலவே தமிழரும் பிரயோகிப்பது துண்டாகையாலே “ கவிஞர் போரேறு ” என்றது கவிகளுட் சிறந்தவரென்றபடி. ஆழ்வார்களின் அருளிச் செயல்களாகிய திவ்யப்ரபந்தங்களை அதிகரித்தலையே ஸ்ரீவைஷ்ணவர்கள் உஜ்ஜீவநமாக அத்யவஸித்திருப்பதுபற்றி ‘அடியவர்கள் வாழ’ எனப்பட்டது.
“ அருந்தமிழ் நூற்றந்தாதி ” என்கிற பாடத்தில் வெண்டளை பிறழ்கின்றமையால் “ அருந்தமிழந்தாதி ” என்று பாடமிருந்திருக்கவேணும். ஆனாலும், தனியன் வியாக்கியானஞ் செய்தருளின பிள்ளைலோகஞ்சீயர் “ அருந்தமிழ் நூற்றந்தாதி ” யென்றே ஸ்பஷ்டமாக ப்ரதீக மெடுத்து வியாக்கியான மருளியிருப்பதாலும் இப்பாடமே நாடெங்கும் வழங்கிவரக் காண்கையாலும் இதுவே கொள்ளப்பட்டது.
படிவிளங்க என்பதற்குப் பலவகையாகப் பொருள் கூறுவர், படி – பூமியிலே, விளங்க – இப்பிரபந்தம் நெடுங்காலம் விளங்கும்படியாக என்றும், படி என்று உபமாநத்துக்கும் வாசகமாகையாலே, தமிழ்ப் பிரபந்தங்கட்கெல்லாம் உபமாநமாக விளங்கும்படியாக என்றும், படி என்று திருமேனிக்கும் பெயராகையாலே, “ திருக்கண்டேன் பொன் மேனிகண்டேன் ” என்று பேயாழ்வார் அநுஸந்திக்குமாறு எம்பெருமானுடைய திருமேனி விளங்கும்படி “ வருத்தும் புறவிருள் மாற்ற எம்பொய்கைப்பிரான் மறையின் குருத்தின் பொருளையும் செந்தமிழ் தன்னையுங் கூட்டி ஒன்றத்திரித்தன் றெரித்த திருவிளக்கு ” என்று இராமாநுச நூற்றந்தாதியில் அமுதனார் அருளிச்செய்தபடியே திருவிளக்கேற்றியதுபோன்ற பாமாலையை அருளிச் செய்தாரென்றும் கூறுவர்.
பரிந்து – எம்பெருமான்மேற் காதல்கொண்டு என்கை.
கேதகீ என்னும் வடசொல் ‘கைதை‘ எனவும், காஞ்சீநகரம் என்னும் வடசொல் தொடர் ‘கச்சி நகர்‘ எனவும் திரிந்தன.
தனியன் உரை முற்றிற்று
கச்சி நகர்வந்துதித்த பொய்கைப்பிரான்.
இத்திருவந்தாதிக்குப் பெரிய வாச்சான் பிள்ளை யருளிச்செய்த வியாக்கியான அவதாரிகைத் தொடக்கத்தில்
“ இன்கவிபாடும் பரமகவிகளென்றும் செந்தமிழ் பாடுவாரென்றும் இவர்கள் அவதரித்தது ஓரோ தேசங்களிலேயாகிலும் காலப் பழமையாலே இன்னவிடமென்று நிச்சயிக்கப் போகாது.”
என்றருளிச் செய்திருக்கும் வாக்கியத்தை நோக்குங்கால், பொய்கை யாழ்வாரைக் கச்சிநகரில் அவதரித்தவராகவும் பூதத்தாழ்வாரைத் கிருக்கடல்மல்லையில் அவதரித்தவராகவும் பேயாழ்வாரைத் திருமயிலையில் அவதரித்தவராகவும் நாம் சொல்லிக்கொண்டிருப்பது அஸங்கதமென்ன வேண்டியதாகிறது. மேற்குறித்த வியாக்கியான வாக்கியம் அச்சுப்பிரதிகளிற் காண்கிறபடியே உண்மையாயின், முதலாழ்வார்கள் அவதரித்தது யுகாந்தரத்திலாகையாலே இன்னவிடத்தில் அவதரித்தனர் என்று நிச்சயிக்கமுடியாத விஷயமென்று பெரியவாச்சான்பிள்ளையின் திருவுள்ளமாக விளங்கா நின்றது. இப்படியாகில் முதலாழ்வார்களின் அவதார ஸ்தலங்களை விவரித்துக் கூறுகின்ற திவ்யஸுரிசரிதம், திருவந்தாதித் தனியன்கள், குருபரம்பராப்ரபாவம், பிரபந்தசாரம், உபதேசரத்தினமாலை முதலிய பிரபந்தங்களின் ப்ராமாண்யத்தில் ஸந்தேஹம் ஜநிக்க இடமுண்டாகின்றது. இவ்விஷயத்தை நாம் நன்கு ஆராய்தல் வேண்டும்.
மேலெடுத்துக் காட்டிய வியாக்கியான ஸ்ரீ ஸுக்தியின் அரும் பதவுரையில்- “ இவையிரண்டு ஸங்கதியும் ஸ்வரஸமன்று; பிழையும் தெரியாது; வந்தவிடங்களிலே கண்டுகொள்வது ” என்றிருக்கக்கண்டு பிராசீநதாள கோசங்களைப் பரிசீலனம் செய்ய நாம் தொடங்கினபோது மேற்குறித்த வியாக்கியான வாக்கியத்தின் பிழையற்றபாடம் இங்ஙனே கிடைத்தது. – “ இன்கவிபாடும் பரமகவிகள் — செந்தமிழ்பாடுவார் — என்னுமிவர்கள் அவதரித்தது ஓரோதேசங்களிலேயாகிலும் ஞானப்பெருமையாலே இன்னவிடத்தவரென்று நிச்சயிக்கப் போகாதிறே. ” என்று.
இவ்வாக்கியம் – ” ஆழ்வார்களிற் காட்டில் பகவத் விஷயத்தி லுண்டான அவகாஹனத்தாலே முதலாழ்வார்கள் மூவரையும் நித்யஸுரிகளோ பாதியாக நினைத்திருப்பர்கள் ” என்கிற அடுத்த கீழ்வாக்கியத்திற்கு விவரணமாயிருக்கின்றது. இதன் கருத்தாவது;– இவ்வாழ்வார்கள் வந்து திருவவதரித்தது இந்நிலத்திலே ஒரோ விடங்களிலே யாகிலும் இவர்களது ஞான மஹிமையை நோக்குங்கால், “ அடியார் நிலாகின்ற வைகுந்தமோ வையமோ நும் நிலையிடமே ” என்றாற்போலச் சங்கிக்கவேண்டும்படியான நிலைமை யாயிருக்கின்றதென்றவாறு. ”அத்ரி ஜமதக்நி பங்க்திரத வஸுநந்த ஸுநுவானவனுடைய யுகவர்ணக்ரமாவதாரமோ ?? வ்யாஸாதிவத் ஆவேசமோ? மூதுவர் கரைகண்டோர் சீரியரிலே ஒருவரோ ? முன்னம் நோற்ற அனந்தன் மேற் புண்ணியங்கள் பலித்தவரோ வென்று சங்கிப்பர்கள் ” (ஆசார்யஹ்ருதயம்.) என்று நம்மாழ்வார் திறத்திலருளிச் செய்தவாற்றை இங்கே நினைப்பது.
முதலாழ்வார்களுடைய திவ்ய ப்ரபந்தங்களுக்குப் போலவே மற்றுள்ள ஆழ்வார்களின் திவ்யப் பிரபந்தங்கட்கும் வியாக்கியான முரைத்தருளின பெரியவாச்சான்பிள்ளை, அவதாரிகைகளிலே அந்தந்த ஆழ்வார்களின் திருவவதார ஸ்தலங்களை அருளிச் செய்திருப்பாராயின், இவ்விடத்திலே ‘ முதலாழ்வார்களின் அவதார ஸ்தலம் காலப்பழமையாலே தெரியாது ‘ என்றெழுதிவைக்க ப்ரஸக்தி யாகிலுமுண்டு ; மற்ற ஆழ்வார்களின் அவதாரஸ்தலங்களைப்பற்றி ஒன்றுமருளிச் செய்யாதவர் முதலாழ்வார்களின் அவதாரஸ்தலங்களைப்பற்றி மாத்திரம் பேசத் தொடங்குவதும் காலப்பழமையாலே இன்ன விடமென்று தெரியாதென்பதும் அப்ரஸக்தமாகையாலே அச்சுப்பிழை அங்கீகரிக்கத்தக்கதே. யாமெடுத்துக் காட்டிய ஏட்டுப்பிரதிகளிற்பாடமே சாலவும் பொருந்தும். முதலாழ்வார்களின் திருவவதாரம் உண்மையில் யுகாந்தரத்திலேயாகிலும் இவர்களது சரிதமும், மற்றும் திருமழிசைப்பிரான் முதலான ஆழ்வார்களின் சரிதமும் வெளிப்பட்ட விதமாகவே இவர்களது திருவவதாரஸ்தலமும் ஸ்ரீமந்நாதமுனிகள் வழியாக வெளிப்பட்டன வென்று கண்டு கொள்க.
காலப்பழமையாலே இவர்களவதரித்த விடம் இன்னதென்று தெரியாதென்றுரைப்பதே பெரியவாச்சான்பிள்ளை திருவுள்ளமாயிடின் உபதேசரத்தினமாலையிலே “எண்ணருஞ்சீர்ப் பொய்கை முன்னோர் இவ்வுலகில் தோன்றியவூர், வண்மைமிகு கச்சி மல்லை மாமயிலை ” என்று * பொய்யிலாத மணவாள மாமுனிகள் அருளிச்செய்தேயிருக்கமாட்டார்; இதனாலும் அச்சுப்பிழை அறுதியிடத்தக்கதாம். ….. … … … *